உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / கைதேர்ந்த அரசியல்வாதியான சீமான்!

கைதேர்ந்த அரசியல்வாதியான சீமான்!

ச.அல்போன்சா ஜெயராணி, மன்னார்குடி, தஞ்சை மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தமிழகத்தில் என் கட்சியை விட, பா.ஜ., அதிக ஓட்டுகள் பெற்று விட்டால், என் கட்சியை கலைத்து விடுகிறேன்' என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். சீமானின் இதே கேள்வியை, அவர் எதிர்ப்பதாக காட்டி, கொள்ளும் திராவிட கட்சிகள், அவருக்கு சவாலாக விடுத்திருந்தால், இந்நேரம் சீமான் கட்சி இல்லாமல் போயிருக்கும்.வசீகர, மெஸ்மரிச இலக்கிய பேச்சு முறை, சினிமா சாயம், ம.தி.மு.க., - தே.மு.தி.க., விடுதலை சிறுத்தைகள் கட்சிகளில் இருந்து விலக்கி விடப்பட்ட, 'அடங்காத தம்பி'களின் ஒருங்கிணைப்பு கூட்டமாகவே, நாம் தமிழர் கட்சி உருவாக்கம் அமைந்துள்ளது. நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு நடிப்பு சொல்லி கொடுத்ததாகவும், ஈழத்தில் பிரபாகரனுடன் அமர்ந்து ஆமைக்கறி சாப்பிட்டதாகவும் பீலா விடும் பேச்சுக்களே, நாளடைவில் சீமானின் அரசியல் பலமாகி போனது.சீமானை நம்பி களமிறங்கிய வேட்பாளர் கள் பலர், கையில் உள்ள பணத்தை செலவழித்து விட்டு, எதிர்காலம் தெரியாமல் கன்னத்தில் கைவைத்து கவலையில் ஆழ்ந்துள்ளனர்.இத்தனை பிரச்னைகள் சூழ்ந்துள்ள வேளையிலும் சீமான், பா.ஜ.,விற்கு எதிராக சவால் விடுத்து வருகிறார். அவரின் கூற்றுப்படியே இருந்தாலும், அவருக்கு பின் தமிழகத்தில் தலையெடுத்த பா.ஜ., கட்சியில் இன்று நான்கு எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். ஆனால், சீமான் கட்சியின் கவுன்சிலர்களை கூட ஒரு கை விரல்களில் தான் எண்ண முடியும்.அடிபட்டு கிடந்த யானைக்கு நான்தான் ரத்தம் கொடுத்தேன் என்று கூறிய எறும்பு கதையை போல், மத்தியில் ஆளும் பா.ஜ.,விற்கு நாம் தமிழர் கட்சி சீமான் சவால் விடுகிறார். இந்த சவாலை சீமான் தேர்தலுக்கு முன்பு சொல்லி இருப்பாரேயானால், கண்டிப்பாக நாம் தமிழர் கட்சியை ஓரம் கட்டுவதற்காக கூட பலர் பா.ஜ., கட்சிக்கு ஓட்டு போட்டிருப்பர். ஆனால், இறந்த புலியின் தலை மீது காலை வைத்து வேட்டையாடிய வீரனாக, சீமான் காலம் கடந்து சவால் விடுகிறார். என்ன செய்வது, அவரும் கைதேர்ந்த அரசியல்வாதியாகி விட்டார்.

விழாக்களில் சச்சரவு தேவையா?

அ. அப்பர்சுந்தரம், மயிலாடு துறையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: வைணவ சமயத்தில், வடகலை - தென்கலை பிரச்னை, முன்பு தான் நிலவியது என்று நாம் படித்தது உண்டு. ஆனால், வளர்ந்த, நாகரிகமான, பண்பட்ட நிலையில் உள்ள நாம் இன்று, நேரடியாக கூட அப்படிப்பட்ட பிரச்னைகள் தொடர்வதை கண்டு, மனம் நோவதை தவிர வேறு வழியில்லை.ஒவ்வொரு பக்தரும் தன் பிரார்த்தனையை, மகிழ்ச்சியை, மன வேதனையை வெளிப்படுத்த புகலிடமோ, ஆறுதலோ தேடி வரக் கூடிய கோவில்களில், இப்படிப்பட்ட பிரச்னைகள் எழும்போது, சொல்லொணா துயரத்தில் ஆழ வேண்டிய நிலை ஏற்படுகிறது.வடகலை - தென்கலையினர், தங்கள் இரு பிரிவினரிடையே உள்ள கருத்து வேறுபாடுகளை உணர்ந்து ஒரு பொது நெறிமுறை, வழிகாட்டுதலை பெருந்தன்மையோடு ஏற்க வேண்டும். மகிழ்ச்சியோடு பக்தர்கள் பங்கேற்கும் நிகழ்வுகளில், எவ்வித சச்சரவும் இன்றி, விழாவை நடத்திக் கொடுக்க வேண்டும்.இனியாவது, காஞ்சிபுரம் உட்பட அனைத்து கோவில்களிலும், இரு தரப்பு வாக்குவாதம், மோதல்கள், சர்ச்சைகளுக்கு கிஞ்சிற்றும் இடம் தராமல், அமைதியாக, மகிழ்ச்சியாக திருவிழாக்கள் நடந்தேற அனைவரும் உதவ வேண்டும்; ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இப்படிப்பட்ட விஷயங்களில் போடப்படும் வழக்குகளையும், விரைந்து விசாரித்து முடித்து, அனைவரும் ஏற்கக்கூடிய தீர்ப்புகளை வழங்க, நீதிமன்றங்கள் முன் வர வேண்டும்.

