உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / உச்ச நீதிமன்றத்தில் முன்னுரிமை கொடுங்கள்!

உச்ச நீதிமன்றத்தில் முன்னுரிமை கொடுங்கள்!

அ.குணசேகரன், வழக்கறிஞர், புவனகிரி, கடலுார் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'காலம் தாழ்ந்து கிடைக்கும் நீதி மறுக்கப்பட்ட நீதி' என்று சொல்லப்படுவதுண்டு. உதாரணமாக ஒரு சிவில் அல்லது கிரிமினல் வழக்குகள் கீழமை நீதிமன்றங்களில் தொடர்ந்து நடத்தப்பட்டால், அந்த வழக்கு முடிய குறைந்தது மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் ஆகிவிடுகின்றன.தமிழகத்தில் கீழமை நீதிமன்றங்களில், 300 முதல் -350 நீதிபதி பணியிடங்கள் சில ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருப்பதால், ஒட்டுமொத்த நீதிமன்ற பணிகள் முடங்கி கிடக்கின்றன. ஒரு நீதிபதியே ஒன்றுக்கு மேற்பட்ட நீதிமன்ற பணிகளை சுமக்கும் அவலம் உள்ளது. இந்த நீதிபதி காலியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் கடந்த ஆண்டு தேர்வு நடத்தப்பட்டது. மூன்று கட்டமாக தேர்வுகளை சந்தித்த 12,000 இளம் வழக்கறிஞர்களில் இருந்து இறுதியில், 245 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.ஆனால், அந்த தேர்வில் சரியான இட ஒதுக்கீடு சலுகைகள் கடைப்பிடிக்கவில்லை என்று பாதிக்கப்பட்ட சில வழக்கறிஞர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதன்படி புதிய இடஒதுக்கீடு பட்டியல் தயார் செய்யப்பட்டு, நீதிபதிகள் இந்த மே மாதத்தில் பணியில் சேர்ந்து விடுவர் என்று தமிழகம் முழுதும் வழக்காடிகள் மற்றும் வழக்கறிஞர்கள் நம்பிக்கையுடன் காத்திருந்தனர்.ஆனால், இந்த புதிய நீதிபதிகள் தேர்வு முடிவுகளில் திருப்தி அடையாத சிலர், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு சென்று விட்டதால், புதிய நீதிபதிகள் பணியில் சேர்வது நின்று விட்டது. இதனால், கீழமை நீதிமன்ற செயல்பாடுகள் முடங்கி கிடக்கின்றன.பொதுவாக ஒரு நீதிபதி, ஒரு நீதிமன்றத்தில் மூன்று ஆண்டுகள் மட்டுமே பணியில் இருப்பார். பின் பணியிட மாறுதல் செய்யப்படுவது வழக்கம். ஆனால், தற்போது அந்த நடைமுறையையும் கடைப்பிடிக்க முடியவில்லை.ஏனெனில், கீழமை நீதிமன்றங்களில் நிரப்பப்படாமல் உள்ள நீதிபதி பணியிடங்களால், ஏற்கனவே பணியில் உள்ள மூத்த நீதிபதிகள் பணி உயர்வு முதல் பணியிட மாறுதல் வரை பெற முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.எனவே, உச்ச நீதிமன்றம், இந்த நீதிபதிகள் தேர்வு சம்பந்தப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை முன்னுரிமை கொடுத்து விசாரித்து, ஒரு சில வாரங்களில் தீர்ப்பு வழங்க வேண்டும். இல்லையென்றால், தமிழகத்தில் கீழமை நீதிமன்றங்களில் ஒட்டுமொத்த செயல்பாடுகளும் பாதிக்கப்படும்.

ராகுலுக்கு டியூஷன் மாஸ்டர் தேவை!

சுப்ர அனந்தராமன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'அரசியலமைப்பை மாற்றும் பா.ஜ.க.,வின் முயற்சிகளை, 'இண்டியா' கூட்டணி தகர்க்கும்' என்கிறார் காங்., ராகுல்.இன்னமும் ராகுல், 'பச்சப்புள்ள'யாகவே இருப்பதை நினைத்து சிரிப்பு வருகிறது. நம் அரசியல் நிர்ணயச் சட்டத்தை இயற்றி வடிவமைத்தவர்களே, இந்த அரசியலமைப்பு ஏற்பாட்டை, காலத்துக்கு ஏற்றபடி மாற்றங்கள் செய்து கொள்ளலாம் என்று, அதே அரசியலமைப்புச் சட்டத்திலேயே சுதந்திரம் அளித்துள்ளனர். ஆனால், நிபந்தனைகள் உண்டு.இந்த விபரம் ராகுலுக்குத் தெரியவில்லை. அரசியலமைப்புச் சட்டத்தை முழுக்கப் படித்துள்ளவர்களுக்கு இது தெரியும். நேருவின் கொள்ளுப் பேரன், இந்திராவின் பேரன், ராஜிவின் மகன் என்ற இந்த தகுதிகளைத் தவிர, அரசியல்வாதி என்ற முறையில், ராகுலுக்கு வேறு எந்த தகுதியும் இல்லை என்பதை, நாட்டு மக்கள் அறிவர்.இப்போது இருக்கும் அரசியலமைப்புச் சட்டம், ஏகப்பட்ட திருத்தங்களைக் கண்டு, இடிந்த கோவிலாக இருக்கிறது. புதிய அரசியலமைப்பு ஏற்பாட்டைச் செய்ய, பார்லி.,யின் இரு சபைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஒப்புதல் வேண்டும். மூன்றாம் முறையாக மோடி ஆட்சிக்கு வந்தால், இந்த கோவில் சரிசெய்யப்படும் என நம்பலாம். அதுவரை, ராகுலுக்கு நல்ல டியூஷன் மாஸ்டர் தேவை!

