உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்: எங்கள் நாட்டின் பிரச்னைகளை கையாளும் திறன், எனக்கும், நாட்டு மக்களுக்கும் உள்ளது. பாகிஸ்தானில் தான் தற்போது நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. எனவே, நீங்கள் உங்கள் நாட்டைக் கவனித்துக் கொள்ளுங்கள். தேர்தல்கள் இந்தியாவின் உள் விவகாரம். பயங்கரவாதத்தின் மிகப்பெரிய ஆதரவாளர் நாடான உங்களின் தலையீட்டை, எங்கள் நாடு பொறுத்துக் கொள்ளாது.டவுட் தனபாலு: சபாஷ். நம்ம நாட்டுல ஆயிரத்தெட்டு பிரச்னைகள் இருக்கும்... அதை நமக்குள்ள பேசி தீர்த்துக்கலாம்... அதை விட்டுட்டு, பக்கத்து நாட்டுக்காரன் பஞ்சாயத்து பேச வந்தால், இப்படி தான் மூக்குடைக்கணும் என்பதில், 'டவுட்'டே இல்லை!அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா அறிக்கை: தமிழகம் முழுதும் பல வகையான போதைப்பொருட்கள், மாணவர்கள் மத்தியில் பயன்படுத்தப்படுகின்றன. போதைப் பொருள் விற்பனைக்கு எதிராக, கடுமையான நடவடிக்கை எடுக்க, காவல் துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் ஆணையிட வேண்டும். பல இடங்களில் போதைப்பொருட்கள் கிடைக்கும் இடம், மக்களுக்கு தெரிகிறது. ஆனால், காவல் துறைக்கு மட்டும் தெரிவதில்லை. டவுட் தனபாலு: இந்தந்த இடங்கள்ல, இன்னார், இன்னார் போதைப்பொருட்களை வித்துக்கலாம்னு ஏரியா பிரிச்சு குடுக்கிறதே, போலீஸ் துறையில இருக்கிற சிலர் தான் என்பதில், 'டவுட்'டே இல்லை!பத்திரிகை செய்தி: 'தமிழகத்தில், 70 சதவீத பள்ளி, கல்லுாரி வாகனங்களில், பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வுப்பணி முடிந்துள்ளது. பாதுகாப்பு குறைபாடு இருந்த, 1,000 வாகனங்களுக்கு, எப்.சி., எனும் தகுதிச் சான்று வழங்க மறுக்கப்பட்டுள்ளது' என, தமிழக போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.டவுட் தனபாலு: நல்ல விஷயம் தான்... அதே நேரம், 1,000 வாகனங்களின் உரிமையாளர்களும், 'எக்ஸ்ட்ரா கட்டிங்' வெட்டி, குறுக்கு வழியில, எப்.சி., வாங்கிடக் கூடாது... இதுல அதிகாரிகள் உறுதியா இருந்து, மாணவர்கள் பாதுகாப்புல எந்த, 'டவுட்'டுக்கும் இடம் தந்துடக் கூடாது!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
மே 27, 2024 06:36

போதை மன்னன், சக்ரவர்த்தி எல்லாம் கட்சி பதவியில் இருந்தபோது தெரியாமல் இருந்ததா? அவரை பிடித்த பிறகு கட்சியிலிருந்து விலக்கி ‘யோக்கிய’ வேஷம் போடும் மேலிடம் உள்ளவரை, போலீஸ் பொட்டலப்பரிமாற்றத்துக்கு உதவும் நிலைதானே இருக்கும்