ஆற்றில் கிடைத்த அம்பிகை
திருமணத் தடை, புத்திர தோஷம் தீர பரிகாரம், நேர்த்திக்கடன் என பணம் செலவழிக்க வேண்டாம். செவ்வரளி மாலை ஒன்றை சாத்தினால் போதும்; அருள்புரியக் காத்திருக்கிறாள் பேராத்து செல்வி அம்மன். ஆற்றின் பெயரில் அம்பிகையா என யோசிக்கிறீர்களா... ஆமாம் திருநெல்வேலி வண்ணார்பேட்டை தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள இக்கோயில் பற்றி தெரிந்து கொள்வோம் வாருங்கள்.பக்தர் ஒருவரின் கனவில் ஆற்றுக்குள் சிலை வடிவில் தான் கிடப்பதாக அம்மன் தெரிவித்தாள். வெள்ளம் ஓடிய நிலையிலும் அதைக் கண்டுபிடித்து பிரதிஷ்டை செய்தார். அந்த இடத்தில் தற்போது கோயில் உள்ளது. பெரிய ஆற்றில் கிடைத்த அம்பிகை என்னும் பொருளில் பேராத்து செல்வி அம்மன் என அழைத்தனர். தெற்கில் இருந்து வடக்காக ஆறு உத்திரவாகினியாக இங்கு ஓடுவது சிறப்பு. இதில் நீராடிய மன்னர் ஒருவருக்கு குஷ்டம் தீர்ந்ததால் 'குட்டத்துறை தீர்த்தம்' எனப்படுகிறது. நவராத்திரியின் போது செல்வியம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி அசுரனை வதம் செய்வாள். திருமண யோகம், குழந்தைப் பேறுக்காக 54 விரலி மஞ்சள் கோர்த்த மாலையை 21 வாரம் சாத்துகின்றனர். விருப்பம் நிறைவேற மாவிளக்கு, எலுமிச்சை தீபமேற்றுகின்றனர். கண் குறைபாடு தீர கண்மலர் காணிக்கை தருகின்றனர். கன்னி விநாயகர், சுயம்புலிங்கம், காலபைரவர், பேச்சியம்மன் சன்னதிகள் உள்ளன.எப்படி செல்வது: திருநெல்வேலி வண்ணார்பேட்டை வழியாக தாமிரபரணி ஆற்றுக்குச் செல்லும் வழியில் கோயில் உள்ளது.விசேஷ நாள்: சித்திரை மூன்றாம் செவ்வாய் கொடைவிழா ஆடிச்செவ்வாய்/ வெள்ளி நவராத்திரி, தை வருஷாபிஷேகம்நேரம்: காலை 6:00 - இரவு 8:30 மணிதொடர்புக்கு: 94866 66441அருகிலுள்ள தலம்: உச்சிஷ்ட விநாயகர் கோயில் 1 கி.மீ.,நேரம்: காலை 8:00 -- 1:30 மணி; மாலை 6:00 -- 7:30 மணிதொடர்புக்கு: 94433 68596