பெண்களுக்கு பரிசு மழை!
'விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள தமிழகம், மேற்கு வங்கம், கேரளா, அசாம், புதுச்சேரி மாநிலங்களில் உள்ள பெண்களுக்கு, இது கொண்டாட்ட காலம்...' என்கின்றனர், அரசியல் பார்வையாளர்கள். பீஹாரில், கடந்தாண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடந்தது. தேர்தல் தேதி அறிவிப்பதற்கு சில நாட்களுக்கு முன், 'பெண் தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையில், 75 லட்சம் பெண்களின் வங்கி கணக்குகளில், தலா, 10,000 ரூபாய் வரவு வைக்கப்படும்...' என, ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், முதல்வருமான நிதிஷ் குமார் அறிவித்தார். எதிர்பார்த்தது போலவே, பெண்களின் ஓட்டுகள் ஐக்கிய ஜனதா தளத்துக்கு அதிகம் விழுந்தன. தேர்தலில், ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், சமீபத்தில், 1.31 கோடி பெண்களின் வங்கி கணக்குகளில், மகளிர் உரிமைத் தொகையாக, தலா, 5,000 ரூபாய் வரவு வைக்கப்பட்டது. முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கும் அசாமிலும், விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இங்கு, வறுமை ஒழிப்பு திட்டத்தின் கீழ், 40 லட்சம் பெண்களுக்கு, தலா, 9,000 ரூபாய் சமீபத்தில் வழங்கப்பட்டுள்ளது. அசாம் அரசின் இந்த அதிரடி, அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 'பெண்களின் ஓட்டுகளை வளைத்து விட்டால் ஆட்சியை பிடித்து விடலாம் என அரசியல்வாதிகள் நம்புகின்றனர்; அதனால் தான், இந்த பரிசு மழை...' என்கின்றனர், அப்பாவி ஆண் வாக்காளர்கள். அக்கம் பக்கம்/ 13/03/26 வெள்ளி இதழ் (அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா கார்ட்டூன்)