பழைய பஞ்சாங்கம்!'தேர்தல் நெருங்கும் நேரத்தில் இது தேவைதானா...' என காங்., முன்னாள் தலைவர் ராகுல் நடத்தி வரும் யாத்திரையை பற்றி முணுமுணுக்கின்றனர், அந்த கட்சியின் மூத்த நிர்வாகிகள்.வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இருந்து, மஹாராஷ்டிராவின் மும்பை வரையிலான, 'பாரத் ஒற்றுமை நியாய யாத்திரை'யை காங்., - எம்.பி., ராகுல், சமீபத்தில் துவக்கினார். கடந்தாண்டு இவர் நடத்திய பாரத ஒற்றுமை யாத்திரைக்கு ஓரளவு வரவேற்பு கிடைத்ததால், தற்போது இந்த யாத்திரையை மேற்கொண்டுள்ளார். வரும் மார்ச் இறுதி வரை இந்த யாத்திரைநடக்கவுள்ளது யாத்திரை முடிவதற்கு முன்னதாகவே, லோக்சபா தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது; இந்த விவகாரம் தான், காங்., மூத்த நிர்வாகிகளுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது. 'கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சு, காங்கிரஸ் வேட்பாளர் தேர்வு, பூத் கமிட்டி அமைப்பது, தேர்தல் அறிக்கை தயாரிப்பு என முக்கியத்துவம் வாய்ந்த வேலைகள் உள்ளன. இதற்கு குறுகிய கால அவகாசமே உள்ளது.'இந்த நேரத்தில் கட்சியினரின் முழு கவனமும் யாத்திரையில் இருந்தால், தேர்தல் பணிகளுக்கு எப்படி தயாராக முடியும். ராகுலுக்கு நெருக்கமானவர்கள், இதை அவரிடம் எடுத்துக் கூறி இருக்க வேண்டும்...' என வருத்தப்படுகின்றனர், காங்., மூத்த தலைவர்கள். ராகுல் ஆதரவாளர்களோ, 'இதுபோன்ற யாத்திரை நடத்துவதால் தான், கட்சி தொண்டர்களை புத்துணர்வுடன் செயல்பட வைக்க முடிகிறது; இது தெரியாமல் பழைய பஞ்சாங்கத்தை பாடுகின்றனர்...' என, பதிலடி கொடுக்கின்றனர்.நிதீஷுக்கு கிடைத்த பரிசு!'எல்லாரும் நேரில் நன்றாகத் தான் பேசுகின்றனர். ஆனால், நேரம் பார்த்து முதுகில் குத்துகின்றனர்...' என, 'இண்டியா' கூட்டணி கட்சியினரின் செயல்பாடுகளால் அதிருப்தியில் உள்ளார், பீஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவருமான நிதீஷ் குமார்.காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட, 28 கட்சிகள் இணைந்து இண்டியா கூட்டணியை அமைத்துள்ளன. இந்த கூட்டணி உருவாவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் நிதீஷ் குமார். இவர் மேற்கொண்ட கடுமையான முயற்சியின் காரணமாகவே, பாட்னாவில் எதிர்க் கட்சியினர் கூடி ஆலோசனை நடத்தினர். தற்போது, தொகுதி பங்கீடு பேச்சு நடத்தும் அளவுக்கு, இந்த கூட்டணியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த கூட்டணியின் தலைவராக நிதீஷ் குமார் தேர்வு செய்யப்படுவார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தேர்வு செய்யப்பட்டார். எதிர்க்கட்சி கூட்டணியின் பிரதமர் வேட்பாளராகவும், கார்கே தேர்வு செய்யப்பட உள்ளதாக பேச்சு அடிபடுகிறது. இதனால், கடும் அதிருப்தியில் உள்ளார், நிதீஷ் குமார்.மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர், நிதீஷ் குமார் தலைவராவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. இதையறிந்த நிதீஷ் குமார், 'என் மீது ஏன் இவ்வளவு கோபமாக இருக்கின்றனர் என தெரியவில்லை. 28 கட்சிகள் அடங்கிய பிரமாண்ட கூட்டணியை அமைத்ததற்கு, எனக்கு கிடைத்த பரிசு இது...' என, புலம்புகிறார்.