'மாற்று கட்சிகளில் இருந்து, தங்கள் கட்சிக்கு ஆள் பிடிப்பது எல்லா கட்சிகளிடமும் உள்ள நடைமுறை தான். ஆனால், இந்த விஷயத்தில் பா.ஜ., போகும் வேகத்தை பார்த்தால் பயமாக இருக்கிறது...' என்கின்றனர், மத்திய பிரதேசத்தில் உள்ள அரசியல்வாதிகள்.இங்கு, முதல்வர் மோகன் யாதவ் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. கடந்த சில ஆண்டுகளாகவே, இங்கு காங்கிரசுக்கு இறங்கு முகம் தான். கடந்த சட்ட சபை தேர்தலில் பா.ஜ., விடம் படுதோல்வி அடைந்தது.அதற்கு முந்தைய தேர்தலில் ஆட்சியை பிடித்தும், அதை தக்க வைக்க முடியாமல் பா.ஜ.,விடம் கோட்டை விட்டது. தொடர் தோல்விகளால் காங்கிரசில் உள்ள பல முக்கிய தலைவர்கள் பா.ஜ.,வில் இணைந்து வருகின்றனர். காங்., மேலிட தலைவர்களின் தீவிர ஆதரவாளராக இருந்த ஜோதிராதித்யா சிந்தியா, பா.ஜ.,வில் இணைந்து, மத்திய அமைச்சராகி விட்டார். சமீபத்தில், மற்றொரு முக்கிய தலைவரான சுரேஷ் பச்சோரியும் பா.ஜ.,வில் சேர்ந்து விட்டார்.காங்கிரசில் இருந்து ஆட்களை இழுப்பதற்காகவே, பா.ஜ.,வில், மூத்த தலைவரான நரோத்தம் மிஸ்ரா தலைமையில் ஒரு பிரிவு செயல்படுகிறது. காங்கிரசில் உள்ள தலைவர்களிடம் தொடர்ந்து பேசுவது, அவர்களை கட்சி அலுவலகத்துக்கு அழைத்து வந்து, பொன்னாடை போர்த்தி, உறுப்பினர் அட்டை வழங்குவது போன்ற விஷயங்களை இந்த பிரிவினர் செய்து வருகின்றனர். இதைப் பார்த்த காங்., மூத்த தலைவர்கள், 'இன்னும் சில நாட்களில் மத்திய பிரதேசத்தில் காங்கிரசில் யாருமே இருக்க மாட்டார்கள் போல் தெரிகிறது...' என, கவலைப்படுகின்றனர்.