'கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் செயல்படுகிறாரே...' என அசாம் முதல்வரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான ஹிமந்த பிஸ்வ சர்மாவை பற்றி கொந்தளிக்கின்றனர், இங்குள்ள காங்., கட்சியினர்.ஹிமந்த பிஸ்வ சர்மா, 2015ல் தான் பா.ஜ.,வில் இணைந்தார். அதற்கு முன், அசாம் மாநில காங்., முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்தார். முன்னாள் முதல்வரும், காங்., மூத்த தலைவருமான, மறைந்த தருண் கோகோய் தலைமையிலான அரசில், தொடர்ச்சியாக மூன்று முறை அமைச்சராக பதவி வகித்தார். கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட முக்கிய துறைகளின் அமைச்சராக இருந்தார்.தருண் கோகோயுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக காங்.,கில் இருந்து விலகிய சர்மா, பா.ஜ.,வில் இணைந்து, தற்போது முதல்வராகவும் உள்ளார்.சமீபத்தில் அசாம் மாநிலத்தில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், பாரத ஒற்றுமை நீதி யாத்திரை மேற்கொண்டார். அப்போது அவரது யாத்திரைக்கு தடை விதித்ததுடன், சட்டம் - ஒழுங்கை சீர்குலைத்ததாக வழக்குப் பதிவு செய்யவும் சர்மா உத்தரவிட்டார். இதனால் கடுப்பான காங்., தலைவர்கள், 'மற்ற மாநிலங்களில் எல்லாம் ராகுல் யாத்திரைக்கு எந்த தடையும் இல்லை. அசாமில் மட்டும் ஏன் இவ்வளவு இடையூறு? இத்தனைக்கும் சர்மா, காங்கிரசால் வளர்த்து ஆளாக்கப்பட்டவர். அந்த நன்றி உணர்வு கூட அவருக்கு இல்லையே...' என, கொந்தளிக்கின்றனர். சர்மா தரப்போ, 'அரசியல் என்று வந்து விட்டால், நன்றியாவது; மனசாட்சியாவது....' என, கிண்டலடிக்கின்றனர்.