தமிழக பா.ஜ., துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம்: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய சாவு குறித்து அமைக்கப்பட்ட ஒரு நபர் கமிஷன், கலெக்டர், எஸ்.பி.,யிடம் தான் முதலில் விசாரித்து இருக்க வேண்டும். மாறாக, கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர் வீட்டில் விசாரிக்கின்றனர். கள்ளச்சாராயம் இறப்பு சம்பந்தமாக, துறை அமைச்சர் முத்துசாமி மட்டுமின்றி, முதல்வர் ஸ்டாலினும் பதவி விலக வேண்டும். டவுட் தனபாலு: வாஸ்தவம் தானே... கலெக்டர் தானே, முதல்ல கள்ளச்சாராய சாவுகளே இல்லன்னு பகிரங்கமா பேட்டி தந்தாரு... அதனால, அவரிடமும் விசாரணை நடத்தினால் தானே, முழு உண்மையும் வெளிவரும்... ஆனா, அதெல்லாம் நடக்குமா என்பது, 'டவுட்'தான்!பீஹாரில் செயல்படும், லோக் ஜனசக்தி கட்சி தலைவரும், மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சருமான சிராக் பஸ்வான்: தோற்கப் போகும் தேர்தல்களில், தலித் தலைவர்களை வேட்பாளர்களாக அறிவிப்பது காங்கிரசின் வாடிக்கை. தற்போது, லோக்சபா சபாநாயகர் தேர்தலிலும் அதையே செய்து, அவரும் தோல்வி அடைந்துள்ளார். தலித் தலைவர்கள் என்ன வெறும் அடையாள வேட்பாளர்களா?டவுட் தனபாலு: வாஸ்தவம் தான்... காங்., கட்சியின் தேசிய தலைவராக, தலித் சமூகத்தை சேர்ந்த மல்லிகார்ஜுன கார்கேவை வச்சிருக்காங்க... ஆனா, அதிகாரம் முழுதும் சோனியா குடும்பத்தின் கையில் தானே இருக்குது... அந்த வகையில் நீங்க சொல்வதும், 'டவுட்'டே இல்லாத உண்மை தான்!தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா: கள்ளச்சாராயம் குடித்து இறப்பவர்களுக்கு முதல்வர் 10 லட்சம் ரூபாய் வழங்குகிறார். ஆனால், ராணுவ வீரர்கள், போலீசார் போன்ற மக்களுக்காக உழைப்பவர்கள் இறந்தால் கூட இதுபோன்ற நிதி வழங்குவது கிடையாது. மக்களின் வாய்களை மூட அதிக நிதி உதவி அளித்து, கள்ளச்சாராயம் குடிப்பதை ஊக்கப்படுத்தி வருகின்றனர்.டவுட் தனபாலு: தினமும் டாஸ்மாக் மது குடிச்சுட்டு வீட்டுல வந்து, 'ஏழரை'யை இழுக்கும் குடும்ப தலைவர்கள் சிலரிடம், 'கள்ளக்குறிச்சி போய் சாராயம் குடிச்சுட்டு வாயேன்... வீட்டு கஷ்டமாவது தீரும்'னு குடும்பத்தினர் புலம்புற அளவுக்கு தான் இந்த ஆட்சியின் நிர்வாகம் இருக்குது என்பதில், 'டவுட்'டே இல்லை!