உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / தேசம் எப்படி உருப்படும் ராகுல்?

தேசம் எப்படி உருப்படும் ராகுல்?

ஜி.சூரிய நாராயணன், விழுப்புரத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: உழைக்காமல் பெறும் ஒரு தொகைக்கு பெயர், எப்படி உரிமைத் தொகை? யாரோ சிலர் உழைத்து, அரசுக்கு வரி கட்டுகின்றனர்; அந்த தொகை தேசத்தின் வளர்ச்சிக்கு உபயோகப்படுத்தவும், ராணுவம் போன்றவற்றை பராமரிக்கவும், நாட்டின் கட்டுமானங்களை நிர்வகிக்கவும் பயன்பெற வேண்டும். அதில் இருந்து ஒரு பகுதியை, யார் யாருக்கோ காலம் முழுவதும் கொடுப்பதும், அதற்கு உரிமைத் தொகை என்று பெயர் வைப்பதும், உழைப்பை கேவலப்படுத்துவதாகும். ஒரு காலக் கட்டத்தில், உரிமைத் தொகை என்ற பெயரில், உழைக்காத சோம்பேறிகள் பணம் பெற்றுக் கொண்டு இருப்பர்; வழக்கம் போல், உழைப்பவன் உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும். அடுத்தவருக்கு அள்ளி கொடுக்க, நாம் ஏன் உழைக்க வேண்டும் என்று உழைக்கும் வர்க்கம் நினைத்தால், நாடு தாங்காது.தேர்தலில் ஜெயிக்க, இலவசங்களை அள்ளி வழங்குவது பித்தலாட்டம். தானாகவே நடக்க வேண்டிய குழந்தைக்கு, 'வாக்கர்' கொடுத்தால், கால் இருந்தும், வாழ்நாள் முழுதும் ஊனமாக தானே இருக்கும்?மாநில அரசு தான் இப்படி இலவசங்கள் கொடுத்து கெடுக்கிறது என்றால், 'மத்திய அரசாக நாங்கள் வந்தால்...' என்று ராகுல் சொல்வது அதை விட கேவலம். 'இளைஞர்களே... நீங்கள் வேலை செய்ய வேண்டாம். முகநுாலைப் பாருங்கள்; இன்ஸ்டா பாருங்கள். கவலைப் படாதீர்கள்; வருடத்திற்கு 1 லட்சம் ரூபாய், அதாவது, மாதம் கிட்டத்தட்ட 8,500 ரூபாய் 'டக்டக்'கென்று, உங்கள் வங்கிக் கணக்கில் வந்து விழும்' என்கிறார். உலகின் அதிக இளைஞர் சக்தி கொண்ட நாட்டில், இப்படி ஒரு தலைவர், அதுவும் நாட்டின் பெயரை கூட்டணி பெயராக வைத்துக் கொண்டு பேசினால்,தேசம் எப்படி உருப்படும்?

'ரிமோட்'டிலிருந்தே ஓட்டளிக்கலாமே!

