முன்னாள் பிரதமர் தேவகவுடா: என் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா தொடர்பான பாலியல் வழக்கு விசாரணை நடக்கிறது. விசாரணையில் அவர் தவறு செய்தது நிரூபிக்கப்பட்டால், சட்டப்படி தண்டனை வழங்கட்டும். இதில், எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. பிரஜ்வல் வெளிநாடு சென்றுள்ளார். குற்றம் செய்தவர் தண்டிக்கப்பட வேண்டும். அதே வேளையில், பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் நியாயம் கிடைக்க வேண்டும்.டவுட் தனபாலு: குடும்பத்தில் மூத்தவரான உங்களிடம் ஆசீர்வாதம் வாங்காம, பிரஜ்வல் வெளிநாடு போயிருப்பாரா என்ன... அவரது மொபைல் போனுக்கு நீங்களே பேசி, 'சட்டத்தின் முன் ஆஜராகு'ன்னு உத்தரவு போட்டா, நாட்டின் மூத்த அரசியல் தலைவரான தங்களை, 'டவுட்'டே இல்லாம பாராட்டலாம்!மத்திய, தகவல் ஒலிபரப்பு துறை இணை அமைச்சரும், தமிழகத்தை சேர்ந்தவருமான, எல்.முருகன்: தமிழக வனத்துறை சார்பில், தமிழகம் முழுதும், 42 யானை வழித்தடங்கள் அடையாளம் காணப்பட்டு, 161 பக்க அறிக்கையை ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளனர். சாதாரண மக்கள் இதை எப்படி படித்து, புரிந்து கொள்வர்... தேர்தல் நடத்தை விதி அமலில் இருக்கும் போது, அறிக்கை வெளியிட வேண்டிய அவசியம் என்ன? -டவுட் தனபாலு:பெரும்பாலான பழங்குடியின மக்களுக்கு தமிழே படிக்க தெரியாது... தப்பித்தவறி அவங்க படிச்சுட கூடாதுன்னு தானே, அறிக்கையை ஆங்கிலத்துல வெளியிட்டிருக்காங்க... இதுல இருந்தே, இந்த திட்டம் அவங்களுக்கு எதிரானது என்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!தமிழக, காங்., மூத்த தலைவர் இளங்கோவனுக்கு, செய்தி துறை அமைச்சர் சாமிநாதன் எழுதிய கடிதம்: முதல்வர் ஸ்டாலின், நல்லாட்சி தந்து கொண்டு இருப்பதை, முழுமனதோடு பாராட்டி உள்ளீர்கள். 'இந்த ஆட்சி திராவிட மாடல் ஆட்சி, காமராஜர் ஆட்சி. நல்லாட்சி நடத்துபவருக்கு நாம் துணை நிற்க வேண்டும்' என்று, தாங்கள் கூறிய கருத்துக்கு, அன்புடன் நன்றி தெரிவிக்கிறேன்.டவுட் தனபாலு: உங்க ஆட்சிக்கு சாமரம் வீசிய இளங்கோவனுக்கு நன்றி கூறியது நல்ல விஷயம் தான்... அதே மாதிரி, ஆட்சியின் குறைகளை சுட்டிக்காட்டும் எதிர்க்கட்சி தலைவர்களுக்கும் இந்த மாதிரி கடிதம் எழுதி, 'தவறுகளை சரி பண்றோம்'னு சொன்னால், தங்களை, 'டவுட்'டே இல்லாம பாராட்டலாம்!