தமிழக, பா.ஜ., தலைவர் அண்ணாமலை: கூட்டணியில் உள்ள அனைத்து தலைவர்களும் ஒன்றாக பேசி முடிவு எடுத்து, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில், பா.ம.க., போட்டியிடும் என்று அறிவித்தோம். அங்கு, பா.ம.க., நிச்சயம் வெற்றி பெறும். ஈரோடு இடைத்தேர்தல் போல, விக்கிரவாண்டி தேர்தல் இருக்கக் கூடாது; மக்களை நம்பி தேர்தலில் நிற்கிறோம். பா.ம.க., நின்றாலும், பா.ஜ., நிற்பது போல் தான் எங்களின் வேலை இருக்கும். பா.ஜ., முழுவீச்சில் கூட்டணி கட்சி வெற்றிக்காக பணியாற்றும். டவுட் தனபாலு: ஈரோடு இடைத்தேர்தலில், ஆளுங்கட்சி, 100 கோடி ரூபாய் செலவழிச்சதா சொல்றாங்க... இப்ப, பா.ம.க., வலுவா இருக்கிற தொகுதியில, அதை விட வலுவா இருக்கிற நீங்களும் சேர்ந்துட்டதால, விக்கிரவாண்டி தொகுதியில் அடைமழை பெய்யுமோ, இல்லையோ, பணமழை கொட்டோ கொட்டுன்னு கொட்டும் என்பதில், 'டவுட்'டே இல்லை!பத்திரிகை செய்தி: தெலுங்கானாவில், முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையில், காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, நடப்பு கல்வியாண்டில் வழங்கப் பட்ட பள்ளி பாடப் புத்தகங்களில், முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவை, முதல்வர் என குறிப்பிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. டவுட் தனபாலு: எங்க ஊர் பள்ளி பாடப் புத்தகத்துல தான், முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைவு தேதியை தப்பா குறிப்பிட்டிருந்தாங்க... தெலுங்கானாவுலயும் இப்படி குளறுபடி பண்ணியிருக்காங்களே... எல்லா மாநில கல்வி துறையிலயும், 'கத்துக்குட்டி' அதிகாரிகள் சிலர் இருக்காங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!மத்திய, தகவல் ஒலிபரப்பு துறை இணை அமைச்சர் முருகன்: ஒலிபரப்பு துறை அமைச்சராக இருக்கிறேன். ஊடகத் துறையினருக்கு ஒரு வேண்டுகோள்... தவறான செய்திகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டாம். தவறான செய்திகளை பரப்பு வது, கொரோனாவை விட வேகமானது. இது, சமுதாயத்தில் மிக பெரிய கேடு விளைவிக்கும். டவுட் தனபாலு: கண்டிப்பாக... தவறான செய்திகளும், தகவல்களும் பெரும்பாலும் சமூக ஊடகங்களில் தான் பரப்பப்படுகின்றன... தகவல், ஒலிபரப்பு துறைக்கு ரெண்டாவது முறையா அமைச்சராகி இருக்கும் நீங்க, தவறான செய்திகளை பரப்பும் சமூக ஊடகங்களுக்கு கடிவாளம் போட்டால், 'டவுட்'டே இல்லாம, தங்களை பாராட்டலாம்!