தீவினை தீர...
தெரிந்தோ தெரியாமலோ செய்த தீவினைகள் யாவும் பஞ்சாய் பறக்கணுமா வாங்க திருச்சி திருவானைக்காவலில் நடக்கும் பஞ்சபிரகார வைபவத்தில் கலந்து கொள்ளுங்கள். பலன் பெறுவீர்கள்.பஞ்ச பூத தலங்களில் நீர் தலம் திருவானைக்காவல். இக்கோயிலில் யானையும் சிலந்தியும் வழிபாடு செய்து முன்வினை சாபம் பெற்றது. மேற்கு பார்த்து அருள் செய்யும் சுவாமியின் திருநாமம் ஜம்புகேஸ்வரர். கிழக்கு முகமாக அருளும் அம்பிகையின் திருநாமம் அகிலாண்டேஸ்வரி. தேவார மூவராகிய சம்பந்தர், அப்பர், சுந்தரர், ஐயடிகள் காடவர்கோன், தாயுமானவர், அருணகிரிநாதர், காளமேகப்புலவர் போன்றோரால் பாடல்பெற்ற தலம் இது. இங்குள்ள சுவாமியை திருமால், ராமர், கோட்செங்கசோழன் போன்றோரும் வழிபாடு செய்துள்ளனர். இங்கு திருக்கல்யாண உற்ஸவம் நடைபெறுவதில்லை.ஒரு சமயம் பிரம்மா படைத்த பெண்ணின் மீது அவரே ஆசைப்பட்டார். இதனால் ஸ்திரீதோஷம் ஏற்பட அதிலிருந்து மீள சிவபெருமானை வேண்டினார். நாவல் மரங்கள் நிறைந்த வனத்தில் தவம் செய்தால் இத்தோஷம் நீங்கும் என்றார் சிவபெருமான். இத்தலத்தில் அவராலே உருவாக்கப்பெற்ற தீர்த்தக்கரையில் தவம் செய்தார். சுவாமி, அம்பாள் இருவரும் மாறிமாறி வேடம் அணிந்து பிரம்மாவிற்கு அருள்செய்தனர். அதனை நினைவூட்டும் விதமாக பிரம்மோற்ஸவ விழாவில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது. இதில் நாமும் கலந்து கொண்டு பஞ்சமூர்த்தியுடன் திருநீற்று மதில்சுவரை வலம் வந்தால் தீவினைகள் தீரும். சிற்ப வேலைபாடுகள் நிறைந்த இக்கோயிலில் மண்டபத்தில் அமைந்துள்ள கொடுங்கைகள், மூலலிங்கம், பஞ்ச முகலிங்கம், ஏகபாத மூர்த்தி போன்றவை பார்க்க வேண்டியவை. அம்பாள் சன்னதியில் விநாயகரையும், முருகரையும் பிரதிஷ்டை செய்துள்ளார் ஆதிசங்கரர். அம்பாளின் காதணியை தரிசித்து, வணங்குபவர்களுக்கு செல்வம் பெருகும்.எப்படி செல்வது : திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 4 கி.மீ., விசேஷ நாள்: ஆடி வெள்ளி தைதெப்பம், மாசி மஹாசிவராத்திரி பங்குனி தேர் தொடர்புக்கு: 0431 - 223 0257நேரம்: காலை 6:00 - 1:00 மணி; மாலை 4:00 - 9:00 மணிஅருகிலுள்ள தலம்: ஸ்ரீரங்கம் பெருமாள் கோயில் 2 கி.மீ., நேரம்: காலை 6:00 - 1:00 மணி; மாலை 4:00 - 9:00 மணிதொடர்புக்கு: 0431 - 243 2246