என்னை குறிவைப்பது ஏன்?
'இந்த நாட்டில், நான் மட்டும் தான் வாரிசு அரசியல் நடத்துகிறேனா... வேறு யாருமே தங்கள் குடும்பத்தினரை அரசியலில் ஈடுபடுத்தவில்லையா...' என, கோபத்தில் கொந்தளிக்கிறார், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவரும், பீஹார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ்.பீஹாரில், முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு அடுத்த சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது; பிரசாரத்துக்கு இப்போதே எல்லா கட்சிகளும் தயாராகி வருகின்றன. எதிர்க்கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியினர், முதல்வர் நிதிஷ்குமார் உடல்நிலையை சுட்டிக்காட்டி பிரசாரம் செய்ய வியூகம் வகுத்து வருகின்றனர். 'ஞாபக மறதியால் அவதிப்படும் நிதிஷ்குமார், முதல்வர் பதவிக்கு தகுதியானவர் அல்ல...' என்ற கோஷத்தை முன் வைத்து, பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளனர். ஆளும் தரப்பினரோ, 'லாலு பிரசாத் யாதவுக்கு ஏழு மகள்கள், இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களின் வளர்ச்சிக்காக மட்டுமே லாலு கட்சி நடத்தி வருகிறார். லாலு பிரசாத் முதல்வராக இருந்த காலம், பீஹாரின் இருண்ட காலம். மீண்டும் அந்த இருண்ட காலம் வந்து விடக் கூடாது...' என, இப்போதே பொதுக்கூட்டங்களில் பேசி வருகின்றனர்.இந்த விவகாரம், லாலுவுக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. 'எல்லா கட்சிகளின் தலைவர்களுமே, தங்கள் வாரிசுகளை அரசியலில் ஈடுபடுத்தி உள்ளனர்; இதில், யாரும் விதிவிலக்கு இல்லை. என்னை மட்டும் குறிவைப்பது ஏன்...' என ஆவேசப்படுகிறார்.