நஞ்சன்கூடு நஞ்சுண்டையா
தேவர்களைக் காப்பதற்காக சிவபெருமான் பாற்கடலில் எழுந்த விஷத்தைக் குடித்த தலம் நஞ்சன்கூடு. மைசூரு அருகிலுள்ள இத்தலத்தில் ஸ்ரீகண்டேஸ்வரர் என்னும் திருநாமத்துடன் கர்நாடக மக்களின் குலதெய்வமாக விளங்குகிறார். இவரை நஞ்சுண்டையா என்றும் அழைக்கின்றனர். தல வரலாறு: மந்தர மலையை மத்தாக்கி, வாசுகி பாம்பினை நாணாகப் பூட்டி தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் பெறுவதற்காகப் பாற்கடலைக் கடைந்தனர். வாசுகிப்பாம்பு வலி தாளாமல் நஞ்சை உமிழ்ந்தது. தேவர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர். அபாயம் நீங்கும்வழியாக 'சிவாயநம' என்று ஈசனைச் சரணடைந்தனர். 'சம்போ மகாதேவா' என்று கரம் குவித்தனர். நம்பியவரைக் காக்கும் நமச்சிவாயம் கணப்பொழுதில் எழுந்தருளினார். விஷத்தை திவலையாக்கி குடித்தார். இதைக்கண்ட பார்வதிதேவி, தன் கணவனின் கழுத்தைக் கைகளால் பிடித்து அழுத்தினாள். நஞ்சு சிவனின் தொண்டைக் குழியிலேயே தங்கிவிட்டது. கழுத்தில் விஷம் தங்கியதால் 'நஞ்சுண்டையா' என்று பெயர் உண்டானது. ஊர் பெயர் காரணம்: கவுதமரிஷி, தேவர்களுக்கு அருளிய நஞ்சுண்ட கோலத்தில் தனக்கும் காட்சியளிக்கும்படி சிவனை வேண்டி தவமிருந்தார். சிவனும் அக்கோலத்தைக் காட்டியருளினார். கவுதமர் சிவபூஜை செய்து மகிழ்ந்தார். இறைவன் காட்சி கொடுத்த அந்த இடத்தில் அவருக்கு கோயில் அமைந்தது. அத்தலத்திற்கு 'நஞ்சன் கோடு' என்றும் இறைவனுக்கு 'நஞ்சுண்டய்யா' என்ற பெயரும் உண்டானது. இப்போது 'நஞ்சன் கூடு' என்று அழைக்கப்படுகிறது. 'ஸ்ரீகண்டேஸ்வரர்' என்றும் பெயருண்டு. அம்பிகைக்கு பர்வதாம்பாள் என்பது திருநாமம்.கன்னடர் குலதெய்வம்: கர்நாடக மக்களின் குலதெய்வமாக இவர் திகழ்கிறார். குழந்தைக்குப் பெயரிடுதல், முடிகாணிக்கை, அங்கப்பிரதட்சணம், துலாபாரம் என்று நேர்த்திக்கடன்கள் நடக்கின்றன. தங்கள் இல்லத்தில் நடைபெறும் எந்த விசேஷமானாலும் நஞ்சுண்டையாவிற்குத் தான், கன்னட மொழிபேசும் மக்கள் முதல் காணிக்கை கொடுக்கிறார்கள். விஷபயம், மரணபயம் போக்கும் விசேஷ மூர்த்தியாக இவரை போற்றி வழிபடுகின்றனர். சுகண்டித சர்க்கரை: சிவனுக்கு கழுத்தில் நஞ்சு இருப்பதால் எளிதில் ஜீரணமாகும்படி சுக்கு,நெய், சர்க்கரை ஆகிய மூன்றும் கலந்த சுகண்டித சர்க்கரை கலவையை நிவேதனமாகப் படைக்கின்றனர். துலாபாரம் கொடுப்பவர்கள், இந்த நிவேதனத்துக்காக எடைக்கு எடையாக சர்க்கரை கொடுக்கின்றனர். வாசலைப் பார்த்த நந்தி: இக்கோயிலில் கோபுரத்தை பார்த்தபடி நந்தி உள்ளது. கருங்கல்லில் வடிக்கப்பட்ட இதை தளவாய் விக்ரமாதித்தன், 1446 ல் நிர்மாணித்தார். எப்போதும் அலங்காரத்திலேயே இருப்பதால் இதற்கு 'அலங்கார நந்தி' என்று பெயர். இந்த நந்தி மூலவரை நோக்கி இல்லாமல் கோபுரத்திற்குள் நுழையும் பக்தர்களை வரவேற்கும் விதத்தில், வாசலை நோக்கி அமைந்துள்ளது.அறுபத்துமூவர்: இங்குள்ள 63 நாயன்மார் சந்நிதி விசேஷமானது. ஒவ்வொரு சந்நிதியிலும் மூவர் வீதம் வரிசையாக உள்ளனர். சிலை ஒரே மாதிரியாக இல்லாமல் அவரவருக்குரிய கருவி, ஆடை ஆபரணம், அலங்காரம் என்று மிக நேர்த்தியாக வடிக்கப்பட்டுள்ளன. நாயன்மார்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும், பெயர்களை கன்னடத்தில் மொழி பெயர்த்துள்ளனர்.