பசித்தோருக்கு அகப்பட்ட அமிழ்து போல் தமிழர்க்கு கிடைத்த அரும்பரிசு 'தினமலர்' நாளிதழ். ஏறத்தாழ முக்கால் நுாற்றாண்டு காலம், அதாவது 1951 முதல், இதழ்ப்பணி ஆற்றியுள்ளது 'தினமலர்'. புலர் காலை கண்மணல் திறக்கும்போது, தினமலரில் விழிக்கிற பழக்கம் உடையவன் நான். எங்கள் ஊரில், காலை ஒளி வீட்டு முற்றத்தில் முத்தமிடுமுன் 'தினமலர்' செய்தித்தாள் அனைத்து வீட்டு முற்றங்களிலும் வியாபித்திருக்கும். எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு எனும் குறளுக்கேற்ப, உண்மையான செய்திகளை முழு ஆதாரத்துடன் உரக்க சொல்கிற நாளிதழ் 'தினமலர்'! அரசின் நல்ல செயல்களை பாராட்டுவதும், அல்லாத செயல்களை அப்போதே இடித்துரைப்பதும் தினமலருக்கு நிகர் 'தினமலர்' தான். கம்பன் சொன்னதைப் போல், அகலாது, அணுகாது தீக்காய்வார் போல அரசியல் ஆனாலும் ஆன்மிகமானாலும் அதை பக்குவமாக கையாளுவதில், நிறுவனர் டி.வி.ஆரில் இருந்து இன்றுள்ள ஆசிரியர் ராமசுப்பு வரை நுணுக்கமாக, நுண்மாண்நுழை புலத்துடன் செயல்படுபவர்கள். செய்தித்தாள், வாரமலர், சிறுவர் மலர் இதன் வழி தகவல் மற்றும் விழிப்புணர்வு, கருத்துகளின் பிரதிபலிப்பு, பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகள் என வழங்கி, சமூகத்திற்கு பயன்படுகிற முதன்மையான இதழாகும் 'தினமலர்'. கடந்த 1951 செப்டம்பரில் 'தினமலர்' அலுவலகம் அமைந்திருந்த சாலைக்கு, திருவனந்தபுரம் நெடுஞ்சாலை அதாவது, 'டி.வி.எச்., சாலை' என்று பெயரிடப்பட்டுள்ளது. கன்னியாகுமரியை, நாஞ்சில் நாட்டுடன் இணைக்க வேண்டும் என்று தினமலரின் வழிநின்று போராடி, அதில் வெற்றி கண்ட ஐயா டி.வி.ஆரின் பெயரை, 'டி.வி.எச்., சாலை'க்கு சூட்ட வேண்டும் என்று பலமுறை நான் சட்டசபையில் குரல் எழுப்பியுள்ளேன். வரும் 2026, காலம் கனியும் நேரம். வாகை சூடி சட்டசபைக்குள் நாங்கள் நுழையும்போது, 'டி.வி.எச்., சாலை'யின் பெயரை 'டி.வி.ஆர்., சாலை' என பெயர் மாற்றம் செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதற்கு ஆவண செய்வேன் என்று உறுதி கூறுகிறேன். இன்று பவளவிழா காண்கிற 'தினமலர்', பல நுாற்றாண்டு விழாக்கள் கண்டு, இதழியல் தளத்தில் சிகரம் தொட்டு நிற்க வேண்டும் என வாழ்த்துகிறேன். இப்படிக்கு, கடம்பூர் செ.ராஜூ எம்.எல்.ஏ., முன்னாள் தமிழக அமைச்சர்