உள்ளூர் செய்திகள்

இது உங்கள் இடம்

விடுவிப்பாரா வீரமணி?

டாக்டர்.ரா.அசோகன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: 'பரமக்குடி கலவர துப்பாக்கிச்சூட்டில் இறந்த ஆறு பேருக்கு, முதல்வர் அறிவித்துள்ள ஒரு லட்ச ரூபாய் இழப்பீடு தொகையை ,கூடுதலாகத் தர வேண்டும் என்பது அவசர அவசியம். உடனே, இழப்பீடு தொகையை 10 லட்ச ரூபாயாக உயர்த்தித் தர வேண்டும்' என, ஈ.வெ.ரா.,வின் ஈதலால் கிடைத்த ஓசி, 'ஏசி'யில் உட்கார்ந்து உதார் விட்டுள்ளார், தஞ்சை வல்லம் ஏரியா புறம்போக்கு நில புண்ணிய கோடி, தி.க., வீரமணி. எச்சில் கையால் காக்காவை விரட்டாதவருக்கு, வீராப்பு அதிகம் தான்.'பெரியாரிடம் ஒரு லட்ச ரூபாயை தமிழர்கள் அன்பளிப்பு அளித்தால், அந்தப் பணத்தில், ஒரு பைசாவை கூட தன் சுயநலத்திற்குப் பயன்படுத்தாமல், அப்பணத்தை அப்படியே, தமிழர்களின் நன்மைக்கு பயன்படுத்துவார். ஆகவே, பெரியாரை நம்பி எவ்வளவு பணத்தையும் தமிழர்கள் நன்கொடை செய்யத் தயங்க வேண்டாம்' என்று, பல முறை, மனமாச்சரியம் இன்றி ஈ.வெ.ரா.,வைப் பற்றி, ராஜாஜி புகழ்ந்துள்ளார்.

ஆனால், ஈ.வெ.ரா.,விட இருந்த பல்லாயிரங்கோடி அசையும், அசையா சொத்துக்களை அப்படியே தனதாக்கிக் கொண்டு, இன்று வரை ஒரு பைசாவை கூட தமிழர்களுக்குத் தராமல், தானும், தனது குடும்பத்தினர் மட்டுமே ஆண்டு அனுபவித்து வரத் தோதாக, ஈ.வெ.ரா.,வின் சொத்துக்களுக்கு, தன் ஒரே மகனைத் தாளாளராக்கி, தமிழர்களை இழிவுபடுத்தி வருகிறார் வீரமணி.இந்த இழிநிலையில், 'இழப்பீடு தொகையை 10 லட்ச ரூபாயாக உயர்த்த வேண்டும்...' என்று, கூப்பாடு போடுகிறார். அவரின் கூற்றுப்படி, ஏற்கனவே தமிழக அரசிடம் ஒரு லட்சம் ரூபாயை இழப்பீடாகப் பெற்ற, அந்த ஆறு தமிழ்க் குடும்பத்திற்கு, தலா ஒன்பது லட்ச ரூபாய் வீதம், 54 லட்ச ரூபாயை, ஈ.வெ.ரா., கஜானாவிலிருந்து விடுவிப்பாரா வீரமணி?கிழக்கே உதிக்கும் சூரியன், மேற்கே உதித்தாலும் உதிக்கும்; வீரமணி ஒரு பைசா கூட ஈயமாட்டார்!

ஜோராகை தட்டுங்கள்!

கே.எஸ். குமார், விழுப்புரத்திலிருந்து எழுதுகிறார்: ரயில் விபத்து ஏற்பட்டால், அமைச்சர் விரைந்து சென்று பார்வையிடுவார்; 5 லட்ச ரூபாய் இழப்பீடு இத்யாதி, இத்யாதி அறிவிப்பார். பயங்கரவாதிகள் தாக்குதல், உயிர்ப்பலி என்றால், 'மிகவும் கோழைத்தனமானது; அனுமதிக்க முடியாது' என்பார் அமைச்சர். உயிரிழந்தோருக்கு இழப்பீடு; அனுதாபம் என, ஆளுவோர் பல நாடகங்களை அரங்கேற்றுவர்.

இரண்டு நாட்களில், நாம் எல்லாரும் இவற்றை மறந்து விடுவோம். அத்துடன் அடுத்த விபத்து, குண்டு வெடிப்பு நடக்கும் போது, மனப்பாடமாக ஒப்புவிக்கக் கூடிய அளவுக்கு அமைச்சர்களின் வசனங்களை அறிவோம்! இந்தியாவில் இதெல்லாம் அன்றாட நிகழ்வுகள். இவற்றுடன் லேட்டஸ்டாக இணைந்துள்ள விஷயம் பெட்ரோல், டீசல் விலையேற்றம். கடந்த மே மாதம் ஐந்து ரூபாய் ஏற்றியவர்கள், இந்த செப்டம்பரில், 'கருணை உள்ளத்தோடு' மூன்று ரூபாய் மட்டுமே ஏற்றியிருக்கின்றனர். எதிர்க்கட்சியினர் ஒரு வாரம் கத்திவிட்டு விட்டு விடுவர்! நீங்கள் வேண்டுமானால் பாருங்கள்... இன்னும் சில மாதங்களில், பெட்ரோல் விலை, 'செஞ்சுரி' அடித்து விடும்! காஸ் விலையை, 800 ரூபாய் ஆக்குவதற்கு, படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறார் பிரணாப் முகர்ஜி! தற்காலிகமாக ஒத்திப்போட்டது, அடுத்த வாரம் அமல்படுத்தப்பட்டால் ஆச்சரியமில்லை.என்ன விலைவாசி ஏறினாலும் சகித்துக் கொண்டு அடிமை வாழ்க்கை வாழ்ந்து குட்டிச் சுவராய் போகிறது நடுத்தர வர்க்கம். இது தான், பொருளாதார மேதையின் தலைமை சாதித்தது! இந்தியா வல்லரசாகிறது... எல்லாரும் ஒரு தரம் ஜோரா கைத்தட்டுங்க பார்க்கலாம்.

