உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / டிரம்பை நின்று காத்த தெய்வம்!

டிரம்பை நின்று காத்த தெய்வம்!

வி.சி. கிருஷ்ணரத்னம், காட்டாங்கொளத்துார், செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணம், பட்லர் நகரில், சமீபத்தில் நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில், டிரம்பின் காதில் லேசான காயம் ஏற்பட்டது. அவர் நுாலிழையில் உயிர் தப்பினார். துப்பாக்கிச்சூடு நடத்திய 20 வயது இளைஞரை பாதுகாவலர்கள் சுட்டுக் கொன்றனர். இதுகுறித்து, சர்வதேச கிருஷ்ணன் பக்தி இயக்கமான, 'இஸ்கான்' அமைப்பின் கோல்கட்டா பிரிவு துணைத் தலைவர் ராதாராம் தாஸ் தன் எக்ஸ் சமூக வலைதள பதிவில், 'நியூயார்க் நகரில் 48 ஆண்டுகளுக்கு முன், அதாவது 1976 ஜூலையில், ஜெகந்நாதர் தேர் திருவிழாவை நடத்த டொனால்டு டிரம்ப் உதவினார். இப்போது, டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டபோது, அவரை ஜெகந்நாதர் காப்பாற்றி விட்டார்' என, பதிவிட்டுள்ளார்.கடந்த 1976ல் இஸ்கான் அமைப்பு, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் முதன் முறையாக ஜெகந்நாதர் தேர் திருவிழா நடத்த திட்டமிட்டது. இதில், தேரை வடிவமைப்பதற்கான இடம் தேர்வு செய்வதில் பிரச்னை ஏற்பட்டது. பென்சில்வேனியா ரயில் யார்டு பொருத்தமாக இருக்கும் என கருதப்பட்டது. ஆனால், அந்த இடத்தை வாங்கியிருந்த பல்வேறு தொழிலதிபர்கள் அனுமதி மறுத்தனர்.அந்த ரயில் யார்டின் ஒரு பகுதியை, அப்போதைய ரியல் எஸ்டேட் இளம் தொழிலதிபர் டிரம்ப் வாங்கியிருந்தார். அவரிடம் அனுமதி கேட்டு டிரம்ப் அலுவலகத்தை அணுகியபோது, அந்த இடத்தை பயன்படுத்திக்கொள்ள டிரம்ப் அனுமதி தந்துள்ளார். அந்த இடத்தில் தேர் வடிவமைக்கப்பட்டு, தேர் திருவிழா நடைபெற்றது; அந்த புண்ணியமே தற்போது, டிரம்பை காப்பாற்றியுள்ளது.மஹாபாரத போரில், அர்ஜுனன் தலைமைக்கு கர்ணன் வைத்த குறியை, தேரோட்டியாக இருந்த பகவான் கிருஷ்ணன் கவனித்து, தன் கால் விரலால் தேரை பூமியில் அழுத்தினார். இதனால், கர்ணன் வைத்த குறி, அர்ஜுனனின் தலை கவசத்தை மட்டும் தாக்கி, அவனை காப்பாற்றியது. அதுபோலவே, தற்போது சதிகாரனின் துப்பாக்கி குண்டும், பகவான் கிருஷ்ணன் அருளால், டிரம்பின் காதில் உரசி, அவரது உயிரை காப்பாற்றி உள்ளது என்பது 100 சதவீதம் உண்மை.

நம் தலையில் தான் அனைத்து இடிகளும்!

மா.ஜெயக்கொடி, சந்தையூர், மதுரை மாவட்டத்தில் இருந்து எழுதுகிறார்: தற்போது விவசாய நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு 100 ரூபாய் வரி விதித்துள்ளனர். கிராம வி.ஏ.ஓ., வாயிலாக வசூல் செய்கின்றனர்.டாஸ்மாக் வருமானம் போதவில்லையா அரசுக்கு? ஆண்டிற்கு ஆண்டு அரசின் கடன் சுமை அதிகரித்து வருகிறது. பிறக்கப் போகும் குழந்தை, 4,000 ரூபாய் வரி கட்ட வேண்டிய நிலையில் தமிழக அரசு கடன் சுமை உள்ளது. கள்ளச்சாராயம் குடித்து மரணமடைந்தால் 10 லட்சம் ரூபாயும், சாலை விபத்தில் மரணமடைந்தால் 3 லட்சம் ரூபாயும் தமிழக அரசு கொடுக்கிறது. அரசுக்கு வருமானம் கொடுப்போர் இறந்தால், கூடுதலாக 7 லட்சம் ரூபாய் தருகிறது. இன்னும் எதற்கெல்லாம் வரி புதிதாக போடலாம் என திட்டமிட்டு உள்ளதோ திராவிடகட்சி? நம் தலையில் தான் அனைத்து இடிகளும் விழுகின்றன!

மாத்தி யோசிக்கணும் சங்கர்!