நர்த்தன முருகன்: கர்நாடக கோயில்களில் முருகன் சந்நிதியை காண்பது மிக அபூர்வம். ஆனால், இந்தக் கோயிலின் சுவாமி சந்நிதியில் முருகன் காளிங்க நர்த்தன கிருஷ்ணரைப் போல காட்சியளிக்கிறார். பெயர்ப்பலகையில் சுப்பிரமணியர் என்பதைப் பார்த்தபின்னரே, முருகன் சந்நிதி என்பதை உணரமுடிகிறது. தலைமேல் ஐந்துதலை நாகம் குடைபிடிக்கிறது. பீடத்தின் அடியில் கிருஷ்ணதேவராயரின் உருவம் வடிக்கப்பட்டுள்ளது. பிரசன்ன விநாயகர்: இங்கு பிரசன்னவிநாயகர் சந்நிதி சிறப்பானது. தொடங்கும் செயல்களைத் தடையின்றி நடத்தித் தருபவர் இவர். 'பிரசன்னம்' என்பதற்கு 'அனுகூலம்' என்று பொருள். சதுர்த்தி நாளில் சந்தனக்காப்பு, வெண்ணெய் அலங்காரத்தில் இவர் காட்சி தருகிறார். சந்தனக்காப்பில் தரிசிப்போருக்கு திருமணத்தடை நீங்கும். வெண்ணெய்க் காப்பில் தரிசிக்க கல்வித்தடை அகலும். லிங்கோத்பவர், முருகேஸ்வரர், தீர்த்தேஸ்வரர் சந்நிதிகளும் உள்ளன. மேல்தளத்தில் வில்வம்: சண்டிகேஸ்வரரைத் தரிசித்து விட்டு மேலே பார்த்தால் சாளரம் வழியே வில்வமரம் தெரிகிறது. இம்மரம் எங்கிருந்து வளர்ந்திருக்கிறது என்பது புரியாத புதிராக இருக்கிறது. பெருமாள் சந்நிதியைக் கடந்ததும் மேல்தளத்திற்கு படிக்கட்டுகள் செல்கின்றன. மேல்தளத்தில் இந்த மரம் நிற்கிறது. சுதை சிற்பங்கள்: ராஜகோபுரத்தைச் சுற்றிலும் சுதை சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. சிவபெருமான், விநாயகர், முருகப்பெருமான், மகாவிஷ்ணு, பார்வதி ஆகியோர் இதில் உள்ளனர். புராணச் சிற்பங்கள் சிற்பக்கலைத்திறனுக்கு எடுத்துக்காட்டாக திகழ்கின்றன. சிறப்பம்சம்: ஹைதர்அலி நஞ்சுண்டேஸ்வரர் கோயிலுக்கு மரகதலிங்கம் ஒன்றை வழங்கியுள்ளார். சர்வ அலங்காரத்துடன் பர்வதாம்பாள் ஏராளமான நகைகளை அணிந்திருக்கிறாள். கோயிலைப் புதுப்பித்த கிருஷ்ணராஜ உடையார் தன் நான்கு மனைவியர், மகனுடன் சுவாமி சந்நதியில் காட்சிதருகிறார். கோயிலுக்கு வடக்கில் கபினிநதியும், குண்டலநதியும் காவிரியில் சங்கமமாகிறது. கபினிநதிக்கரையில் பரசுராமருக்கு கோயில் உள்ளது. அமர்ந்தநிலையில் உள்ள பெரிய சிவன் சிலை கோயிலுக்குச் செல்லும் வழியில் உள்ளது. கோயிலின் திருமதிலைச் சுற்றி அங்கபிரதட்சணம் நடந்து கொண்டே இருக்கிறது. மூலவருக்கு எதிரில் உள்ள நந்தி விலகி இருக்கிறது. சுவாமிக்கும் அம்பாளுக்கும் நடுவில் 'தேவதேவன்' என்னும் பெருமாள் சந்நிதி உள்ளது. சோமவார விரதம் இருந்து நஞ்சுண்டேஸ்வரரை மக்கள் தரிசிக்கின்றனர். சந்திரதிசை, சந்திர புத்தி நடப்பவர்கள் இவரைத் தரிசித்தால் நன்மை கிடைக்கும். பவுர்ணமி, ஞாயிறு, திங்கள் கிழமைகளில் மதியம் நடை சாத்துவது கிடையாது. காரசூரி நந்திராஜா, திவான் பூர்ணையா இருவரும் பழமையான இக்கோயிலை விரிவுபடுத்தியதில் குறிப்பிடத்தக்கவர்கள். 15ம் நூற்றாண்டில் ராகவேந்திரர் மாத்வ மடத்தை நஞ்சன்கூட்டில் நிறுவியுள்ளார்.திருவிழா: பங்குனியில் பிரம்மோற்ஸவம், மகாசிவராத்திரி, கார்த்திகை சோமவாரம் திறக்கும்நேரம்: காலை6-பகல்1மணி, மாலை 4- இரவு9 மணிஇருப்பிடம்: மைசூருவுக்கு தெற்கே 18 கி.மீ., தூரம். பஸ் உண்டு. போன்: 08221- 226 245