கட்டாயப்படுத்தக்கூடாது!க.ஸ்ரீதரன், கல்லிடைக்குறிச்சியிலிருந்து எழுதுகிறார்: தபால் துறை அறிமுகப்படுத்தியுள்ள, பி.எல்.ஐ., (போஸ்டல் லைப் இன்சூரன்ஸ்) என்ற ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில், வாடிக்கையாளர் பலரும் சேர்ந்துள்ளனர். தபால் துறையின் இவ்வகை காப்பீட்டிற்கு, முகவர்கள் கிடையாது. தபால் துறையைத் தான், நேரிடையாக அணுக வேண்டும்.இத்திட்டத்தில் சேர, எந்த ஒரு வாடிக்கையாளரும், தபால் துறையை நேரிடையாக அணுகுவதில்லை. தற்சமயம், இத்திட்டம், 'ஆமை' வேகத்தில் தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.பி.எல்.ஐ., திட்டத்தை, 'அசுர' வேகத்தில் செயல்படுத்த, தபால் துறை உயரதிகாரிகள், ஒவ்வொரு தபால் அலுவலகத்திற்கும் வாய்மொழி உத்தரவிட்டுள்ளதாகத் தெரிகிறது. குறிப்பாக, தபால் துறை முகவர்களை கட்டாயப்படுத்தவும், முகவர்கள், பி.எல்.ஐ., காப்பீடு எடுத்தே ஆக வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.

இந்நிலை, தவறான அணுகுமுறை. எந்த ஒரு செயலுக்கும் கட்டாயப்படுத்துவது ஏற்புடையதல்ல. தபால் துறை முகவர்கள், லட்சாதிபதிகள் அல்ல. அன்றாடம் கூலி வேலை பார்ப்பவர்கள் போல் தான், அவர்கள் உழைத்துக் கொண்டிருக்கின்றனர். இத்திட்டத்தை ஆரம்ப முதலே முகவர்களிடம் ஒப்படைத்திருந்தால், வாடிக்கையாளர்களிடம் செயல் திட்டத்தை விளக்கி, பி.எல்.ஐ., திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி இருப்பர்.பாதுகாப்பு கருதி, பலரும் இன்சூரன்ஸ் செய்திருக்கும் நிலையில், அவர்களை மீண்டும் இன்சூர் செய்யக் கட்டாயப்படுத்துவது சரியல்ல.எந்த ஒரு மனிதனும், தன் பாதுகாப்பையும், குடும்ப பாதுகாப்பையும், அவனே தான் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். நிர்வாகம் கட்டாயப்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும்.

எங்களுக்குஎண்ணமில்லை!

ரா.சந்தான கிருஷ்ணன், சின்ன காஞ்சிபுரத்திலிருந்து எழுதுகிறார்: சர்வதேச மார்க்கெட்டில், அமெரிக்க டாலருக்கு நிகரான, இந்திய ரூபாய் மதிப்பு குறைந்துவிட்டதால், கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் போது, எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பைத் தடுக்க, பெட்ரோல் விலையை உயர்த்தியது மத்திய அரசு.இப்படி விலையேற்றியும், இவ்வாண்டு மத்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு பல்வேறு விற்பனை வகையில், 1 லட்சத்து 21 ஆயிரத்து 571 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என, கணக்கிடப்பட்டுள்ளதாம்.

எனக்கொரு சந்தேகம்...நமக்கு எண்ணெய் வழங்கி வரும் மத்திய அரசு நிறுவனங்கள் நவரத்னா, மஹாரத்னா என்ற சிறப்பு தகுதியுடன் செயல்படுகின்றன என்பது அனைவரும் அறிந்ததே. இப்படியொரு தகுதியைப் பெற அரசு வகுத்துள்ள தகுதிகள்: மஹாரத்னாவிற்கு, நிறுவனமொன்று தொடர்ந்து மூன்று ஆண்டுகள், ஐந்தாயிரம் கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டியிருந்தல் வேண்டும். நவரத்னாவிற்கு, 25 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் ஈட்டியிருக்க வேண்டும்.

இப்படியொரு தகுதியிருக்கும் பட்சத்தில், நிறுவனங்கள் இழப்பைச் சந்தித்தால், தகுதிகளை ரத்து செய்ய வேண்டியது தானே! தகவல்கள் வந்தும், கறுப்புப் பணம் வைத்திருப்போர் பட்டியலை வெளியிட, மந்திரக்கோல் இல்லையாம். இரண்டு லட்ச கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்தோர் மீது, நடவடிக்கை இல்லையாம். விலைவாசி, ஊழல், லஞ்சம் போன்றவற்றை ஒழிக்கவும் மந்திரக்கோல் இல்லையாம்!உங்களிடம் மந்திரகோல் இல்லை; எங்களிடம், மீண்டும் தேர்ந்தெடுக்கும் எண்ணமில்லை!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