உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அக்கம் பக்கம் / விஷப்பரீட்சை ஏன்?

விஷப்பரீட்சை ஏன்?

'வெளியில் தலைகாட்ட முடியாமல் செய்து விட்டாரே...' என, பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் பற்றி புலம்புகின்றனர், அவரது ஐக்கிய ஜனதா தளம் கட்சி நிர்வாகிகள். பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. நிதிஷ் குமாருக்கு 73 வயதாகி விட்டது; அடிக்கடி ஞாபக மறதியால் அவதிப்படுகிறார். 'கட்சியின் மூத்த நிர்வாகிகளில் யாராவது ஒருவருக்கு பதவியை கொடுத்து விட்டு, அவர் ஓய்வெடுக்கலாம். ஆனால், செய்ய மறுக்கிறாரே...' என, கட்சி நிர்வாகிகள் ஏற்கனவே முணுமுணுத்து வந்தனர். அடுத்த சில மாதங்களில் பீஹாரில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், திடீரென நிதிஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமார், கட்சி நிகழ்ச்சிகளில் அடிக்கடி தலை காட்டத் துவங்கியுள்ளார். இது, கட்சி நிர்வாகிகளுக்கு ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. பீஹார் முன்னாள் முதல்வரான, ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ், கட்சியின் முக்கிய பொறுப்புகளை, தன் மகன்கள் தேஜஸ்வி யாதவ், தேஜ் பிரதாப் யாதவுக்கு கொடுத்து விட்டார். இந்த வாரிசு அரசியலை கடுமையாக விமர்சித்தும், எதிர்த்தும் தொடர்ந்து பிரசாரம் செய்து வந்தார், நிதிஷ் குமார். 'இது மன்னராட்சி காலமா...' எனவும் கேள்வி எழுப்பினார்.'இப்போது தன் மகனை, நிதிஷ் குமார் கட்சியில் முன்னிலைப்படுத்தினால் மக்கள் எப்படி ஏற்றுக் கொள்வர்? எதற்கு இந்த விஷப்பரீட்சை...' என கொதிக்கின்றனர், ஐக்கிய ஜனதா தளம் நிர்வாகிகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை