உள்ளூர் செய்திகள்

திட்டங்களில் வெற்றி பெற வேண்டுமா? குன்றக்குடி குமரனை வணங்குங்க!

“குன்னக்குடிக்கு காவடி எடுத்தால் வேண்டுமானால், உன் முயற்சி பலிக்கிறதா என பார்க்கலாம்” என்று பேச்சு வழக்கில் கிராமங்களில் சொல்வதுண்டு. குன்றக்குடி முருகனுக்கு காவடி எடுத்தால், செயல்படுத்த முடியாத திட்டங்களையும் கூட செயல்படுத்தி வெற்றி பெறலாம் என்பதன் அடிப்படையில் இப்படி சொல்வதுண்டு. இந்தக் கோவில் சிவகங்கை மாவட்டத்தில் இருக்கிறது. தல வரலாறு: தேவர்களை பழிவாங்கும் நோக்கத்துடன் அசுரர்கள் முருகனின் வாகனமான மயிலிடம் சென்றனர். பிரம்மாவின் வாகனமான அன்னமும், திருமாலின் வாகனமான கருடனும் உன்னை (மயிலை) விடவும் வேகமாக பறக்கக் கூடியவர்கள் என்று பெருமை பேசியதாகச் சொல்லி குழப்பத்தை ஏற்படுத்தினர். இது கேட்ட மயில் கோபத்தில், அன்னத்தையும், கருடனையும் தன் அளப்பரிய சக்தியைப் பயன்படுத்தி விழுங்கி விட்டது. பிரம்மாவும், திருமாலும் முருகனிடம் முறையிட அவர் அவற்றை மீட்டுக் கொடுத்தார். பின்பு மயில் செய்த குற்றத்திற்கு தண்டனையாக பூலோகத்தில் மலையாக மாறும்படி சபித்தார். அந்த மயில் 'அரச வனம்' என்னும் குன்றக்குடியில் மலையாக நின்று, மீண்டும் முருகனின் வாகனமாக மாற தவமிருந்தது. அது கண்டு இரங்கிய முருகனும் மயிலை மன்னித்து ஏற்றார். அந்த இடத்திலேயே 'சண்முகநாதர்' என்னும் பெயருடன் எழுந்தருளினார். அந்த மலையில் கோவில் எழுப்பப்பட்டது. ஆறுமுகப் பெருமான்: கருவறையில் சுவாமி ஆறுமுகத்தோடும், பன்னிரண்டு கைகளோடும் கம்பீரமாக காட்சிஅளிக்கிறார். முருகன், வள்ளி, தெய்வானை மூவரும் தனித்தனி மயில்களில் அமர்ந்திருப்பது சிறப்பு. சன்னிதி அனைத்தும் குடைவரைக் கோவிலாக அமைந்துள்ளன. மயிலே மலையாக இருந்து தவம் செய்ததால் குன்றக்குடிக்கு மயில்மலை என்றும் பெயருண்டு. நோயால் அவதிப்பட்ட மருது மன்னர் குன்றக்குடி முருகனின் அருளால் குணமடைந்தார். அதற்கு நன்றிக்கடனாக இங்கு திருப்பணி செய்தார். காவடி வழிபாடு: காவடி வழிபாட்டிற்கு இத்தலம் புகழ்பெற்றது. 'குன்றக்குடிக்கு காவடி எடுத்தாலும் நடக்காது' என்னும் பழமொழி மக்கள் மத்தியில் வழங்கப்படுகிறது. குன்றக்குடிக்கு காவடி எடுத்தால் நடக்காததும் நடந்து விடும் என்பதை எதிர்மறையாக இந்தப் பழமொழி உணர்த்துகிறது. இருப்பிடம் : மதுரை -காரைக்குடி 72 கி.மீ, இங்கிருந்து 10 கி.மீ., தூரத்தில் குன்றக்குடி.திறக்கும் நேரம்: காலை 6.00 - 11.00, மாலை 4.00 இரவு 8.00 மணி. தொலைபேசி: 04577 - 264 227.