பல்லடம்:பல்லடம் அடுத்த, கேத்தனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி, 84; இயற்கை விவசாயி. தமிழக அரசின் நம்மாழ்வார் விருது உட்பட, பல்வேறு தனியார் அமைப்பு களின் விருதுகளையும் பெற்றுள்ள இவர், சமீபத்தில், உப்பு நீரை நன்னீராகும் எளிய வழிமுறையை கூறியது, விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.இயற்கை உயிர் சக்தி வேளாண்மை எனும் வேளாண் பஞ்சாங்கத்தை பயன்படுத்தி விவசாயம் செய்து, அதில் வெற்றியும் கண்டு வருகிறார்.இது குறித்து பழனிசாமி கூறியதாவது:நம் வாழ்க்கையில் நல்லது, கெட்டது எதுவாக இருந்தாலும் பஞ்சாங்கம், ஜாதகம் பார்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளோம். அதுபோல், விவசாயத்தில் சந்திரன் சூரியன், நட்சத்திரங்கள் ஆசி இருந்தால்தான் தொழில் சிறப்பாக நடக்கும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.இதற்கான ஒரு கால அட்டவணையை, தேனி மாவட்டம், பெரியகுளத்தை சேர்ந்த ஜெய்சன் ஜெரோம் என்பவர் தயாரித்துள்ளார். இந்திய உயிர்சக்தி வேளாண்மை கூட்டமைப்பு சார்பில் ஆண்டுதோறும் இந்த அட்டவணையை தயாரித்து வழங்கி வருகிறார்.காலம், நேரம், ராசி, நட்சத்திரம் பார்த்து பயிர் நடவு செய்வதால் நல்ல விளைச்சல் லாபம் பெற முடியும் என்பதை இதன் வாயிலாக உறுதியாக கூற முடியும். எந்த தேதியில், எந்த நாளில், நேரத்தில் என்னென்ன காய்கறிகள், பயிர்கள் நடவு செய்ய வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.பவுர்ணமிக்கு மூன்று நாள் முன் பூமியின் ஈரப்பதம் அதிகரிப்பதால், செடிகள் பூஞ்சை தாக்குதலில் இருந்து தப்பிக்கும். பவுர்ணமியின் போது கடலின் நீர் மட்டம் உயரும் என்பதால்தான் மீனவர்களை கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுவதும் இதற்கு உதாரணம்.இதுபோல், அமாவாசை அன்று விதை தானியங்களை சணல் பையில் சேமித்து வைப்பதால் மாதக்கணக்கில் கெடாமல் இருக்கும் என்பதை நம் முன்னோர்கள் பின்பற்றி வந்துள்ளனர். இவ்வாறு, நாள் நட்சத்திரத்துக்கு ஏற்ப காய்கறிகள், பயிர்களை பயிரிட்டு, நஷ்டமின்றி விவசாயம் செய்ய முடியும்.கடந்த, 35 ஆண்டுகளாக உயர் சக்தி வேளாண்மை அட்டவணையை பயன்படுத்தி நல்ல முறையில் இயற்கை விவசாயம் செய்து வருகிறேன். இது குறித்து அறிந்து கொள்ள விரும்பும் விவசாயிகள் 99439 79791 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.