அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: ஊழல்களில் திளைக்கும் காரணத்தால், முறையான திட்டங்களை வகுக்க முடியாமல், இயற்கை பேரிடர்களிலும் மக்களை காக்க முடியாமல், மக்களை அழிக்கிற சக்தியாக, தி.மு.க., அரசு மாறியிருக்கிறது. தி.மு.க., அரசின் கொடுங்கோன்மைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான நாள் நெருங்குகிறது. லோக்சபா தேர்தலில், தமிழக மக்கள், அ.தி.மு.க.,வை வெற்றி பெற செய்வர்.டவுட் தனபாலு: இன்றைய தேதி வரைக்கும், அ.தி.மு.க., கூட்டணிக்கு எந்த கட்சியுமே வரலை... புரட்சி பாரதம் கட்சியின் தயவை மட்டும் வச்சுக்கிட்டு, 39 தொகுதிகள்லயும் ஜெயிச்சிடலாம் என்ற நம்பிக்கையோட இருக்காரோ என்ற, 'டவுட்'தான் வருது!பத்திரிகை செய்தி: ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியும், சமீபத்தில் காங்கிரசில் இணைந்தவருமான ஒய்.எஸ்.ஷர்மிளா, ஆந்திர மாநில காங்., தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து அக்கட்சி வெளியிட்ட அறிக்கையில், 'ஆந்திர காங்கிரஸ் தலைவராக ஷர்மிளா நியமிக்கப்படுகிறார்; இந்த உத்தரவு உடனே அமலுக்கு வருகிறது. ஏற்கனவே, மாநில தலைவராக இருந்த ருத்ர ராஜு, காங்., செயற்குழுவில் சிறப்பு அழைப்பாளராக இருப்பார்' என குறிப்பிடப்பட்டுள்ளது.டவுட் தனபாலு: பல வருஷமாமாநில தலைவரா இருந்தவரை வீட்டுக்கு அனுப்பிட்டு, முந்தா நாள் கட்சிக்கு வந்த ஷர்மிளாவுக்கு நேத்து பதவி கொடுக்கிறாங்களே... இவங்களுக்கு, பாரம்பரிய காங்கிரசாரும், ருத்ர ராஜுவின் ஆதரவாளர்களும் ஒத்துழைப்பு தருவது, 'டவுட்'தான்!மத்திய தகவல் ஒலிபரப்பு துறை இணை அமைச்சர்முருகன்: தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, 'தி.மு.க., பைல் 1, 2, 3' என வரிசையாக வெளியிட்டுள்ளார். தி.மு.க., எந்த அளவுக்கு ஊழலில் ஊறிப் போய் உள்ளது என்பதை, அந்த வீடியோக்கள் காட்டுகின்றன. தி.மு.க., என்றால் ஊழல்; ஊழல் என்றால் தி.மு.க., என்று தான் அர்த்தம்.டவுட் தனபாலு: உங்க கட்சியின் மாநில தலைவரும், வரிசையா தி.மு.க., ஊழல் பைல்களை ரிலீஸ் பண்ணிட்டு தான் இருக்காரு... ஆனா, எந்த மாற்றமும் நடந்த மாதிரி தெரியலை... தி.மு.க.,வினரும் திருந்திய மாதிரி தெரியலை... இந்த கண்ணாமூச்சு, இன்னும் ரெண்டே கால் வருஷம் நீடிக்கும் என்பதில், 'டவுட்'டே இல்லை!