உள்ளூர் செய்திகள்

காவி உடையில் பெருமாள்!

காவி உடை அணியும் சென்றாயப்பெருமாள் கோவில் திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகேயுள்ள கோட்டைப்பட்டியில் உள்ளது.தல வரலாறு: கிருஷ்ண தேவராயர் வம்சாவளியைச் சேர்ந்த ஆதிசென்னம்ம நாயக்கர், என்ற பெருமாள் பக்தர் இங்குள்ள குன்றில் பசுக்களை மேய்ப்பார். ஒருமுறை ஒரு சிறுவன் மேய்ந்த பசுவின் மடியில் இருந்து பால் பருகிக் கொண்டிருந்ததைக் கண்டார். அந்த சிறுவன் அவரை அழைத்து பெருமாளாக வடிவம் காட்டினார். தான் அந்த குன்றில் இருக்க விரும்புவதாகவும், அங்கு தனக்கு கோவில் எழுப்பும்படியும் உத்தரவிட்டார். அதன்படி, பக்தர் இங்கு அவருக்கு கோவில் எழுப்பினார். பக்தர்களுக்கு ஓடிச் சென்று அருள்புரிபவர் என்பதால் சுவாமிக்கு 'சென்றாயப்பெருமாள்' என்ற திருநாமம் அமைந்தது.மீசை பெருமாள்: சிறுவனாக வந்ததன் அடிப்படையில் பிரதான சன்னிதியிலுள்ள சென்றாயப் பெருமாளை, பாலகராகவே கருதி வழிபடுவதால், உடன் தாயார்களும், சங்கு, சக்கரமும் கிடையாது. முறுக்கு மீசை, தாடியுடன், இரு கைகளையும் கூப்பி வணங்கியபடி இருப்பது வித்தியாசமான அமைப்பு. உற்சவர் பெருமாள் மட்டுமே ருக்மிணி, சத்யபாமாவுடன் காட்சி தருகிறார். கிருஷ்ண மேடை: 500 படிகளுடன் அமைந்த மலை மீது, 48 தூண்களுடன் அமைந்த கோவில் இது. சென்றாயர் சன்னிதிக்கு வலப்புறம், சுவாமி பசுவிடம் பால் குடித்த இடமான சித்திர ரத மண்டபத்தில், ஒரு மேடை உள்ளது. பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற இந்த மேடையின் இரு மூலைகளில் தங்கள் கைகளை வைத்து வழிபடுகின்றனர். கைகள் தானாகவே இணைந்தால் வேண்டுதல் விரைவில் நிறைவேறும் என நம்புகின்றனர்.விசேஷ திருவிழா: ஒரு வருடம் விட்டு மறு வருடம், பங்குனி மாதத்தில் இங்கு மூன்று நாள் விழா நடக்கிறது. பங்குனி நான்காம் வெள்ளியன்று இரவில் சென்றாயர், மலையில் இருந்து கீழே செல்வார். அங்கு அவருக்கு விசேஷ அபிஷேக, பூஜைகள் நடக்கும். இந்த மூன்று நாட்களும் தேவராட்டம் பிரதான இடம் பிடிக்கும். சிவன், பிரம்மாவின் தலையை கிள்ளியபோது, அது சிவன் கையிலேயே ஒட்டிக் கொண்டது. தலையை விடுவிக்க சிவன் இந்திரலோகம் சென்றார். அப்போது பெருமாள் பாவாடை, சட்டை, பாசி அணிந்து, முகத்தில் தாடியுடன், கையில் ஒரு மேளத்துடன் கோமாளி போல இந்திரசபைக்கு சென்றார். அங்கு அவர்கள் சிரிக்கும்படியாக நடனமாடினார். சிவன் கையில் இருந்த பிரம்மாவின் தலை சிரிக்கவே கீழே விழுந்து விட்டது. இவ்வாறு, பெருமாள் ஆடிய நடனமே தேவராட்டம் என்கின்றனர். சனிக்கிழமையன்று ருக்மிணி, சத்யபாமாவுடன் திருக்கல்யாணம் நடக்கும். அப்போது, பெண்கள் நலுங்குப்பாட்டு படிப்பர். விழாவின் கடைசி நாளில், பக்தைகள் சட்டையின்றி, வெண்புடவை மட்டும் அணிந்து மஞ்சள் நீரை சுவாமி மீது தெளித்து விளையாடுவர். அலங்கார பிரியருக்கு காவி உடை: மனிதர்கள் வாழும் காலத்தில் எவ்வளவு செல்வாக்குடனும், வசதியாகவும், ஆடம்பரமாகவும் இருந்தாலும், வாழ்க்கைக்குப் பின் அவர்கள் கொண்டு செல்வது ஏதுமில்லை. இதை உணர்த்தும் விதமாக பங்குனி விழாவில் கடைசி நாள் வைபவம் நடக்கும். அப்போது, அலங்காரப் பிரியரான பெருமாளை ஒரு குடிசையில் எழுந்தருளச் செய்து, அனைத்து ஆபரணங்களையும் களைந்து விட்டு காவியுடையை அணிவிப்பர் அதனுடனேயே அவர் சன்னிதிக்குச் சென்று விடுவார்.இருப்பிடம்: திண்டுக்கல் - வத்தலக்குண்டு 35 கி.மீ., இங்கிருந்து பிரியும் சாலையில் 3 கி.மீ., தூரத்தில் கோட்டைப்பட்டி கோவில்.திறக்கும் நேரம்: காலை 8.00 - இரவு 7.00 மணி, சனிக்கிழமைகளில் காலை 5.00-இரவு 9.00 மணி.அலைபேசி: 87605 98884.