மூன்று உத்தரவுகளை ஆராய வேண்டும்!

பொ.ஜெயராஜ், இடுக்கி மாவட்டம், கேரள மாநிலத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: வரும் கல்வி ஆண்டில், பள்ளிகளில் மூன்று புதிய உத்தரவுகள் அமலுக்கு வர உள்ளதாக, பள்ளிக் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக செய்திகள் வருகின்றன. அவை... தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, மாணவர்களிடம் பரவி வரும் போதைப் பொருள் உபயோகிக்கும் பழக்கத்தை அடியோடு ஒழிக்க வேண்டும் என்பதற்காக, பள்ளி வளாகத்திலும், பள்ளிக்கு அருகில் உள்ள கடைகளிலும், போதைப் பொருள் நடமாட்டத்தை தடுப்பதற்கான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.இன்றைய காலகட்டத்திற்கு தேவையான நடவடிக்கை தான் என்பதால், இதை வரவேற்கலாம். தமிழகம் முழுதும், 1.25 கோடி மாணவர்களுடைய பெற்றோர் மொபைல் போன் எண்களை ஒருங்கிணைத்து, 'வாட்ஸாப்' வாயிலாக மாணவர்களின் தினசரி செயல்பாடுகளை பெற்றோருக்கு தெரிவிப்பதற்கான ஏற்பாடுகள் நடைமுறைக்கு வருகிறது.தொழில்நுட்ப வளர்ச்சியை பள்ளிக் கல்வித் துறையும் பயன்படுத்துவதில் தவறில்லை. ஆனால், 'கருணாநிதி அதைச் செய்தார், ஸ்டாலின் இதைச் செய்தார், உதயநிதி அப்படி செய்தார்' என்றெல்லாம், ஆட்சியாளர்கள் தங்களின் அரசியல் விளம்பரத்திற்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ இந்த திட்டத்தை பயன்படுத்தாமல் இருந்தால், இதையும் வரவேற்கலாம். மாணவர்கள் தங்கள் சமூகத்தின் அடையாளங்களை வர்ணக் கயிறுகளாக அணிவதற்கு தடை விதிக்கப்பட இருக்கிறது.இது உண்மையான தகவலா என்பது தெரியவில்லை; அதே நேரம் நெருப்பில்லாமல் புகையாது. எனவே, இப்படி ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்தும் எண்ணம் பள்ளிக் கல்வித் துறையிடம் இருந்தால், அதை தவிர்ப்பதே நல்லது. இது ஹிந்து மத நம்பிக்கைக்கு எதிரான நடவடிக்கை தான் என்பதில் சந்தேகமில்லை.ஒருவேளை இப்படி ஒரு நடைமுறை அமலுக்கு வந்தால், 'பிற மதத்தினர் அணியும் மத அடையாள உடைகளையும் (ஹிஜாப், குல்லா) அணிகலன்களையும் (சிலுவை, 786 டாலர்கள்) அணிவதையும் தடுக்க வேண்டும். மத சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளில் உள்ள வழிபாட்டு தலங்களை அகற்ற வேண்டும்' என்பது போன்ற கோரிக்கைகள் எழலாம். அப்படி நடந்தால் அது, மாணவர்களிடையே உள்ள ஒற்றுமையை கெடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.மத சிறுபான்மையினரின் ஓட்டுக்காக, ஹிந்து மாணவர்களுக்கு எதிராக இப்படி ஒரு திட்டத்தை திராவிட மாடல் அரசு நடைமுறைப்படுத்தாது என்றே நம்புவோம். அதே நேரம் இப்படி ஒரு செய்தி பரவிக் கொண்டிருப்பதை தடுத்து முற்றுப் புள்ளி வைக்க, இது தொடர்பாக தெளிவான விளக்கத்தை வெளியிட பள்ளிக் கல்வித்துறை முன்வர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Sridhar
மே 28, 2024 14:51

முடிவுகள் வந்தபிறகு சீமான் கட்சிக்கு 5 லிருந்து 7 சதவிகிதம் வோட்டு கிடைக்கலாம். பிஜேபிக்கு 20 லிருந்து 25 சதவிகிதம் வரை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. இதை பார்த்தபிறகு சீமான் மானஸ்தனா கட்சியை கலைச்சிடுவார்னு நினைக்கறீங்க? சும்மா தொடச்சு போட்டுட்டு அரசியல்ல இதல்லாம் சாதாரணமப்பான்னு வேற ஏதாவது வீர வசனம், கைய கால ஆட்டிகிட்டு பேசி மழுப்பிட்டு போய்கிட்டே இருப்பாரு ஆனா ஒன்னு, இவுரு கட்சியை கலைச்சிட்டு விஜய் கட்சியோட இணையறது தனிப்பட்ட முறையில ரொம்பவே நல்லா இருக்கும்


Dharmavaan
மே 28, 2024 08:32

சீனா அருணாச்சலப்பிரதேசத்தை உரிமை போல்,பாகிஸ்தான் காஷ்மீரை உரிமை கொண்டாடுவது போல்தான்


Dharmavaan
மே 28, 2024 08:30

தென்கலையாக ருந்த வரதராஜ பெருமாள் கோயில் சூழ்ச்சி மூலமும் அரசு,நீதியின் பாரபட்ச முலம் வடகலை ஆக்கப்பட்டுவிட்டது. காஞ்சியில் மற்ற எல்லா கோயில்கள் தென்கலையாக இருக்கும் பொது வருமானம் வரும் இது மட்டும் வடகலை உரிமைக்கு போராடுகின்றனர் தென்கலையினர் தமிழ் நாட்டில் தமிழ் பாசுரம் பாடுபவர்களுக்கு இந்த கதி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை