உள்ளூர் செய்திகள்

போதுமடா சாமி!

'கட்சியில் உள்ள பிரச்னைகளை சமாளித்து விடலாம்போலிருக்கிறது; ஆனால், இந்த குடும்ப உறுப்பினர்களால் ஏற்படும் பிரச்னையை சரி செய்வது தான் பெரிய தலைவலியாக இருக்கிறது...' என கவலைப்படுகிறார், மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி.இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனாலும், ஐந்து சகோதரர்கள், இரண்டு சகோதரிகளுடன் கூட்டு குடும்பமாக கோல்கட்டாவில் வசித்து வருகிறார். மம்தா எளிமையான அரசியலுக்கு பெயர் பெற்றவர். ஆடம்பரம் இவருக்கு அறவே பிடிக்காது. ஆனால், இவரது அரசியல் வாரிசாக அறியப்படும் அபிஷேக் பானர்ஜிக்கும், எளிமைக்கும் ஏழாம் பொருத்தம். அபிஷேக், மம்தாவின் சகோதரர் மகன். கட்சியின் முக்கிய பொறுப்புகளை கவனித்து வருகிறார். அவரிடம், 'எளிமையாக இருந்தால் தான், மக்கள் மனதில் எளிதாக இடம் பிடிக்க முடியும்...' என, மம்தா பலமுறை அறிவுறுத்தி உள்ளார். ஆனால், அபிஷேக் அதை பொருட்படுத்தவில்லை. ஆடம்பரத்தை தான் பின்பற்றுகிறார். மம்தாவின் இளைய சகோதரரான பபுன் பானர்ஜியும், ஏட்டிக்கு போட்டியாகத் தான் செயல்படுகிறார். கட்சி விவகாரங்களில் தலையிட்டு குழப்பத்தை ஏற்படுத்துவதுடன், எல்லா விஷயங்களிலும் மம்தாவுடன் தகராறிலும் ஈடுபடுவது இவரது வழக்கம். சமீபத்தில் மம்தாவின் தலையில் ஏற்பட்ட காயத்துக்கும், இவருக்கும் தொடர்பிருப்பதாக தகவல்கள் வெளியாகின.'குடும்ப உறுப்பினர்களை சமாளிப்பதே பெரிய வேலையாக இருக்கிறது. இதில், கட்சி வேலையையும், பிரசாரத்தையும் எப்போது பார்ப்பது. போதுமடா சாமி...' என புலம்புகிறார், மம்தா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