மழை வளம் தா மாமலை முருகா!
UPDATED : ஜூலை 14, 2017 | ADDED : ஜூலை 14, 2017
ஜூலை 19 - ஆடி கார்த்திகைமழை பெய்து நாட்டில் வளம் பெருக, ஈரோடு அருகிலுள்ள திண்டல் மலை முருகன் கோயிலுக்கு ஆடிக்கார்த்திகையன்று சென்று வரலாம்.தல வரலாறு: சிவபெருமான் இமயமலையை வில்லாக வளைத்து, அசுரர்களை அழிக்க முற்பட்ட போது அதிலிருந்து தெறித்து விழுந்த சிறு துண்டே திண்டல் மலை. ஞானப்பழம் கிடைக்காமல் பெற்றோரிடம் கோபப்பட்ட முருகன் பழநியில் எழுந்தருளினார். இதையடுத்து பல மலைகளிலும் முருகன் கோயில்கள் உருவாயின. இங்கும் எழுந்தருளியுள்ளார். 'திண்டல்' என்றால் பருமன். பருமனான மலை என்ற பொருளிலும் திண்டல் என்ற பெயர் ஏற்பட்டது.தலசிறப்பு: சென்னிமலைத் தலப் புராணப்பாடலில் 'கன்னல் அருட் கனககிரி கதித்திண்டல் கிரிவேலர்' என்ற வரி உள்ளது. திண்டல் முருகனுக்கு குழந்தை வேலாயுத சுவாமி, குமார வேலாயுதசுவாமி என்ற பெயர்கள் உள்ளன. 'வெல்' என்ற சொல்லே 'வேல்' ஆயிற்று. 'வெல்லும்' தன்மையுடையது 'வேல்'. முருகப்பெருமானே தன் வேலைப் புகழ்ந்து பாராட்டுவதாகத் திருமுருகாற்றுப்படை கூறுகிறது. வேல் என்பது ஆயுதம் மட்டுமல்ல, வணக்கத்திற்கு உரியதும் ஆகும். வேலுக்கும் மயிலுக்கும் மாலை சாத்தி வழிபடுவதால் எண்ணிய செயல் நிறைவேறும்.தன்னாசி குகை: முருகன் கருவறையின் பின்புறம் மலைச்சரிவில் தன்னாசி குகை உள்ளது. இங்கு வேலாயுத சுவாமியின் பழைய மூலவர் விக்ரகம் வைக்கப்பட்டுள்ளது. கார்த்திகை தீபத்தன்று முதல் பூஜை தன்னாசி குகையில் நடக்கிறது. இங்கு நாகர் உருவமும் பொறிக்கப்பட்டுள்ளது. நாகதோஷம் உள்ளவர்கள் இங்கு பால், முட்டை, பச்சரிசி, தேங்காய், பழம், சுருட்டு வைத்து வழிபடுகின்றனர். அலைபாயும் மனம் அடங்க இந்த குகையில் அமர்ந்து தியானம் செய்யலாம். பார்வை குறைபாடு உள்ளவர்களும் சுகப்பிரசவம் ஆவதற்கும் விவசாயம் செழிப்பதற்கும் திண்டல் மலை முருகனுக்கு பால் அபிஷேகம் செய்கின்றனர். தலை ஆடி (மாதப்பிறப்பு), ஆடிப்பெருக்கு, ஆடி வெள்ளிகள், ஆடிக்கார்த்திகை, ஆவணி அவிட்டம் ஆகிய நாட்களில் சிறப்பு பூஜை நடக்கும்.மழை வழிபாடு: இங்குள்ள இடும்பன் மூலம் முருகனிடம் கோரிக்கை வைத்தால் மழை பெய்யும் என்ற நம்பிக்கை உள்ளது. ஒரு காலத்தில் பூந்துறை எனப்பட்ட இப்பகுதியில் பஞ்சம் ஏற்பட்ட போது வேளாளர்கள் ஒன்று கூடி இடும்பனை வேண்டி அவர் மூலம் நாட்டில் மழை பெய்ய முருகனிடம் வேண்டிக் கொண்டனர். வேண்டுதலுக்கு பின் மழை பெய்து வளம் ஏற்பட்டது. தமிழகத்தில் மழை வளம் குறைந்துள்ள இந்த நேரத்தில் ஒவ்வொருவரும் இந்த வேண்டுதலை முருகனிடம் வைக்கலாம்.எப்படி செல்வது?ஈரோடு- பெருந்துறை சாலையில் 8 கி.மீ., நேரம்: காலை 6:00-12:30 மணி; மாலை 4:00 8:30 மணிதொடர்புக்கு: 94439 44640