திருப்பம் தரும் திரிபங்கிநாதர்
நின்ற அமர்ந்த சயன கோலத்தில் காட்சி தரும் பெருமாளை வைணவத்தலங்களில் தரிசிக்கலாம். ஆனால் அவரின் அபூர்வ வடிவங்களில் ஒன்றான திரிபங்கி கோலத்தில் காட்சி தரும் கிருஷ்ணர் கோயில் ஒன்று கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ளது. அவரின் அருளை பெற செல்வோமா. அறம் பொருள் இன்பம் என்னும் முப்பொருளை குறிக்கும் கிருஷ்ணரின் வடிவத்தை திரிபங்கி என்பர். (திரி - மூன்று,பங்கி - வளைவு) ஒரு திருவடியை நேரே வைத்து மறுதிருவடியை மாற்றி வைத்திருப்பது ஒரு வளைவு. இடுப்பை வளைத்து நிற்பது மற்றொரு வளைவு. கழுத்தை சாய்த்து குழல் ஊதுவது மூன்றாவது வளைவு. இந்த மூன்று வளைவுகளையும் உடைய கிருஷ்ணரை திரிபங்கிநாதர் என சிறப்பு நாமத்தில் அழைப்பர். இந்த தோற்றத்துடன் ஓசூர் அருகே ரங்கோ பண்டித அக்ரஹாரம் என்னும் இடத்தில் பக்தர்களுக்கு அருள் செய்கிறார். இங்கு இவரின் திருநாமம் ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபால சுவாமி. இம்மூர்த்தத்தை சப்த ரிஷிகளில் ஒருவரான வசிஷ்டர் பிரதிஷ்டை செய்து பூஜித்துள்ளார் என்கிறது கல்வெட்டு. கருவறையில் சங்கு சக்கரதாரியாய் புல்லாங்குழல் ஊதியவாறு நான்கு கரங்களுடன் காட்சி தரும் இவருக்கு பின்னால் ஐந்துதலை நாகம் குடைபிடித்தும் அதற்கு மேலே அழகிய பிரபையின் வடிவமைப்பும், கோமாதா அவரின் கால்களை தரிசித்த வண்ணமும் அமைந்தவாறு ஒரே சாளக்கிரமக்கல்லினால் உருவாக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. இத்தோற்றத்தை வேறு எங்கும் காண முடியாது. இங்கு ஸ்ரீரங்கத்தை போல ஏழு பிரகாரங்கள் இருந்தது என்றும் காலச்சூழல் மற்றும் எதிரிகளால் ஆறு பிரகாரங்கள் சிதலமடைந்து விட்டது என கூறுவர். இக்கோயிலில் சோழர்காலத்தில் சதுர்வேதங்கள் சொல்ல இரண்டாயிரம் பிராமணக்குடும்பங்களுக்கு மேல் இங்கு இருந்தார்கள் என மைசூர் சம்ராஜ்ய வரலாற்றில் குறிப்புக்கள் உள்ளன. வடமொழி தோத்திரங்கள் போற்றும் திரிபங்கி லலிதாகரனுக்கு ரோகிணி நட்சத்திரத்திலும்,சனிக்கிழமை தோறும் விசேஷ வழிபாடு நடக்கிறது. சகலதோஷ நிவர்த்திக்காக இங்கு கோபூஜை நடத்தப்பெறுவது விசேஷம். ஆழ்வாரில் ஒருவரான பெரியாழ்வார் திரிபங்கி நாதரை வழிபடுபவர்களுக்கு முப்பொருளும் கைகூடும் என்கிறார். ஒரு முறை இக்கோயிலுக்கு சென்று வந்தால் திருப்பம் நிறைந்த திருப்தியான வாழ்வு வாழலாம் என்பதில் சந்தேகமில்லை. எப்படி செல்வது: ஓசூர் பஸ் ஸ்டாண்டில் இருந்து 10 கி.மீ., விசேஷ நாள்: கிருஷ்ண ஜெயந்தி புரட்டாசி சனிக்கிழமைநேரம்: காலை 7:00 - 12:00 மணி: மாலை 5:00 - 8:00 மணிதொடர்புக்கு: 99407 93469அருகிலுள்ள தலம்: கல்யாண வெங்கடேஸ்வரர் கோயில் 3 கி.மீ., நேரம்: காலை 7:00 - 12:00 மணி: மாலை 5:00 - 8:00 மணிதொடர்புக்கு: 80720 66842