உள்ளூர் செய்திகள்

கோயில் ஒன்று... மூலவர் இரண்டு

கர்நாடக மாநிலம் ஹளபேடு ஹோய்சாளேஸ்வரர் கோயில் சிற்பக்கலையின் மணிமகுடமாகத் திகழ்கிறது. ஹோய்சாள மன்னர்கள் கட்டிய இக்கோயிலில் ராஜா, ராணி பெயர்களில் இரண்டு மூலவர்கள் உள்ளன. ஹோய்சாள மன்னர்கள், தங்களை துவாரகையைச் சேர்ந்தவர்கள் எனக் குறிப்பிட்டாலும் பகவான் கிருஷ்ணரை வழிபடாமல் சமண மதத்தை பின்பற்றினர். மகான் ராமானுஜர் காலத்தில் மீண்டும் தாய்மதத்திற்கு திரும்பினர். அதன் பின் சிறியதும், பெரியதுமாக சிவன், மகாவிஷ்ணுவுக்கு 150 கோயில்கள் கட்டினர். தலைநகராக இருந்த ஹளபேடுவில் தங்களின் வம்சத்தின் பெயரால் கட்டிய ஹோய்சாளேஸ்வரர் சிவன் கோயில் சிறப்பு மிக்கதாகும். 1127ல் தொடங்கிய கோயில் கட்டும்பணி 1207ல் (80 ஆண்டுகள்) முடிந்தது. மன்னர் விஷ்ணுவர்த்தனின் அமைச்சர் 'கெட்டுமல்லா' இந்த பணியை நிறைவேற்றினார். கோயிலுக்கு வெளியில் விநாயகர் காட்சியளிக்கிறார். இவரது வலதுகை அந்நியப் படையெடுப்பில் (மாலிக்காபூர் படையெடுப்பு) உடைக்கப்பட்டது. கிரீடமும், யாளியால் ஆன திருவாட்சியும் நுட்பமான வேலைப்பாடு கொண்டவை. கால்கள் இரண்டும் மடித்த நிலையில் உள்ளன. வெயில், மழை பாராமல் வெயிலுகந்த விநாயகராக இருக்கிறார். கோயிலில் இரண்டு பிரதான சன்னதிகள் உள்ளன. முதல் சன்னதியில் ஹோய்சாளேஸ்வரர் என்னும் பெயருடன் சிவன் இருக்கிறார். சன்னதியின் முன்புள்ள நவரங்க மண்டபம் வேலைப்பாடு மிக்கது. ஹோய்சாள மன்னர் விஷ்ணுவர்த்தனனின் மனைவி சாந்தளாதேவி. இந்த ராணியின் பெயரால், 'சாந்தளேஸ்வரர்' என்னும் சன்னதி உள்ளது. இரு சன்னதிக்கும் கிழக்கு நோக்கி வாசல் இருந்தாலும், வடக்கு, தெற்காகவும் வாசல்கள் உண்டு. பக்தர்களுக்கு தீர்த்தம் பிரசாதமாக தரப்படுகிறது. சாந்தளேஸ்வரர் சன்னதியில் உற்ஸவர் சிலைகள் உள்ளன. மகாகாளர், நந்தி, என்னும் துவாரபாலகர்கள் காவல் புரிகின்றனர். இதில் சாந்தளேஸ்வரர் முன் உள்ள துவாரபாலகர்கள், கையில் திரிசூலம், உடுக்கை ஏந்தி சிவாம்சத்துடன் உள்ளனர். ஹோய்சாளேஸ்வரர், சாந்தளேஸ்வரர் சன்னதிக்கு நேராக நந்தி மண்டபங்கள் உள்ளன. நந்தியும், மண்டபத்தைச் சுற்றி கலைநயம் மிக்க துாண்களும் உள்ளன. யானை, சிங்கம், குதிரை வீரர்கள், ஹிரண்யாசுர வதம், கோவர்த்தனகிரி கிருஷ்ணர், ராம லட்சுமணர், தேரோட்டும் கிருஷ்ணர் என ராமாயணம், மகாபாரத சிற்பங்கள் பிரகாரம் முழுவதும் செதுக்கப்பட்டுள்ளன. தொல்லியல் துறையின்கீழ் உள்ள இக்கோயிலில் அந்நியப் படையெடுப்பின் போது சிதைந்த சிற்பங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. எப்படி செல்வது: மைசூருவில் இருந்து 120 கி.மீ., துாரத்தில் ஹசன். அங்கிருந்து 39 கி.மீ.,விசேஷ நாள்: மஹாசிவராத்திரி திருக்கார்த்திகையன்று தேர்தொடர்புக்கு: 098803 19949நேரம்: காலை 6:00 - மாலை 6:00 மணிஅருகிலுள்ள தலம்: பேளூர் சென்னகேஸ்வரர் கோயில் 17 கி.மீ.,நேரம்: காலை 7:30 - 1:00 மணி; மாலை 3:30 - 7:30 மணிதொடர்புக்கு: 08177 - 222 218