நான்காவது இடம் தானா?
'கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாகி விடுமோ...' என கவலைப்படுகின்றனர், ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சி நிர்வாகிகள். ஜம்மு - காஷ்மீரில், பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி, மெஹபூபாவின் மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவை மிகவும் முக்கியமானவை. காங்கிரஸ், பா.ஜ., ஆகிய கட்சிகளுக்கும் செல்வாக்கு உண்டு. கடந்த, 2019ல் ஜம்மு - காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டது; தற்போது, இங்கு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. சில மாதங்களுக்கு முன் இங்கு நடந்த லோக்சபா தேர்தலில், மக்கள் ஜனநாயக கட்சி படுதோல்வியை சந்தித்தது.சட்டசபை தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சி, காங்கிரசுடன் கூட்டணி அமைத்துள்ளது. பா.ஜ., தனித்து போட்டியிடுகிறது. காஷ்மீரில் உள்ள சில அமைப்புகள் ஒன்றாக சேர்ந்து, மூன்றாவது அணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றன. இதனால், நான்காவது அணியாக போட்டியிட வேண்டிய கட்டாயம், மெஹபூபாவுக்கு ஏற்பட்டுள்ளது. 'லோக்சபா தேர்தலில் கிடைத்த தோல்வியின் ரணமே இன்னும் ஆறவில்லை. இப்போது, கூட்டணி இல்லாமல் சட்டசபை தேர்தலில், தனியாக நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.'எல்லா தொகுதிகளிலும் நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டு விடுவோமோ என்று பயமாக உள்ளது...' என்கின்றனர், மக்கள் ஜனநாயக கட்சியினர்.