புரிதல் இல்லாமல் பேசாதீர்கள்!

ஜெயராமன் கல்யாணசுந்தரம், பெங்களூரில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: இப்பகுதியில் சென்னை வாசகர் ஜி.ரங்கராஜன் எழுதிய, 'சிந்தித்து பாருங்கள் இளையராஜா' என்ற கடிதத்தில் இளையராஜா நன்றி மறந்தவர் என்றும், தவறு செய்கிறார் என்றும் என்னென்னவோ எழுதி இருந்தார். 'காப்பிரைட்ஸ்' பற்றிய சிறு புரிதல் இருக்குமாயின், இளையராஜாவின் நிலைப்பாடு விளங்கும். வெகுஜனங்களின் பார்வையில் எழும் சாதாரண கேள்வி, 'சம்பளம் வாங்கிட்டாருல்ல... அப்புறம் எதுக்கு காப்பிரைட்ஸ்னு பணத்துக்கு அலையுறார்' என்பது தான். ஆமாம்... சம்பளம் வாங்கியதும் இசையமைப்பாளரின் வேலை முடிந்து விட்டது. அதன்பின் அந்த பாடலுக்கும், அவருக்கும் எந்த உரிமையும் இல்லை. 1980களுக்கு முன்பு வரை இளையராஜாவின் பாடல்களுக்கு இதுதான் நிலைமை. அந்த பாடல்களின் காப்பிரைட்ஸ், 'கிராமபோன், இண்டிகோ' ஆகிய கம்பெனிகளிடமே உள்ளன. ஏனென்றால் இளையராஜாவுக்கு சம்பளம் கொடுத்த தயாரிப்பாளர், பாடல்களின் உரிமையை இந்த இரண்டு கம்பெனிகளுக்கும் விற்று விட்டனர்.தன் பாடல்களுக்கு இருக்கும் வரவேற்பையும், அதன் வாயிலாக கிடைக்கும் பணத்தையும் பார்த்து, 80களின் துவக்கத்தில் இளையராஜாவே, 'எக்கோ' என்ற ஆடியோ நிறுவனத்தையும் பின்னாளில், 'ராஜா' என்ற ஆடியோ நிறுவனத்தையும் துவக்குகிறார். அந்த நிறுவனங்கள், இளையராஜா, கங்கை அமரன், டி.ராஜேந்தர் உள்ளிட்ட பல்வேறு இசையமைப்பாளர்கள் இசையமைத்த படங்களின் ஆடியோ உரிமையை தயாரிப்பாளர்களிடம் வாங்குகின்றன.அப்போது இருந்த நடைமுறையின்படி கேசட், ரெக்கார்ட் விற்பனையில் கவனம் செலுத்தியவர்கள், இதையெல்லாம் முறையாக ஆவணப்படுத்த தவறிவிட்டது தான் இளையராஜா செய்த மாபெரும் பிழை. அவரது பிழையை பயன்படுத்தி, உடன் இருந்தவர்கள் அவரை ஏமாற்றி, எக்கோ நிறுவனத்தை கையகப்படுத்தினர்.கலைப்புலி தாணு, தயாரிப்பாளர் சங்க தலைவராக இருந்தபோது, எக்கோ நிறுவனம் வெளியிட்ட பெரும்பாலான படங்களின் தயாரிப்பாளர்களிடம் இருந்து முறைப்படி காப்பிரைட்ஸை எழுதி வாங்கி விட்டார்.இளையராஜா இப்போது காப்பிரைட்ஸ் உரிமைக்காக போராடுவது, ஒரு இசையமைப்பாளராக இல்லை. தயாரிப்பாளரிடம் இருந்து ஆடியோ ரைட்ஸை எழுதி வாங்கிய ஆடியோ நிறுவன தலைவராக. சம்பளம் வாங்கியவர், ஏன் காப்பிரைட்ஸ் கேட்கிறார் என்று இப்போது புரிகிறதா?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
மே 08, 2024 10:14

எந்த நாட்டின் அரசியலமைப்பு சட்டமும் அவ்வப்போது amendments களுக்கு உட்பட்டு இருந்துள்ளன அடிப்படையே மறைந்து விடும் அளவுக்கு மாற்றங்களை சந்தித்த நம் அரசியல் சட்டம் அதன் முக்கிய உள்ளுறைகளை மாற்றாமல் புதுப்பித்தால் வரவேற்கலாம்


சமீபத்திய செய்தி