உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / வறட்டு பிடிவாதம் நல்லதல்ல!

வறட்டு பிடிவாதம் நல்லதல்ல!

ஆர்.ஆறுமுகம், கோவையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'வெண்ணெய் திரளும் போது, தாழி உடைந்த மாதிரி' என்று ஒரு சொலவடை தமிழில் உண்டு. அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியின் பேச்சுகளும், செயல்பாடுகளும் அந்த சொலவடையை உண்மை ஆக்கி விடும் போல் உள்ளது. தி.மு.க., ஆட்சியில் இருந்து விடுதலையாகும் நாட்களை எண்ணி, மக்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கையில், அடுத்த ஐந்து ஆண்டுகளையும் தி.மு.க.,விடம் ஒப்படைப்பது போன்று உள்ளது, பழனிசாமியின் நடவடிக்கை. 'தமிழகத்தில் தே.ஜ., கூட்டணியில், அ.தி.மு.க., தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறும். அதன்பின், அமையஉள்ள ஆட்சியில், பா.ஜ,,வுக்கு பங்கு கொடுக்க வாய்ப்பே இல்லை; தனித்தே ஆட்சி அமைப்போம். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சொல்வதை கேட்க நாங்கள் ஏமாளிகள் அல்ல' என்று பொதுக் கூட்டங்களில் தெரிவித்து வருகிறார், பழனிசாமி. முன்னாள் முதல்வராக இருந்தாலும், மக்கள் ஓட்டளித்து முதல்வர் ஆசனத்தில் அமர்ந்தவர் இல்லை பழனிசாமி. இதை மறந்து, ஆணவத்தில் ஆடிக் கொண்டிருக்கிறார். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன், தமிழகத்தில் துணை முதல்வர் என்ற பதவியே இருந்ததில்லை. கழகம் அதை துவக்கி வைக்கவில்லையா? துணை முதல்வர் மற்றும் நாலைந்து அமைச்சர் பதவிகளை விட்டுக் கொடுத்தால் மட்டுமே வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., வெற்றி பெற முடியுமே தவிர, 'நாங்கள் தான் எல்லாம்' என்று பெரியண்ணன் பாவனையில் நடந்து கொண்டால், ஆட்சி அமைக்கும் ஆசையே அஸ்தமனமாகி விடும். இம்முறை பழனிசாமி தோற்றால், அது, அ.தி.மு.க.,விற்கு மட்டுமல்ல; பழனிசாமியின் அரசியல் எதிர்காலமே கேள்விக்குறியாகி விடும். எனவே, உண்மையில் ஆட்சியில் அமர வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், பழனிசாமி தன் வறட்டு பிடிவாதத்தை துாக்கி எறிந்து விட்டு, கூட்டணி ஆட்சிக்கு சம்மதம் தெரிவிக்க வேண்டும். அதற்கு சம்மதிக்காவிட்டால், நஷ்டம் பா.ஜ.,வுக்கு அல்ல; அ.தி.மு.க.,வுக்கும், தமிழக மக்களுக்கும் தான்! பழனிசாமியின் பிடிவாதத்திற்காக, தமிழக மக்கள் மேலும் ஐந்து ஆண்டுகள் அவதிப்பட வேண்டுமா?  வாகன ஓட்டிகளே... உஷார்! ச.பாலசுப்ரமணியன், பொதுத் துறை வங்கி ஊழியர், (பணி நிறைவு) சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: வங்கிக் கணக்குகளில் இருந்து நமக்குத் தெரியாமல், நம் பணத்தை கொள்ளை அடிப்போர், போக்குவரத்து மீறல் என, 'வாட்ஸாப்' வாயிலாக பொய் தகவல் அனுப்பி, மிரட்டி பணம் பிடுங்குவோர் என பலவித திருட்டு கும்பல்களுடன், தற்போது புதிதாக டோல்கேட் திருட்டும் சேர்ந்து விட்டது. நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் பயணிக்க கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. தற்போது அக்கட்டண வசூலிப்பிலும் நுாதன மோசடி செய்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன், தாம்பரம்- - மதுரவாயல் புறவழிச்சாலையில், போரூர் இணைப்பு சாலை வாயிலாக பயணித்து, சுங்கச் சாவடியை கடந்து முகப்பேர் வந்த என் தங்கை மகன் மொபைல் போனுக்கு, 'பாஸ்டேக்' எனும் டோல்கேட் நுழைவு கட்டணம் செலுத்தும் கணக்கில் இருந்து, சாலை கட்டணம் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தது கண்டு திகைத்தார். பின், அங்கு சென்று ஊழியர்களிடம் இதுகுறித்து விசாரித்த போது முதலில் மறுத்தவர்கள், குறுஞ்செய்தியை