வந்த வழியே திரும்புவதில்லை எங்கும் இல்லாத சிறப்பு தரிசன விதி
கும்பகோணம் அருகிலுள்ள திருவிடைமருதூரில் சிவன் மகாலிங்கசுவாமி என்ற திருநாமத்துடன் கோவில் கொண்டிருக்கிறார். இக்கோவிலில் நுழைந்த வழியில் திரும்பாமல், பக்தர்கள் வேறு வழியாகச் செல்லும் சிறப்பு தரிசன விதி பின்பற்றப்படுகிறது. தல வரலாறு: அர்ஜுனம் என்றால் மருதமரம். மருதமரத்தை தல விருட்சமாக கொண்ட தலங்கள் அர்ஜுனத் தலங்கள் என்றழைக்கப்படும். வடக்கிலுள்ள ஸ்ரீசைலத்தை மல்லிகார்ஜுனம் என்றும், தெற்கில் திருநெல்வேலி அருகிலுள்ள திருப்புடைமருதூரை ஜுடார்ஜுனம் என்றும், இவ்விரு தலங்களுக்கும் மத்தியில் அமைந்ததால் இத்தலம் மத்தியார்ஜுனம் என்றும் வழங்கப்படுகிறது. அம்பிகை, அகத்தியர், மகரிஷிகள், முனிவர்கள் என பலரும் வழிபட்டு பேறு பெற்ற பழமையான தலம் இது. இங்கு சிவன் மகாலிங்க சுவாமியாகவும், அம்மன் பெருநல முலையம்மை என்ற பெயரிலும் அருள்பாலிக்கின்றனர். இங்கு ஏழு பிரகாரங்கள் உள்ளன. லிங்க வடிவ நட்சத்திரம்: சந்திரன் தனது குருவான பிரகஸ்பதியின் மனைவி மீது ஆசை கொண்டான். இதனால் அவனுக்கு தோஷம் உண்டானது. தோஷம் நீங்க இத்தலத்தில் சிவனை வேண்டி தவமிருந்தான். அவனுக்கு இரங்கிய சுவாமி விமோசனம் அளித்தார். அப்போது சந்திரனின் மனைவியரான 27 நட்சத்திரங்களும் இத்தலத்தில் 27 சிவ லிங்கங்களில் ஐக்கியம் அடைந்தனர். இந்த லிங்கங்களுக்கு பக்தர்கள் பிறந்தநாளில் நெய் விளக்கேற்றி வழிபடுகின்றனர். உப்பு மிளகு வழிபாடு: வரகுணபாண்டிய மன்னன் பிரம்மஹத்தி என்னும் கொலைப்பாவம் தீர சுவாமியை வழிபட்டான். சிவன் அவனை தோஷத்தில் இருந்து விடுவித்தார். இந்த பிரம்மஹத்திக்கு சிவன் சன்னிதியின் இரண்டாம் கோபுரத்தில் சிலை உள்ளது. அறியாமல் பாவம் செய்த பாவம் நீங்க இங்கு உப்பு, மிளகிட்டு வழிபடுகின்றனர். இத்தலத்தில் அம்பிகையுடன் தட்சிணாமூர்த்தி வீற்றிருக்கிறார். இவரை 'சாம்ப தட்சிணாமூர்த்தி' என்பர். சுவாமி சன்னிதியின் முன் மண்டபத்தில் சுதை சிற்பமாக இவரை தரிசிக்கலாம்.குழந்தை பாக்கியம்: சம்பந்தர் இங்கு வந்த போது, வழியெல்லாம் சிவலிங்கமாக தோன்றியது. எனவே மண்ணில் கால் பதிக்க அஞ்சினார். அப்போது அம்பிகை சம்பந்தரை இடுப்பில் தூக்கிக் கொண்டு அழைத்து வந்தாள். இந்த அம்மனுக்கு பிரகாரத்தில் சன்னிதி உள்ளது. இவளை 'அன்பிற்பிரியாள்' என அழைக்கின்றனர். குழந்தை பாக்கியம் பெற வேண்டிக் கொள்கின்றனர்.மகனாக வந்த சிவன்: பட்டினத்தாருக்கு இத்தலத்து சிவனே மகனாகப் பிறந்து, மருதவாணர் என்ற பெயரில் வளர்ந்தார். அவர் மூலமாக உலகம் நிலையற்றது என்பதை உணர்ந்த பட்டினத்தார் துறவியானார். முக்தி வேண்டி இத்தலத்தில் தங்கி வழிபட்டு வந்தார். அப்போது பத்திரகிரியார் என்னும் மன்னர் தன் பதவியைத் துறந்து, பட்டினத்தாரை குருவாக ஏற்றார். கிழக்கு கோபுரத்தின் கீழ் பட்டினத்தாருக்கும், மேற்கு கோபுரத்தின் கீழ் பத்திரகிரியாருக்கும் சன்னிதி உள்ளது. வழிபாட்டு முறை: இந்தக்கோவிலில் எந்த கோபுர வாசல் வழியில் நுழைந்தோமோ, அதே வழியில் திரும்பக் கூடாது என்ற நியதி பின்பற்றப்படுகிறது. சிவன் சன்னிதி எதிரிலுள்ள கோபுரம் வழியாக நுழைந்து படித்துறை விநாயகரை வணங்கி, சிவன், அம்மன் சன்னிதிக்குச் சென்று, பின்பு மூகாம்பிகை சன்னிதியுடன் தரிசனத்தை முடிக்க வேண்டும். வேறு வாசல் வழியாக வெளியேற வேண்டும். ஏதேனும் பீடைகள் இருந்தால், அது நுழைவு வாசலில் நின்று கொள்ளும். கோவிலை விட்டு வேறு வாசல் வழியாக வெளியேறினால் அது தொடராது. பக்தர்களின் பாவம், கர்ம வினைகள் தீர்வதற்காக இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. இங்குள்ள தீர்த்தம் காருண்யதீர்த்தம் எனப்படுகிறது. இருப்பிடம்: கும்பகோணம் - மயிலாடுதுறை சாலையில் 10 கி.மீ., நேரம்: காலை 5.30 - மதியம் 12.00 மணி, மாலை 4.30 - இரவு 9.00 மணி.தொலைபேசி: 0435 - 246 0660.