உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / விரல் அதிகமாய் வீங்கினால் ஆபத்து சீமான்!

விரல் அதிகமாய் வீங்கினால் ஆபத்து சீமான்!

என்.மல்லிகைமன்னன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'நான் உண்மையான தமிழன். அதனால், ஆட்சிக்கு வந்ததும் தமிழ்த்தாய் வாழ்த்தை முற்றிலும் முடக்குவேன். அதற்கு பதிலாக, பாரதிதாசன் பாடலை கொண்டு வருவேன்'என்கிறார், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்.சீமான் அண்ணே... அரசியலுக்கு வந்து இத்தனை ஆண்டுகள் கழித்தும், பாவம் உங்களால் சாதாரண வார்டு கவுன்சிலராகக்கூட ஆக முடியவில்லை... இந்த லட்சணத்தில், நீங்கள் ஆட்சியைப் பிடித்து முதல்வராவது என்பது நடக்கக்கூடிய காரியமா என்ன? 'திராவிடம் என்ற சொல், இடத்தைக்குறிக்கிறதா அல்லது இனத்தைக் குறிக்கிறதா?' என்ற வாதத்தை வைத்து, தமிழகத்தில் உள்ள அரசியல்வாதிகள் பெரிய பட்டிமன்றமே நடத்திக் கொண்டு இருக்கின்றனர்.நாட்டில் எத்தனையோ பிரச்னைகள் தீர்க்கப்படாமல் இருக்கும்போது, தமிழ்த்தாய் வாழ்த்து பற்றி பெரிய அளவில் பிரச்னை எழுப்புவது தேவைதானா? 'வி.சி., தலைவர் திருமாவளவன் முதல்வராக வேண்டும். அவருக்கு முதல்வராகும் அத்தனை தகுதிகளும் இருக்கின்றன' என்று சொல்கிறீர்களே... இது உங்களுக்கே கொஞ்சம் ஓவராக தெரியவில்லையா? அனைத்து ஜாதி மக்களையும் உள்ளடக்கியநாடு நம்முடையது. பிரிவினை பேசாதீர்கள்.விரலுக்கு தக்க வீங்க வேண்டும். அதிகமாய் வீங்கினால், நோய் உள்ளது என்று பொருள்.தமிழ்த்தாய் வாழ்த்தை எழுதிய மனோன்மணியம் சுந்தரனார், தான் எழுதிய பாடல், இந்த அளவுக்கு பிரச்னையாகும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார் பாவம்!

சண்டப் பிரசண்டன் ஆன உதயநிதி!

க.பிரசன்னா, சென்னையில்இருந்து அனுப்பிய, 'இ - மெயில்'கடிதம்: 'தட்டிக் கேட்க ஆளில்லை எனில், தம்பி சண்டப் பிரசண்டன் ஆவான்' என்று ஒரு பழமொழி உண்டு.அந்த பழமொழிக்கு நிகரானவராக நடந்து கொண்டு இருக்கிறார், துணை முதல்வர் உதயநிதி.'தி.மு.க., அரசு பொறுப்பேற்றதில் இருந்து, சென்னையில் வெள்ளத்தடுப்பு பணிகள் மேற்கொண்டது குறித்து, முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். மக்களை ஏமாற்றும்நாடகங்களை கைவிட்டு, போர்க்கால அடிப்படையில்,மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும்' என முன்னாள்முதல்வரும், அ.தி.மு.க., பொதுச்செயலருமான பழனிசாமி கூறியுள்ளார்.அவர் இந்த கேள்வி கேட்டதும், துணை முதல்வர்உதயநிதிக்கு, கோபம் கொப்பளித்தது. 'வெள்ளைஅறிக்கையா கேட்கிறாய், வெள்ளை அறிக்கை? நான்யார் தெரியுமா? என்னிடமாகேட்கிறாய் வெள்ளை அறிக்கை?' என்று நினைத்து,'இவ்வளவு மழை கொட்டியும், தண்ணீர் தேங்காமல் இருப்பது தான்வெள்ளை அறிக்கை' என்றுகூறி உள்ளார். மழைக்காலம் துவங்குவதற்கு முன், முதல்வரும்,இன்ன பிற தமிழக அமைச்சர்களும், சென்னைபெருநகர மாநகராட்சியினரும், வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள், 90 சதவீதம்முடிந்து விட்டனவென்றும், 95 விழுக்காடு நிறைவடைந்து விட்டன வென்றும், இன்னும் இரண்டு சதவீதம் பணிகளே பாக்கி உள்ளனவென்றும்அறிவித்தனர். 'வெள்ளம் பாதிக்காத பகுதிகளை காண வேண்டுமா?சன் 'டிவி' கலைஞர் 'டிவி' பாருங்கள். வெள்ளம் பாதித்துள்ள பகுதிகளை காண வேண்டுமென்றால், மற்ற சேனல்களை பாருங்கள்' என்று, 'மீம்ஸ்' வேறு, சமூக வலைதளங்களில் பரவியது.துணை முதல்வர் உதயநிதியின் வாக்குமூலப்படி, 'இவ்வளவு மழை கொட்டியும் தண்ணீர் தேங்காமல் இருப்பது தான்வெள்ளை அறிக்கை' என்று அவர் கூறினார் எனில், அதன் காட்சிகள் காட்டப்பட வேண்டும்.ஆனால், தண்ணீர் தேங்காமல் இருக்கும்போது,சேப்பாக்கம், வெங்கட் ரங்கம்பிள்ளை தெருவில் உள்ள சமூக நலக்கூடத்தில், பொதுமக்களுக்கு உணவு தயாரிக்கும் பணி ஏன் நடக்கவேண்டும்? அந்த பணியைதுணை முதல்வர் உதயநிதி ஏன் ஆய்வு செய்ய வேண்டும்?மழை கொட்டியும் தண்ணீர் தேங்கவில்லை என்றால், அமைச்சர்களும்,அதிகாரிகளும் புடைசூழ, ரெயின்கோட்டை அணிந்தபடி, ஏன் ஏரியா ஏரியாவாக அலைய வேண்டும்?சண்டப் பிரசண்டன் யார் புரிகிறதா இப்போது?

அரைவேக்காட்டுத்தனம் வேண்டாம் ராகுல்!

கிருஷ்ணமூர்த்தி ராமசுப்ரமணியன், ஆசிரியர்(பணி நிறைவு), நைனார் மண்டபம், புதுச்சேரி மாநிலத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சென்னை, கவரைப்பேட்டை,பாக்மதி ரயில் விபத்து குறித்து கருத்து தெரிவித்துஉள்ள லோக்சபா எதிர்கட்சி தலைவர் ராகுல், 'மத்திய அரசு, ரயில் விபத்துக்களில் இருந்து பாடம் கற்கவில்லை; பொறுப்பு ஏற்பது உயர் மட்டத்தில் இருந்து துவங்க வேண்டும்' என்றும், பிரதமர் நரேந்திர மோடியை மறைமுகமாக விமர்சித்ததோடு, 'மத்திய அரசு விழித்துக் கொள்வதற்கு முன், இன்னும் எத்தனை குடும்பங்கள் தங்கள் உறவுகளை இழக்க நேரிடுமோ...' என்றுஆதங்கப்பட்டுள்ளார். ஆட்சியாளர்களின் அலட்சியம் மற்றும் மனிதத்தவறுகளால், தமிழகத்தில், கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிர் இழந்தபோது, அவர்களை இழந்த குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழுதபோதும்; கோல்கட்டா பயற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுகொல்லப்பட்டபோது, அவரை இழந்து கதறிய பெற்றோருக்காகவும் அறிக்கை கூட வெளியிடாமல், ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த ராகுல், இப்போது தான் விழித்துள்ளார் போலும்!கவரைப்பேட்டை ரயில் விபத்துக்கு காரணம்சிக்னல் கோளாறா, ரயில் ஓட்டுனரின் கவனக்குறைவாஅல்லது சதி வேலையா என்று விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அவசர கதியில் அறிக்கை வெளியிடுவதும், அடுத்தவரை குற்றம்சாட்டுவதும் பொறுப்புள்ள எதிர்க்கட்சி தலைவருக்கு அழகல்ல.மேலும், எதிர்பாராத, கணிக்க இயலாத ரயில் விபத்துக்களை அரசியல்காழ்ப்புணர்ச்சியால் ஊதிப் பெரிதாக்க முயற்சி செய்யும் ராகுல் கண்களுக்கு, 'இண்டியா' கூட்டணி ஆட்சி நடைபெறும் மாநிலங்களில், திட்டமிட்டு, தெரிந்தே நடைபெறும் குற்றங்கள் தெரிவதில்லை என்பது வெட்கக்கேடு. எனவே, இனிமேலாவதுவிபத்திற்கும், குற்றத்திற்கும்இடையே உள்ளவித்தியாசத்தை உணராமல்,இத்தகைய அரைவேக்காட்டு அறிக்கைகள் விடுவதை தவிர்த்து, ஆக்கப்பூர்வமான அரசியலில் ராகுல் ஈடுபடாவிட்டால், நடைபெற இருக்கும் மஹாராஷ்டிரா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட சட்டசபை தேர்தல்களில் தோல்வி அடைவதோடு, காங்கிரஸ்கட்சி எதிர்காலத்தில் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் பதவியைக் கூட, மீண்டும் பெற இயலாது போகும் என்பது நிச்சயம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

D.Ambujavalli
அக் 24, 2024 21:45

நரிக்கு நாட்டாமை கொடுத்தால் கிடைக்கு இரண்டு ஆடு கேட்குமாம் எம். ஜி. ஆர் காலம் முதல், இந்த உதயநிதியின் வயது அவரது அனுபவம் என்ற மட்டு மரியாதையில்லாமல் ஆடும் இவரே போதும், கட்சிக்கு மங்களம் பாட சீனியர்களின் அதிருப்தியின் எதிரொலி தேர்தலில் தெரியப்போகிறது


Matt P
அக் 24, 2024 09:20

தமிழ்நாட்டில் அரசியல் செய்யும் சீமானை பலர் மலையாளியாக தான் நினைக்கிறார்கள். மலையாள நாட்டில் வாழ்ந்து தமிழுக்கு புகழ் சேர்த்த சுந்தரத்தை யாரும் மலையாளியாக பார்த்தார்கள் என்றால் அவர்கள் பார்வையில் தான் குறை இருக்க முடியும்.


Dharmavaan
அக் 24, 2024 09:14

தமிழ் நாட்டு அவலங்களை ராகுல்கான் கண்டுகொள்வதில்லை கால்சாராய சாவு, வேங்கைவாசல் மனித கழிவு கலப்பு போதை பொருள் இதில் உயிரிழப்புகள் இல்லையா பச்சோந்தி


Matt P
அக் 24, 2024 09:11

நமது ஐயா பாரதிதாசன் பாடலை கொண்டு வந்து சுந்தரம் பிள்ளையின் பாடலை அகற்றுவேன் என்று சொல்லும் சீமான் ஒரு அசிங்கம், நாகரிகமற்றவன். சுந்தரம் இவரது ஐயா இல்லையா? திராவிட நல் திருநாடு என்ற வார்த்தை நாடு மொழி வாரிய மாநிலங்களாக பிரிக்கப்படுவதற்கு முன்னால் எழுதியதால் ஏற்பட்டிருக்கலாம். தமிழை உயிராக நினைத்து உணர்வோடு கலந்து எழுதியதாக தான் தெரிகிறது மனோன்மணீயத்தில் வரும் தமிழ்த்தாய் வாழ்த்து. நாம் தமிழர் என்று சொன்னால் போதாது. தமிழாய்ந்த எல்லோரையும் மதிக்கின்ற பண்பும் வேண்டும். ஆன்மீகத்துக்கு எதிர் என்றாலும் ஆன்மீகவாதிகளையும் அரவணைத்து சென்றார்.. கருணாநிதி. மனோன்மணி சுந்தரத்தின் பெயரில் பாளையம்கோட்டையில் பல்கலை அமைந்திருக்கிறது . அந்த பெயரையும் அகற்றலாம் இவர். தமிழில் சீமான் மாற்றாரும் போற்றும்படி ஏதாவது இலக்கியம் படைத்திருக்கிறாரா? அல்லது படித்து தான் இருக்கிறாரா?


Karuthu kirukkan
அக் 24, 2024 06:40

தமிழ் தாய் வாழ்த்து பாடல் பொருள் விளக்கம்: பூமி என்ற பெண் நீராலான கடலை ஆடையாக அணிந்துள்ளாள். அவளின் சிறப்புமிக்க அழகிய முகமாக பாரத கண்டம் இந்தியா திகழ்கிறது. அம்முகத்திற்கு பிறைநிலவு போன்ற நெற்றியாக தக்காணம் அமைந்துள்ளது. அந்த நெற்றியில் நறுமணமிக்க பொட்டு வைத்தது போல் தமிழகம் உள்ளது. பொட்டின் மணம் எல்லோரையும் இன்புறச்செய்வது போல் தமிழ்த்தாயும் எல்லாதிசைகளிலும் புகழ்பெற்றவளாக இருக்கிறாள். உலகின் மூத்த மொழியாக இருந்தும் இன்றளவும் இளயையாக இருக்கிறாள். தமிழ்மொழியின் வளம் பெருகுகின்றதே தவிற குறையவில்லை. அப்படிப்பட்ட தமிழே, தமிழாகிய பெண்ணே, தாயே உன்னை வாழ்த்துகிறேன். நீ வாழ்க.


Loganathan Kuttuva
அக் 24, 2024 16:40

நல்ல விளக்கம் .


தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 24, 2024 00:26

ராகுலுக்கு ஆலோசனை சொல்பவர் ஆர் எஸ் எஸ் காரராக இருக்க வாய்ப்பு ....... இதன்மூலமாக காங்கிரசின் வீழ்ச்சியை அந்த நபர் உறுதிப்படுத்துகிறார் .........


தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 24, 2024 00:25

உதயநிதி ஒருவர் போதும்... திமுகவை ஒழித்துக்கட்ட.....


தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 24, 2024 00:24

சீமானுக்கு பிரதமர் பதவிதான் லட்சியம்.... நா த க தலைவர் பதவி நிச்சயம் .....


சமீபத்திய செய்தி