நல்லது செய்... உதவி செய்!
சூபி என்னும் ஞானி குறிப்பிட்ட பழங்களை தேடி ஒரு கிராமத்திற்கு சென்றார். அந்த பழத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் அதை சாப்பிட்டால் நீண்ட நாள் பசியின்றி வாழலாம். ஆனால் அங்கு சென்றவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. எங்கு தேடியும் பழம் கிடைக்கவில்லை. அப்போது எதிரே வந்து கொண்டிருந்த இளைஞன், ''ஐயா.. நீங்கள் யார். நீங்கள் எதையோ தேடிக்கொண்டிருப்பதை போல் இருக்கிறதே. நான் உதவட்டுமா'' என அவரிடம் கேட்டான்.“தம்பி... நான் அபூர்வமான பழங்களை தேடி இங்கு வந்தேன். அது எனக்கு கிடைத்தால் பயிர் செய்து ஏழைகளுக்கு இலவசமாக வழங்குவேன்'' என தெரிவித்தார். சிறிது நேரம் யோசித்த இளைஞன், “ஐயா சிறிது நேரம் இங்கேயே காத்திருங்கள். நான் பழங்களுடன் வருகிறேன்” என்று சொல்லிவிட்டு புறப்பட்டான். நேரம் ஓடியது. அந்த இளைஞனும் ஓடோடி வந்தான். ''நீங்கள் கேட்ட பழம் இதுதான்” என்று கொண்டு வந்ததை அவரிடம் கொடுத்தான்.“தம்பி... இந்த கிராமத்தில் இந்தப் பழம் எளிதாக கிடைக்கும் என்று சிலர் கூறினர். ஆனால் நீயோ எங்கிருந்தோ எடுத்து வருகிறாய்'' என்றார் ஞானி. “உண்மை தான். இந்தப்பழம் அனைவருக்கும் பயன்பட்டு வந்தது. நாளடைவில் இதன் மகத்துவத்தை அறிந்த சுயநலக்காரர்கள், பழத்தை பதுக்க ஆரம்பித்தனர். இதனால் சிலர் மட்டுமே இதை ரகசியமாக பயிரிடுகின்றனர். தாங்கள் பிறருக்கு உதவி செய்வதற்காக கேட்டீர்கள் அல்லவா... அதனால்தான் நான் அவர்களிடம் பேசி கொண்டு வந்தேன்'' என்றான் இளைஞன். இதைக் கேட்டு நெகிழ்ந்தார் ஞானி, ''இவ்வளவு சின்ன வயதில் பிறருக்கு உதவுகிறாயே. நீ சிறப்பாக வாழ்வாய்'' என வாழ்த்தினார். ''ஐயா... எனது அம்மா ஒரு விஷயத்தை மட்டும் மறக்கவே கூடாது என சொல்லியிருக்கிறார்கள். நல்லது நினை. நல்லது செய். இல்லையெனில் நல்லது செய்பவருக்கு உதவி செய்'' என கூறியிருக்கிறார்.