காலாவதியாகும் கூட்டணி!
'கூட்டணி என்றாலே தொல்லை தான். பேசாமல் தனித்து போட்டியிட்டு விடலாம்...' என எரிச்சலுடன்பேசுகிறார், ஜார்க்கண்ட் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவருமான ஹேமந்த் சோரன்.தற்போது, இங்கு ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா,காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்த கூட்டணியில், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீயஜனதா தளம் மற்றும் இடதுசாரி கட்சிகளும் இடம்பெற்றுள்ளன. வரும் நவம்பர் 13 மற்றும் 20 என, இரண்டு கட்டங்களாக நடக்க உள்ள சட்டசபை தேர்தலிலும் இந்த, 'இண்டியா' கூட்டணி தொடர்கிறது. இங்குள்ள, 81 தொகுதிகளில், 70 தொகுதிகளை ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவும், காங்கிரசும் பகிர்ந்து கொள்வது எனவும், மீதமுள்ள, 11 தொகுதிகளை ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளுக்கு ஒதுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது; ஆனால், ராஷ்ட்ரீய ஜனதா தளம் இதை ஏற்க மறுக்கிறது. 'பீஹாரில் இருந்து பிரிந்து உருவான மாநிலம் தான், ஜார்க்கண்ட். ஒருங்கிணைந்த பீஹார் மாநிலத்தில் நாங்கள் பலமுறை ஆளுங்கட்சியாக இருந்துள்ளோம். இப்போதைய ஜார்க்கண்டில் எங்களுக்கும் நல்ல செல்வாக்கு உள்ளது.'எனவே, எங்களுக்கு நியாயமான தொகுதிகளை ஒதுக்க வேண்டும். 'லெட்டர் பேடு' கட்சிகளுக்கு ஒதுக்குவதுபோல், எங்களுக்கு தொகுதிகளை ஒதுக்குவதை ஏற்க முடியாது...' என்கின்றனர், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியினர். ஹேமந்த் சோரனோ, 'இப்படி வீம்பு பிடித்தால், பா.ஜ., எளிதாக வெற்றி பெற்று விடும்;'இண்டியா' கூட்டணி காலாவதியாகி விடும் போலிருக்கிறது' என, புலம்புகிறார்.