டி.டேவிட் தாரீஸ், மணப்பாறை, திருச்சி மாவட்டத்திலிருந்து இருந்து அனுப்பிய, 'இ -- மெயில்' கடிதம்: 'சொந்த ஊருக்கு சென்று ஓட்டளிக்க, செலவும், கால நேரமும் அதிகமாவதால் பலர் ஓட்டளிக்க முடியாமல் இருப்பது, வேதனையான விஷயம்' என தே.மு.தி.க., பொது செயலர் பிரேமலதா அறிக்கை விடுத்துள்ளார்.உற்று கவனித்தால் இவரின் கூற்றில் உண்மை அடங்கி உள்ளது புலப்படும்.சென்னையிலிருந்து ஒருவர் மதுரைக்கு வந்து தன் ஓட்டை பதிவு செய்ய ஆகும் செலவு, 2,000 ரூபாய். தவிர, பயணக் களைப்பு, விடுமுறை, உடல் நலம் என பல சிக்கல்களும் ஏற்படுகின்றன.இதையெல்லாம் யோசிக்காமல், 100 சதவீத ஓட்டுப் பதிவு என்ற வெற்று கோஷத்தைப் பரப்ப, பல கோடி ரூபாய் செலவு செய்கிறது தேர்தல் ஆணையம்.'ஆன்லைனில்' உணவுகளை, 'ஆர்டர்' செய்து, கையில் வந்தவுடன் அமர்ந்தபடியே உண்ணும் இந்த நவீன யுகத்தில், ஓட்டளிக்க மட்டும் உரிய இடத்திற்கு மட்டும் தான் செல்ல வேண்டும் என்ற பிற்போக்கு சிந்தனை ஏன் இதுவரை மாறவில்லை என்பது புரியாத புதிர்.ஆதார் கார்டில், கை ரேகை முதல் கண் கருவிழி வரை தனி மனிதனின் அடையாளங்களை பதிந்தும் எந்த பயனும் இல்லை என்ற ரீதியிலேயே, இந்த ஓட்டளிப்பு முறை உள்ளது என்பது வேதனை.பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், போக்குவரத்து தொடர்பான பரிமாற்றம், திருமண நிகழ்வுகளைக் கூட, தொலைதுாரத்திலிருந்து கண்டு களிக்கும் வகையிலான வசதிகள் இருக்கும்போது, ஓட்டளிப்பை மட்டும் ஏன், ஆதிகால மனிதன் போல் செய்கிறோம்?இந்தமுறை, தேர்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு, அவரவர் பணிபுரிந்த சாவடியிலேயே ஓட்டளிக்கும் புதிய முறை செயல்படுத்தப்பட்டுள்ளது பாராட்டத்தக்கது. அதேபோல் பிற இடங்களில் பிழைப்பு நடத்த செல்லும் மக்களின் ஓட்டையும், அருகில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் பதியும் வகையில், தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்யலாமே!

பிறழ்சாட்சிகளை தண்டிக்க வேண்டும்!

ஆர்.வித்யாசாகர், அருப்புக்கோட்டையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அமைச்சர் பொன்முடிக்கு எதிராக, 2012-ல் ஆளுங்கட்சியாக இருந்த அ.தி.மு.,கவால், செம்மண் குவாரி வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில், அரசு தரப்பில் சாட்சிகளாக சேர்க்கப்பட்ட 67 பேரில், 25 பேர் விசாரிக்கப்பட்டுள்ளனர்; அவர்களில் 21 பேர் பிறழ்சாட்சிகளாக மாறியிருக்கின்றனர். ஆட்சி மாறியதும் சாட்சிகளும் மாறிவிட்டனர்.குற்றவாளிக்கெதிராக சாட்சி சொல்லிவிட்டு, அடுத்த விசாரணையின்போது, 'இவரை நான் பார்த்ததேயில்லை. இவர் செய்த குற்றத்தைப் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது' என்று பல்டி அடிப்பவர் தான், பிறழ்சாட்சி என்றழைக்கப்படுகிறார். நீதிமன்றத்தில் சாட்சிகள்,சாட்சிக் கூண்டில் ஏறியுஉடன், 'சொல்வதெல்லாம் உண்மை; உண்மையைத் தவிர ஏதுமில்லை' என்று சத்தியம் செய்து விட்டு தான் சாட்சியம் அளிக்கின்றனர். காலப்போக்கில், சாட்சியத்தை மாற்றி சொல்கின்றனர்.ஒரு வழக்கு, 10 ஆண்டு களுக்கு மேல் நடந்து கொண்டே இருந்தால், சாட்சிகளை பல்டியடிக்க வைப்பது, அத்தனை கடினமான காரியமில்லை. ஆகையால் தான், முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில், குற்றவாளி, வி.வி.ஐ.பி.,யாக இருந்தாலும், ஜாமின் மறுக்கப்படுகிறது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இதற்கு ஒரு உதாரணம்.ஒருவர், குற்றம் சாட்டப்பட்டவருக்கெதிராக சாட்சியம் அளித்துவிட்டு, பிறழ்சாட்சியாக மாறுவதற்கு, இரண்டு காரணங்கள் தான் இருக்க முடியும். ஒன்று, பிரதியின் மூலம் தனக்கு அனுகூலமான காரியம் நடந்திருக்கலாம் அல்லது குற்றம் சுமத்தப்பட்டவர் மிகுந்த செல்வாக்குள்ளவராயின் தனக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்ற பயம் காரணமாக இருக்கலாம்.ஒருவர் பிறழ் சாட்சியாக மாறிவிட்டால், குற்றம் சாட்டப்பட்டவரின் வக்கீல்,அவரிடம் குறுக்கு விசாரணை செய்ய வேண்டிய அவசியமில்லை. ஆனால் அரசு வழக்கறிஞர், குறுக்கு விசாரணை மேற்கொள்ளலாம். இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம், பிரிவு 164-ன்படி, பிறழ் சாட்சியாக மாறினால், நீதிமன்ற அவமதிப்புக்கு ஆளாக நேரிடும்; இது தண்டனைக்குரிய குற்றமும்கூட. கடந்த, 2015-ல், சேலத்தில் நடந்த கோகுல்ராஜ் கொலை வழக்கில், முக்கிய சாட்சியாக இருந்த இளம்பெண் சுவாதி, பிறழ்சாட்சியாக மாறியதற்காக, நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின்கீழ் அவர்மீது நடவடிக்கை எடுக்குமாறு, கோர்ட் உத்தரவிட்டது. பொன்முடி அமைச்சராக இருப்பதால், மீதமுள்ள சாட்சிகள் எப்படி சாட்சியம் அளிக்கப் போகின்றனர் என்பதை, பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஏற்கனவே பல்டியடித்த சாட்சிகள் மீதும், அவர்கள் பிறழ்சாட்சியாக மாறக் காரணமானவர் மீதும், சட்டபடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

