திருப்பதி சீனிவாசர்கள்
திருப்பதியில் த்ருவ ஸ்ரீநிவாசர், போக ஸ்ரீநிவாசர், கொலுவு ஸ்ரீநிவாசர், உக்ர ஸ்ரீநிவாசர், மலையப்பர் என ஐந்து ஸ்ரீநிவாசர்கள் உள்ளனர். இவர்களை பஞ்ச பேரர்கள் என்பர். 1. த்ருவ ஸ்ரீநிவாசர் சுயம்பு மூர்த்தியான இவரே மூலவராக இருக்கிறார். சாளகிராமக் கல்லால் ஆன இவர் பத்தடி உயரம் கொண்டவர். ஸ்தானக மூர்த்தி, த்ருவமூர்த்தி, த்ருவ பேரம், கோவிந்தன், ஸ்ரீவாரி, பாலாஜி என்றும் இவருக்கு பெயருண்டு. 2. போக ஸ்ரீநிவாச மூர்த்தி: கருவறையில் மூலவருடன் இருக்கும் இவரை மணவாளப்பெருமாள் என்பர். கோயிலில் இருந்து வெளியே வராத இவருக்கு தினமும் ஆகாச கங்கை தீர்த்தத்தால் அபிஷேகம் நடக்கும். வாரந்தேறும் புதனன்று இவருக்கு சகஸ்ர கலசாபிஷேகம் நடக்கும்.3. கொலுவு ஸ்ரீநிவாச மூர்த்தி: கொலுவு என்றால் ஆஸ்தானம் என பொருள். தினமும் கருவறையில் தோமாலை சேவை முடிந்ததும் தங்க சிம்மாசனத்தில் எழுந்தருளும் இவரிடம் அன்றாட பஞ்சாங்கம், கோயில் வரவு, செலவு, நித்ய அன்னதான நன்கொடையாளர் விபரம், உற்ஸவ விஷயங்கள் ஆகியவற்றை பட்டாச்சாரியார் அறிவிப்பார். இதில் பட்டர்கள், கோயில் ஊழியர்கள் மட்டும் பங்கேற்பர்.4. உக்ர ஸ்ரீநிவாச மூர்த்தி: வேங்கடத்து உறைவார், ஸ்நபன பேரர் என்றும் இவருக்கு பெயருண்டு. 14ம் நுாற்றாண்டு வரை உற்ஸவ மூர்த்தியாக இருந்தவர் இவரே. சூரிய ஒளி மேனியில் பட்டதும் இவர் உக்ரமாகி விடுவார். ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் கைசிக துவாதசியன்று அதிகாலை மூன்று மணிக்கு மட்டும் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.5. மலையப்ப சுவாமி: மலை குனிய நின்ற பெருமாள், உற்ஸவ பேரர் என்றும் இவருக்கு பெயருண்டு. நெற்றியில் பதிக்கப்பட்ட திருச்சுட்டியில் கஸ்துாரி திலகத்துடன் காட்சியளிக்கும் இவரே பிரம்மோற்ஸவம் உள்ளிட்ட அனைத்து விழாக்களிலும் பவனி வருகிறார்.இவர்களைத் தவிர கல்யாண ஸ்ரீநிவாசர் என்றொரு உற்ஸவர் இருக்கிறார். திருமலைக்கு வர இயலாத பக்தர்களின் குறை போக்குகிறார் இவர். உலகில் பக்தி செழிக்க கல்யாண உற்ஸவம் நடத்துகின்றனர். இதற்காக இவரை நாடெங்கும் எழுந்தருளச் செய்கின்றனர்.