உள்ளூர் செய்திகள்

மலை தீர்த்தத்தில் மகிழ்வுடன் நீராடுங்க!

திருமாலுக்குரிய திவ்ய தேசங்களில் புகழ் மிக்க மலைத்தலம் அழகர்கோவில். மதுரை அருகிலுள்ள இங்கு சுந்தரராஜப் பெருமாள் கோவில் கொண்டிருக்கிறார். இங்குள்ள உற்சவரான கள்ளழகரே சித்ரா பவுர்ணமியன்று வைகையாற்றில் இறங்கி மண்டூக மகரிஷிக்கு சாபவிமோசனம் அளிக்கிறார். அழகர் மலை மீதுள்ள நூபுரகங்கை தீர்த்தம் புனிதமானதாக கருதப்படுகிறது. இதற்கு 'சிலம்பாறு' என்றும் பெயருண்டு. திருமாலின் திருவடிச் சிலம்பில் பட்ட தீர்த்தமே நூபுர கங்கையாக இருப்பதாக ஐதீகம். அபரஞ்சி என்னும் தங்கத்தால் செய்யப்பட்ட கள்ளழகருக்கு, மலை தீர்த்தமான நூபுர கங்கையால் மட்டுமே அபிஷேகம் செய்வர். அழகர்மலை அடிவாரத்தில் பதினெட்டாம் படி கருப்பசாமி காவல் தெய்வமாக வீற்றிருக்கிறார். இவருக்கு உருவ வழிபாடு கிடையாது. கருப்பசாமி கோவிலின் சன்னிதி கதவுக்கே பக்தர்கள் சந்தனம் சாத்தி வழிபடுவர். ஆடி அமாவாசையன்று நூபுர கங்கையில் நீராடினால் திருமாலின் திருவடி நிழலை அடையலாம்.