venkatakrishna
ஏப் 29, 2024 07:15

ராகுல் எந்த சூழ்நிலையில் இதை கூறுகிறார் என்று தெரியவில்லை இவர் பார்ப்பதோ பகுதி நேர வேலை இந்த தேர்தல் முடிந்தவுடன் லண்டன், அம்மா ஊரான இத்தாலி என்று கிளம்பி விடுவார்


shyamnats
ஏப் 30, 2024 12:31

எப்படியும் பதவிக்கு வரப்போவதில்லை என்ற தைரியம்தான் மக்களும் இத்தாலி குடும்பத்திற்கு வாக்களிக்க போவதில்லை எப்படியானாலும், உழைப்பை தடுக்கும் இலவசங்கள் வேண்டாம்


spr
ஏப் 28, 2024 18:57

குற்றங்கள் அறவே குறைய வாய்ப்பில்லை ஆனால் ஓரளவு குற்றங்கள் குறைய வேண்டுமானால் "தவறு செய்தால் இறைவன் தண்டிப்பான் அது பாவம் என்ற எண்ணம் அவரவர் மனதில் இருந்தால் ஒரு விழுக்காடு குறையும் இதனைப் பெற்றோர்கள் உருவாக்க வேண்டும் சமுதாயம் தங்களை விலக்கி வைக்கும் உறவு முறைகள் ஒதுக்கி வைக்குமென்ற எண்ணம் வலுப்பட்டால் இன்னுமொரு விழுக்காடு குறையும் இதனைச் சமுதாயமும் குடும்பமும் உறுதி செய்ய வேண்டும் காவற்துறை கைது செய்யும் கடுமையான தண்டனை கிடைக்கும் உடலும் மனமும் வேதனைப்படும் என்ற நிலை வந்தால் ஒரு விழுக்காடு குற்றங்கள் குறையும் இந்த விழிப்புணர்வை ஆசிரியர்கள் அரசாங்கம் நீதிமன்றங்கள் உருவாக்க வேண்டும் மீதமுள்ள விழுக்காடு தண்டித்தால்தான் திருந்தும் இதனை நீதிமன்றங்களும் மக்களும் ஊடகங்களும் செய்ய வேண்டும் குற்றம் நிரூப்பிக்கப்பட்டவர்களை கதாநாயகர்களாக சித்தரிப்பதனை கைவிட வேண்டும் இந்த நிலை இல்லையென்றால் குற்றங்கள் அதிகரிக்கும் இது நடைமுறை உண்மை


