அம்பாள் ருதுவான ஆடிப்பூரம்
பழங்காலம் முதலே சக்தி வழிபாடு இரண்டற கலந்திருக்கிறது. அக்காலமக்கள் கோயிலில் மட்டுமின்றி காண்கின்ற எல்லா இடங்களிலும் அன்னையைக் கண்டனர். 'சர்வம் சக்திமயம்' என்ற கொள்கையைக் கொண்டிருந்தனர். மதுரையில் மங்களம் அருளும் மீனாட்சியாய், காஞ்சியில் காமாட்சியாய், கங்கை பாயும் காசியில் விசாலாட்சியாய் அவள் அருளாட்சி புரிகிறாள். அம்பிகைக்கு உகந்த மாதம் ஆடி. ஆடியில் எல்லா நாட்களுமே வழிபாட்டுக்கு உகந்த நாட்களே. அதிலும் ஆடிச்செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடிப்பூரம் போன்ற விசேஷநாட்கள் சக்தி வழிபாட்டிற்கு சிறப்பானவை. இந்நாட்களில் மாரியம்மன், காளியம்மன் போன்ற அம்பிகைகளுக்கு மாவிளக்கு, பொங்கல் போன்ற சிறப்பு வழிபாடுகளை செய்யலாம். புட்டு, களிதானம் செய்யலாம். ஆடிப்பூரத்தை அம்பாள் ருதுவான (வயதுக்கு வந்த நாள்) நாளாகக் கருதி, பூப்படைந்த பெண்களுக்கு வழங்கும் களி உள்ளிட்ட சத்தான உணவையெல்லாம் நைவேத்யம் செய்கின்றனர்.