| ADDED : ஆக 13, 2024 01:09 AM
பீஜிங், சீனாவில், 10 ஆண்டுகளாக பரத நாட்டியம் பயின்ற, 13 வயது சிறுமி லெய் முசி, அங்கு முதல்முறையாக அரங்கேற்றம் செய்து புதிய சாதனை படைத்துள்ளார்.நம் அண்டை நாடான சீனாவில், நம் நாட்டு பாரம்பரிய கலைகள் மீது ஆர்வம் உள்ளவர்கள் அதிகம். இதன் காரணமாக இந்தியாவுக்கு வந்து கலைகளை கற்று தேர்ந்து செல்வதை சீனர்கள் வழக்கமாக வைத்துள்ளனர்.இந்த வரிசையில், 13 வயதான லெய் முசி என்ற சிறுமி புதிய சாதனை படைத்துள்ளார். இவர், சீனாவின் பிரபல பரத நாட்டிய கலைஞரான ஜின் ஷான் ஷான் என்பவர் நடத்தும் நாட்டிய பள்ளியில் 2014ல் சேர்ந்தார்.அங்கு, 10 ஆண்டுகள் பரத நாட்டியம் பயின்ற முசி, நேற்று முன்தினம் அரங்கேற்றம் செய்தார். சீனாவில் பரதம் பயின்று அந்த நாட்டில் அரங்கேற்றம் செய்யும் முதல் சீன கலைஞர் என்ற பெருமையை லெய் முசி பெற்றுள்ளார்.இவரது அரங்கேற்றத்தில் பங்கேற்ற பிரபல பரத நாட்டிய கலைஞரான லீலா சாம்சன், லெய் முசியின் நாட்டியத்தை வெகுவாக பாராட்டினார்.இந்த நிகழ்ச்சிக்காக சென்னையிலிருந்து சீனா சென்ற இசைக்குழுவினர், நாட்டிய அரங்கேற்றத்தில் பங்கேற்று நட்டுவாங்கம் பாடினர். சீனாவுக்கான இந்திய துாதர் பிரதீப் ராவத்தின் மனைவி ஸ்ருதி ராவத், அரங்கேற்றத்துக்கு தலைமை வகித்தார். இம்மாத இறுதியில் சென்னையில் நடக்கும் நாட்டிய நிகழ்ச்சியில் லெய் முசி பங்கேற்க உள்ளார்.