உள்ளூர் செய்திகள்

மாலை சூடும் மணநாள் வரப்பிள்ளை சுவாமியை வணங்குங்க!

திருமணத்தடை நீக்கி சிறந்த வரன் அமைய அருள்பாலிக்கும், 'மாப்பிள்ளை சுவாமி' திருவாரூர் மாவட்டம் திருவீழிமிழலையில் அருள்பாலிக்கிறார்.தல வரலாறு: மகாவிஷ்ணுவின் சக்ராயுதத்தை, குழந்தையாக இருந்த விநாயகர் வாங்கினார். அதை வைத்து விளையாடிக் கொண்டிருந்த அவர் திடீரென விழுங்கி விட்டார். இழந்த சக்கரம் மீண்டும் கிடைக்க, சிவனிடம் வேண்டினார். ஆயிரம் தாமரை மலர்கள் கொண்டு வந்து அவருக்கு அர்ச்சனை செய்தார். சிவன் அவரிடம் விளையாடுவதற்காக ஒரு மலரை மறையும்படி செய்தார். பூஜையை நிறைவு செய்ய, மகாவிஷ்ணு ஆயிரமாவது மலராக தனது கண்ணையே படைக்க எண்ணி அதைப் பிடுங்க முயன்றார். சிவன் அவரைத் தடுத்து, அவரது பக்தியை மெச்சி சக்கரத்தை மீட்டுக்கொடுத்தார். இந்த நிகழ்ச்சி வீழிச்செடிகள் நிறைந்த தலத்தில் நடந்தது. இங்கு அமைந்த சிவன் 'வீழிநாதர்' என பெயர் பெற்றார்.திருமணத்தலம்: காத்யாயன முனிவர், புத்திரப்பேறுக்காக தன் மனைவி சுமங்கலையுடன் சிவனை வேண்டினார். சிவன், அம்பாளையே அவருக்கு மகளாகப் பிறக்கும்படி செய்தார். முனிவர் அவளுக்கு காத்யாயனி என பெயரிட்டார். திருமண வயதில் சிவனிடம், அவளை மணந்துகொள்ளும்படி வேண்ட, சுவாமி இங்கு வந்தார். 'வந்திருப்பது சிவன்தானா' என்ற சந்தேகம் முனிவருக்கு வரவே, அதுபற்றி சிவனிடமே கேட்டும் விட்டார். திருமால் தனக்கு ஆயிரமாவது மலராக படைத்த கண்ணையும், மிழலைக்குறும்பர் எனும் பக்தர் நைவேத்யமாக படைத்த விளாங்கனியையும் சாட்சியாகக் காட்டி உண்மையை உணர்த்தினார் சிவன். பின் அம்பிகையை மணம் முடித்து, மணக்கோலத்தில் எழுந்தருளினார். இதனால் 'மாப்பிள்ளை சுவாமி' என பெயர் வந்தது. இரண்டு லிங்கம்: மூலஸ்தானத்தில் வீழிநாதர் லிங்க வடிவில் உள்ளார். லிங்கத்தின் பின்புறம் சிவன், அம்பிகை சிலைகள் உள்ளன. அன்னபூரணி சிலை உள்ளிருந்தாலும், வெளியில் இருந்து பார்க்க முடியாது. சிவன் சன்னிதி எதிரில் மற்றொரு லிங்கம் இருக்கிறது. மன்னர் ஒருவர் இங்கு திருப்பணி செய்தபோது, பணிகளை சிவனே மேற்பார்வையிடும் வகையில் ஒரு லிங்கம் அமைத்தார். இவரை 'மூலநாதர்' என்பர். அழகியமாமுலை அம்பிகை, எமனைத் தண்டித்த கால சம்ஹாரமூர்த்தி ஆகியோருக்கு சன்னிதிகள் உள்ளன.மணப்பந்தல்: சிவன் சன்னிதி முன்மண்டபம் மணப்பந்தல் போல அமைந்துள்ளது. இதன் வடகிழக்கு திசையில் பந்தல்கால் இருக்கிறது. அர்த்த மண்டபத்தில் 'அரசாணிக்கால்' (முகூர்த்தக்கால்) இருக்கிறது. திருமணத்தடை உள்ளவர்கள் அரசாணிக்காலை சுற்றி வந்து, சிவனை வழிபடுகிறார்கள். 'மாப்பிள்ளை சுவாமி' கையில் பூச்செண்டு வைத்திருக்கிறார். படிக்காசு பீடம்: சம்பந்தர், நாவுக்கரசர் ஆகியோர் இங்கு பதிகம் பாடி, சிவனிடம் தங்கக்காசு பெற்று மக்களின் பசியாற்றினர். இந்தக் காசுகளை இங்குள்ள பீடத்தில் சிவன் வைத்து விடுவார். இது படிக்காசு பீடம் எனப்படுகிறது. கோவிலுக்கு வெளியே சம்பந்தர், நாவுக்கரசருக்கு தனிக்கோவில்கள் உள்ளன. அருணகிரிநாதர் இத்தல முருகன் பற்றி திருப்புகழில் பாடியுள்ளார். இங்குள்ள வவ்வால் நெற்றி மண்டபத்தின் நடுவே, தூண்கள் கிடையாது என்பது விசேஷம்.இருப்பிடம்: கும்பகோணத்தில் இருந்து இரவாஞ்சேரி வழியாக பூந்தோட்டம் செல்லும் சாலையில் 25 கி.மீ., தூரத்தில் உள்ளது தென்கரை. இங்கிருந்து பிரியும் ரோட்டில் ஒரு கி.மீ., சென்றால் திருவீழிமிழலை கோவில். தென்மலையில் இருந்து ஆட்டோ வசதி உண்டு.நேரம்: காலை 6:00 - 12:00, மாலை 4:00 - 7:30 மணி. தொலைபேசி: 04366 - 273 050.