எம்.நாகராஜன், கோவையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியான, இந்தியன் - 2 படத் துவக்கத்தில், அரசியல்வாதி, அதிகாரி ஆகியோரின் லஞ்ச ஊழல் குறித்த சில காட்சிகளில், பொது ஜனங்கள், மிக்சி, கிரைண்டர், மின் விசிறி ஆகியவற்றை எடுத்துச் செல்வது போலவும், 'அப்படியானால் இது...' என கேட்பது போலவும் காட்சி அமைக்கப்பட்டுள்ளது.ஏன், 'டிவி, காஸ்' ஆகியவற்றை காட்டவில்லை? ஏனெனில், அதெல்லாம் தி.மு.க., அரசால் கொடுக்கப்பட்டவை. காட்டினால், ரெட் ெஜயன்ட் நிறுவனத்திற்கு பதில் சொல்லியாக வேண்டும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால், இக்காட்சிகளும் வெட்டப்பட்டிருக்கும்.சங்கர் சார்... நீங்கள் இவ்வளவு பயப்பட வேண்டாம். கொஞ்சம் சிந்தித்துப் பார்த்திருந்தால், 'தெகிரியமாக' எல்லாரிடமும் பதில் சொல்லி இருக்கலாம்; அரசியல்வாதிகளும், அதிகாரிகள் வாங்கும் லஞ்சத்திற்கும்,இதற்கும் உள்ள வித்தியாசத்தையும் புரிந்து கொண்டிருக்கலாம்.இந்த இலவசங்கள் அனைத்தும், மக்கள் வரிப்பணத்தைச் செலவழித்துக் கொடுக்கப்படும், 'வெள்ளைப் பணத்தில்' கொடுக்கப்படும் இலவசங்கள்.அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் வாங்குவது, 'டேபிளுக்கு அடியில்' மறைத்துக் கொடுக்கப்படும் பணம்; அதாவது கருப்புப் பணம்.ராஜமவுலி, பிரசாந்த் நீல் போன்றவர்கள் தற்காலத்திற்கு ஏற்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, பிரமாண்ட படங்களை எடுக்கும்போது, இது போன்ற சற்றே புளித்துப் போன, தவறான தகவல்களைக் கொடுக்கும் படங்களை எடுப்பதை சங்கர் தவிர்க்கலாம்.இனி நீங்கள், கமலஹாசனிடம் ஐடியா கேட்காதீர்கள்; அவர் 'பக்கா' அரசியல்வாதியானதால், 'மேல் மாடி காலி' என்ற நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டார்.

எப்போது நாம் விழிக்கப் போகிறோம்?

ப.ராஜேந்திரன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தி.மு.க., அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில், மேலும் ஒரு கிராம உதவியாளர் பிறழ் சாட்சியம் அளித்துள்ளார். மொத்தம் 67 சாட்சிகளில், 31 பேரிடம் விசாரணை நடந்துள்ளது; இவர்களில், 24 பேர், பிறழ் சாட்சியம் அளித்துள்ளனர்.மற்ற வழக்குகளில், பொதுவாக பிறழ் சாட்சியம் அதிகம் வருவதில்லை; ஆனால் இந்த வழக்கில், 24 பேர் பிறழ் சாட்சியம் அளித்துள்ளனர் என்பது, அவர்கள் எந்த அளவுக்கு மிரட்டப்பட்டு இருக்க வேண்டும் என யோசிக்க வைக்கிறது. அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட இது போன்ற ஊழல் விசாரணை வழக்குகளை, எவ்வளவு துரிதமாக முடிக்க முடியுமோ, அவ்வளவு துரிதமாக விசாரித்து முடிப்பதுதான், உண்மை சாட்சியங்கள் கலைந்து போகாமல் காக்கும். இப்படிப்பட்ட வழக்குகளில், யார் எந்த அளவுக்குசுரண்டியிருக்கின்றனர் என்பது, நம் தமிழக முதல்வருக்கு தெரியாத விஷயமல்ல. இப்படிப்பட்ட ஒரு கட்சி, சொற்பமாய் அள்ளி வீசும் இலவசங்களுக்காக ஆசைப்பட்டு, நாற்பது தொகுதிகளிலும் வெற்றி கொடுத்திருக்கும் மக்களின் அறியாமையை, என்னென்று சொல்வது!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

D.Ambujavalli
ஜூலை 18, 2024 21:27

கமல் இன்று நடிகர் என்ற நிலை மாறி அரசியல் கட்சித்தலைவர்களுக்கே உரித்தான கூட்டணிக்கு ஜால்றா என்ற பதவி உயர்வு பெற்று விட்டார் எனவே அவரை வைத்து படம் செய்தால் ரசிகர்கள் 'வெச்சு செய்துவிடுவார்கள் '


Barakat Ali
ஜூலை 18, 2024 20:31

டிரம்ப் வணங்கும் ஒருவர் தன்னையே காப்பாற்றிக்கொள்ள முடியாதவராக இருந்தார் .... கிருஷ்ணரும் வேடனால் கொல்லப்பட்டார் .... இவர்களது சக்திக்கு அப்பாற்பட்ட ஒருவரே டிரம்ப் ஐ காப்பாற்றியிருப்பார் ....


kantharvan
ஜூலை 20, 2024 09:20

உங்க கடவுள் கூட தனக்கு எதாவது உதவி செய்யிற பணக்கார அதிகாரம் எளியவர்களை அல்ல


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 18, 2024 19:41

'Lord Jagannath saved Donald Trump': ISKCON spokesperson recalls connection - Hindustan Times .....


kantharvan
ஜூலை 20, 2024 19:34

அகில உலக மகா உருட்டு


Thirumal s S
ஜூலை 18, 2024 17:24

அமேரிக்காவின் trump


Dharmavaan
ஜூலை 18, 2024 16:50

கொலீஜியும் முறை ஒழிந்தால்தான் சரியான நீதி கிடைக்கும்


vbs manian
ஜூலை 18, 2024 09:21

லேட்டஸ்ட் இந்தியன் சொல்லும் அருமை ஐடியா. ஊழலை ஊழல்வாதிகளை ஒடுக்க வர்மக்கலை தெரிந்தால் போதும். போலீஸ் யீ டி சி பி ஐ எதுவும் vendaam.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை