நடராஜர் கோவிலில் பழமையான நுாலகம்; அந்த நாள் ஞாபகம்...நெஞ்சிலே வந்ததே...
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சோழர்கள் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட கோவில்கள், பக்தியின் வழியே மக்களிடம் அறக்கருத்துகளை விதைக்கும் இடமாகவும், பேரிடர் காலங்களில் மக்களை பாதுகாக்கும் இடமாகவும், கல்விக்கூடங்களாகவும், அன்னச்சத்திரங்களாகவும், மருத்துவமனைகளாகவும், ஆவணக் காப்பகங்களாகவும், நுாலகங்களாகவும் இருந்தன.சிதம்பரம் நடராஜர் கோவிலில் இருந்த பழமை வாய்ந்த நுாலகம், 'சரஸ்வதி பண்டாரம்' என அழைக்கப்பட்டது. சரஸ்வதி என்பது நுால்களையும், பண்டாரம் என்பது சேமிக்கின்ற இடம் அல்லது கருவூலம் என்ற பொருளாகும். கி.பி.1251 மற்றும் கி.பி.,1264ம் ஆண்டுகளைச் சேர்ந்த ஜடாவர்மன் சுந்தரபாண்டியனின் இரண்டு கல்வெட்டுகள், சரஸ்வதி பண்டாரத்தின் செயல்பாடுகள் குறித்து விவரிக்கிறது. இந்நுாலகத்தை முறையாக பராமரிக்கவும், வாசிக்கவும், அழிவின் விளிம்பில் உள்ள ஓலைச்சுவடிகளை நகல் எடுக்கவும், திவ்ய ஆகமம், புராணம், ஜோதிட சாஸ்திரங்கள் படிக்கவும், அதற்கான விளக்கங்களை எழுதவும், நுால்களை வாசிக்கும் போது ஏற்படும் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கவும் 20 பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு ஊதியமாக நெல்லும், பணமும் வழங்கப்பட்டதோடு, நிரந்தர வருமானத்திற்காக நிலங்களும் தானமாக அளிக்கப்பட்டன. 63 நாயன்மார்களின் வாழ்வியலையும், இறைத்தொண்டையும் கூறும் பெரிய புரராணம் நுாலை சேக்கிழார் சிதம்பரத்தில் தங்கி எழுதினார் என திருமுறை கண்ட புராணம் கூறுகிறது. அவர் சிதம்பரத்தை தேர்ந்தெடுக்க காரணம், நாயன்மார்களின் வரலாற்றை எழுதுவதற்கு தேவையான மூலங்களும், சைவ சமய தத்துவ நுால்களும் நிறைந்த நுாலகம் இருந்ததுதான். சேக்கிழார் இரண்டாம் குலோத்துங்கனின் அரசவையில் அமைச்சராக பணியாற்றியவர். ஆனால் கி.பி., 10ம் நூற்றாண்டில் நுாலகம் என்ன காரணத்தாலோ மூடப்பட்டது.பிறகு முதலாம் இராஜராஜ சோழன் மூடிக்கிடந்த சரஸ்வதி பண்டாரத்தைத் திறந்தான் என்பதை உமாபதி சிவாச்சாரியார், திருமுறை கண்ட புராணத்தில் 'பண்டாரம் திறந்து விட்டான் பரிவு கூர்ந்தான்' எனக் குறிப்பிடுகிறார். இதுகுறித்து வரலாற்று பேராசிரியர் சிவராமகிருஷ்ணன் கூறுகையில், 'நடராஜர் கோவிலில், சரஸ்வதி பண்டாரம் அமைந்திருந்த இடம் ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் காலத்து (கி.பி.,1264) கல்வெட்டின் மூலம் அறிய முடிகிறது. சரஸ்வதி பண்டாரம் குறித்து கூறப்படும் சுப்ரமணியர் சன்னதியின் வடபுறச்சுவரும், அம்பலத்தில் மேல்பால் தான் உள்ளது. நுாலகத்தின் மொத்த நிர்வாகத்தையும் மேற்பார்வை செய்ய நியமிக்கப்பட்டவர் சுவாமி தேவர். முதலாம் ராஜராஜ சோழனால் மீண்டும் திறக்கப்பட்டு மக்களின் செயல்பாட்டில் இருந்த நுாலகத்தை கண்டு வியந்த சுந்தர பாண்டியன், நுாலகத்தை பாதுகாக்க எண்ணி நுாலக பராமரிப்பிற்காக நிலங்களை தானமாக வழங்கினார். சோழருக்கும், ஜடாவர்மன் பாண்டியருக்கும் அரசியல் பகை இருந்தாலும், அறிவு பெருக்கத்தின் கருவூலமாக விளங்கிய சரஸ்வதி பண்டாரத்தை காப்பதில் இருந்த ஒற்றுமை ஆச்சரியப்பட வைக்கிறது.