spr
ஏப் 28, 2024 18:46

"ஆன்-லைன்" வாக்குப்பதிவு என்பது அவரவர் இருக்குமிடத்திலிருந்தே அவரது சொந்த ஊரில், முகவரியை மாற்றல் செய்யாமல் வாக்களிப்பது இப்பொழுது அப்படி வசதியில்லை என்பதுதான் பிரச்சினை "ஆன்-லைன்" முறையில் பதிவு செய்ய முகவரியை மாற்ற மட்டுமே முடியும் வாக்களிக்க நேரிலேதான் செல்ல வேண்டும் ஆதார் ஒருமுறை கைபேசி அழைப்பினால் உறுதி எய்வது என வசதிகள் இருக்கும் வகையில், பல "டிஜிட்டல்" சாதனைகளை செய்து வரும் மோடி அரசுக்கு இது ஒரு பெரிய விஷயமல்ல அடுத்த ஆட்சிக்காலத்தில் சாதிப்பார் என நம்புவோம் உலகிலேயே மின்னணு சாதனம் மூலம் வாக்களிப்பது இந்தியாவில் மட்டுமே சாத்தியம் என்றால் இது ஒரு பெரிய விஷயமா? வயதானவர்கள், நோயாளிகள் வேலைப் பளுவால் நேரில் வாக்களிக்க முடியாதவர்களுக்கு இது பெரிதும் பயன்படும் தேர்தல் ஆணையம் சிந்திக்கட்டும்


Anantharaman Srinivasan
ஏப் 28, 2024 14:25

அது உரிமை தொகை அல்ல உழைப்பை கெடுக்கும் தொகை அதை பெறுவதை கேவலமாக நினைக்க வேண்டும்


VENKATASUBRAMANIAN
ஏப் 28, 2024 08:47

எதற்கு சொந்த ஊர் போகவேண்டும் ஆன்லைனில் உடனே இருக்கும் இடத்தில் மாற்றிக்கொள்ளலாம் e வோட்டர் டவுன்லோட் செய்து கொள்ளலாம் சும்மா வோட்டு போடாமல் இருப்பதிற்கு சாக்கு நிறைய பேர் மூன்று நாட்கள் லீலிவில் ஊர் சுற்ற போய்விட்டனர் படித்த முட்டாள்கள் இதுதான் உண்மை


Dharmavaan
ஏப் 28, 2024 07:43

இலவசங்கள் தன் சொந்த பணத்தில் கொடுக்க வேண்டுமே தவிர பொதுப்பணத்தில் கூடாது இதை வாக்குறுதியாக கொடுக்கும் கட்சிகளை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்


Dharmavaan
ஏப் 28, 2024 07:41

எதிர் கட்சிகள் பொன்முடி பிறழ் சாட்சியங்களை தடிக்க வழக்கு தொடுக்க வேண்டும்


D.Ambujavalli
ஏப் 28, 2024 06:58

மத்தியில் நேருவோ, இந்திராவோ மற்றவர்களோ இலவசம் கொடுக்கவில்லை 'Rob Peter to pay Paul ' என்பது போல் ஆண்டு பூரா உழைத்து குடும்பத்தைக்காப்பவர்களின் வரிப்பணத்தை பறித்து சலுகைகளைக்கூட உரிமைக்யாக்கி மக்களை சோம்பேறிகள் / குடி போதையாளர்கள் ஆக்கும் அரசை துரோக அரசு என்பதே பொருந்தும்


Kalaiselvan Periasamy
ஏப் 28, 2024 06:05

அருமையாகச் சொன்னீர் இது [போன்ற அரசியல் வாதிகளை இந்தியாவை விட்டே விரட்ட வேண்டும் இல்லையேல் இந்தியா சோம்பேறிகள் மற்றும் பிச்சைக்காரர்கள் நிறைந்த கழிசடை நாடாகி விடும் மக்களே இந்த புண்ணிய பூமியின் மகத்துவத்தை தவறான அரசியல் சாக்கடைகளுக்கு ஒட்டு போட்டு பாவத்திற்கு உடந்தையாகி விடாதீர்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை