உன் கண்ணில் நீர் வழிந்தால்...
சிலர் பெண்களை மதிப்பது இல்லை. அதிலும் குறிப்பாக மனைவியை ஒருபொருட்டாக மதிப்பதே இல்லை. வீட்டிற்கு மனைவிதான் எல்லாம் என்பதை புரிந்து கொள்ளவில்லை. இது தவறான விஷயம். ஆண்கள் கல்லுாரியில் பேராசிரியர் ஒருவர் பாடம் நடத்திக்கொண்டிருந்தார். அப்போது ''உங்களுக்கு மிகவும் பிடித்த நபர் யார்'' என கேட்க, அவர்களோ ஆளாளுக்கு, 'தந்தை, தாய், சகோதரர், பாட்டி, தாத்தா' என பதில் அளித்தனர். ''நீங்கள் சூப்பராக பதில் அளித்தீர்கள். இருந்தாலும் உங்களது அன்பு எதிர்காலத்தில் வேறு ஒருவருக்கும் பகிர்ந்து கொடுக்க வேண்டும். அதுதான் உங்களது வாழ்க்கைத்துணை'' என்றார். அப்போது ஒருவன், ''ஏன் மனைவிக்கு அவ்வளவு முக்கியத்துவம் தர வேண்டுமா..'' என கிண்டலாக கேட்டான். ''டேய் தம்பி. இந்த உலகில் தாய்க்கு அடுத்தபடியாக நம்மீது அன்புகாட்டுவது மனைவிதான். ஓர் ஆணுக்கு கிடைக்கும் அங்கீகாரத்துக்கும், மரியாதைக்கும் மனைவிதான் காரணம். என்னதான் பெற்றோர் மீது நீ அன்பாக இருந்தாலும், உன்னை நம்பி வரும் பெண்ணிற்கும் அன்பைத்தர வேண்டும். ஒரு கட்டத்தில் பெற்றோர் உன்னை விட்டு பிரிந்துவிடுவர். உன் குழந்தைகளுக்கு திருமணமானவுடன் அவர்களும் தனிக்குடித்தனம் சென்று விடுவர். ஆனால் உன்னுடன் இருப்பவள் மனைவி மட்டுமே. பெற்றோர் எப்படி முக்கியமோ, அதேபோல் மனைவியும் முக்கியம். மனைவியை இரண்டாவது தாயாகப் பார்ப்பதுதான் ஆண்களுக்கு அழகாகும்'' என்றார் பேராசிரியர். 'மனைவியின் கண்ணில் இருந்து நீர் வழிந்தால், என் நெஞ்சில் ரத்தம் வரும்' என்று சொல்லும் அளவிற்கு இருப்பது கணவரின் கடமை அல்லவா.