காட்டி, வீடியோ பதிவை காட்டுமாறு கேட்டபின், அவர்களும் வீடியோவைப் பார்த்து, 'வாகனம் புறவழிச் சாலையில் வரவில்லை; இணைப்பு சாலையில்தான் வந்துள்ளது' என்று ஒத்துக்கொண்டு பணத்தை திருப்பி தந்துள்ளனர். எப்படி இந்த தவறு நிகழ்ந்தது என்று கேட்டபோது, கேமரா தவறாக இணைப்பு சாலை வழியாக வரும் வாகனங்களை பதிவு செய்யும் விதமாக திரும்பியுள்ளதாக தெரிவித்துள்ளனர். அன்று இதனால் எத்தனை பேர் பாதிப்படைந்தனரோ... அத்தனை பேருக்கும் பணம் திருப்பி தரப்பட்டதா என்றும் தெரியவில்லை. இந்த தவறு தெரியாமல் நடந்த ஒன்றா அல்லது திட்டமிட்டு நடந்ததா? அன்று மட்டும் தான் நடந்ததா அல்லது பல நாட்களாக நடந்துள்ளதா? இந்த ஒரு சுங்கச்சாவடியில் மட்டும் நடைபெற்றுள்ளதா அல்லது வேறு டோல்கேட்டிலும் நடைபெற்றுள்ளனவா? தவறு என்றால் திருத்தப்பட்டு விட்டதா அல்லது இன்னும் தொடருகிறதா? இப்படி பல கேள்விகள் எழுந்தாலும், இது ஒரு நுாதன மோசடியாகவே எண்ணத் தோன்றுகிறது. எனவே, சம்பந்தப்பட்டவர்கள் இதை கவனித்து நடவடிக்கை எடுக்கும் வரை, வாகன ஓட்டிகள் உஷாராக இருக்க வேண்டியது அவசியம்!  திராவிட மாடல் அரசின் சாதனை! ஜெ.பொன்மணி, செங்கோட்டையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: எவ்வித தொழில்நுட்ப வசதியும் இல்லாத காலத்தில் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோவில், 1,000 ஆண்டுகளை கடந்தும் கம்பீரமாக தலைநிமிர்ந்து நிற்கிறது. அகண்ட காவிரியில் கட்டப்பட்ட கல்லணை, 2,000 ஆண்டுகளை கடந்து இன்றும் பயன் பட்டுக் கொண்டிருக்கிறது. ஆங்கிலேயர் ஆட்சிக் கா லத்தில் கட்டப்பட்ட பல கட்டடங்கள், பாலங்கள், அணைகள் கூட,100 ஆண்டு களை கடந்தும், இன்றும் நல்ல முறையில் பயன் பாட்டில் இருக்கின்றன. காமராஜர் காலத்தில் கட்டப்பட்ட அணைகளும், 60 ஆண்டுகளை கடந்தும், இன்றும் உறுதியாக இருக்கின்றன. ஆனால், தஞ்சாவூர் மாவட்டம், சூரியனார்கோவில் பஞ்சாயத்து அலுவலக கட்டடம், 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டது. அதை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த மூன்றாவது நாளிலேயே கூரையின் சிமென்ட் பூச்சு பெயர்ந்து விழுந்துள்ளது. அதேபோன்று, மதுராந்தகத்தை அடுத்த புதுப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் புதிதாக கட்டிய கட்டடம், மூன்று மாதங்களில் மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்து, மூன்று மாணவியரும், இரண்டு மாணவர்களும் காயமடைந்துள்ளனர். இதுமட்டுமல்ல... திருவண்ணாமலை, தண்டராம்பட்டு அருகே தென்பெண்ணையாற்றில், 16 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட தரைப்பாலம், மூன்று மாதத்தில் வெள்ளத்தில் கரைந்து காணாமல் போய் விட்டது. இப்படி திராவிட மாடல் ஆட்சியின் கட்டுமானம் உலகத்தரத்தில் இருக்க, கோவை அருகே செட்டி பாளையம் பேரூராட்சியில், வெறும், 7 அடி ஆழத்திற்கு ஆழ்துளை கிணறு தோண்டி, உலக சாதனை படைத்துள்ளனர், தி.மு.க.,வினர். இதுபோன்ற சாதனைகளை திராட மாடல் அரசை தவிர்த்து, உலகில் வேறு எவராலும் செய்ய முடியுமா? 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
ஜூலை 26, 2025 17:25

ராஜ ராஜனும், கரிகாலனும் இருந்த காலத்தில் கட்டுமானத்தில் ஊழல் செய்து அமுக்கும் வித்தை தெரியாத ஊழியர்கள், மேற்பார்வையாளர்கள் இருந்திருப்பர். இன்றோ, அந்த வித்தையில் முனைவர், முதுமுனைவர் பட்டம் வாங்கியவர்களும், இவர்களுக்கு டெண்டர் தொகையில் கணிசமாக ‘அழுத’ மீதியில் பள்ளியில், பாலம், அணையும் கட்டும் ஒப்பந்தக்காரரும் உள்ள நிலையில், திறப்புவிழா செய்த தலைவர், தலையிலேயே இடிந்து விழுந்தாலும் வியப்பில்லை


புதிய வீடியோ