உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / கருவறைக்குள் நுழைய தகுதி இருக்கிறதா?

கருவறைக்குள் நுழைய தகுதி இருக்கிறதா?

ஆர்.கந்தவேல், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சமீபத்தில், திருப்பரங்குன்றம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த வி.சி., தலைவர் திருமாவளவன், 'செல்பி' கேட்ட ஒரு தம்பதிக்காக, தன் நெற்றியில் பூசியிருந்த திருநீறை அழிக்க, விஷயம் சர்ச்சையானது.அதற்கு, 'நான் திருநீறை அழிக்கவில்லை; நெற்றி வியர்வையை துடைக்கும் போது, திருநீறு அழிந்து விட்டது...' என்றவர், அத்துடன் நிறுத்தாமல், 'நெற்றியில் திருநீறு இருந்தால் மட்டும் என்னை கருவறைக்குள் அனுமதித்து விடுவரா?' என்று கேட்டுள்ளார். கருவறைக்குள் என்னமோ பொன்னையும், பொருளையும் கொட்டி வைத்திருப்பது போன்றும், அர்ச்சகர்கள், அவற்றை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துக் கொண்டு போவது போலவும் கேட்டுள்ளார். இவரைப் போன்றே சிலர், 'கருவறைக்குள்நுழைய விடுவரா?' என்ற கேள்வியை அடிக்கடி கேட்டு வருகின்றனர். ஹிந்து மதத்தில் எல்லா ஜாதியினருக்கும் தனிபட்ட கடவுள் வழிபாடும், கோவிலும் உள்ளது. அக்கோவிலில் அந்தந்த ஜாதியினர் மட்டுமே பூஜாரிகளாக இருப்பர். அங்கெல்லாம், 'மதுரை மீனாட்சி கோவில் அர்ச்சகர்; ஸ்ரீரங்கம் பெருமாள் கோவில் அர்ச்சகர்' என்று கூறிக் கொண்டு, கருவறைக்குள் நுழைந்து விட முடியாது. அங்கு எந்த ஜாதியினர் பூஜை செய்கின்றனரோ அவர்கள் தான் அக்கோவில் கருவறைக்குள் நுழைய முடியும். மற்றவர்கள் எவராக இருந்தாலும், வெளியில் இருந்து தான் கடவுளை வணங்க முடியும். இதுதான் கோவில்களின் ஐதீகம்; மரபு.இது தெரிந்தாலும், தெரியாதது போன்று, கருவறைக்குள் நுழைவது குறித்து பினாத்தும் திருமாவளவன் போன்றோருக்கு ஒரு கேள்வி... அங்கு நுழைந்து நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் மூல விக்ரகத்துக்கு அபிஷேகம் அல்லது அலங்காரம் செய்ய போகிறீர்களா அல்லது அர்ச்சனை, நிவேதனம் செய்து, தீபாராதனை காட்டப் போகிறீர்களா?கடவுளை நம்பாத உங்களுக்கு இவற்றை செய்ய தகுதி இருக்கிறதா?நீங்கள் கருவறைக்குள் நுழைய துடிப்பது போல், இனி, பட்டியலின மக்களுக்காக ஒதுக்கப்பட்ட, 'ரிசர்வ்' தொகுதியில் பிற ஜாதியினரும் போட்டியிடலாமா? கல்வி, வேலைவாய்ப்பில் உங்களுக்கான இட ஒதுக்கீடுக்குள் பிற சமூகத்தினர் வேலை வாய்ப்பை பெறலாமா? அதற்கு ஒத்துக் கொள்வீர்களா? கருவறைக்குள் செல்ல வேண்டும் என்றால், அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை, நிவேதனம் மற்றும் தீபாராதனை செய்ய தெரிந்திருக்க வேண்டும். அத்துடன், மந்திரங்களை பிழையின்றி உச்சரிக்கவும், அதற்குரிய ஆகம விதிகளையும் கற்று தேர்ந்திருக்க வேண்டும்.இதில் எதுவுமே தெரியாமல், திறந்த வீட்டிற்குள் எதுவோ நுழைவது போல், கருவறைக்குள் நுழைய முடியுமா?

பாரபட்சமற்ற முறையில் தேர்வு செய்ய வேண்டும்!

என்.எஸ்.வெங்கட்ராமன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன கவுன்சிலர் பதவி அளிக்கும் தமிழக அரசின் உத்தரவு வரவேற்கத்தக்கது தான் என்றாலும், இதனால், அவர்கள் எந்த அளவு நன்மை அடைவர் என்பதை காலம் தான் தீர்மானிக்கும்!தமிழகத்தில் தற்போது, 15 லட்சத்திற்கும் மேல் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இவர்கள், 2016ம் ஆண்டு சட்டப்படி, 21 வகையாக பிரிக்கப்பட்டுள்ளனர். இதில், உடல் ஊனமுற்றோர், பார்வையற்றோர், செவித்திறன் குறைந்தவர்கள், மன நலம் குன்றியோர் என பலரும் அடங்குவர். இவர்களில், 70 சதவீதம் பேர் வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்கின்றனர். மத்திய - மாநில அரசுகள் இவர்களுக்கு பல்வேறு நலத் திட்டங்களை அறிவித்தாலும், அவை நடைமுறைக்கு வருவதில்லை. உதாரணமாக, அரசு வேலை வாய்ப்புகளில், மாற்றுத் திறனாளிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட இடஒதுக்கீட்டை நடைமுறையில் முழுதுமாக அமல்படுத்தவில்லை. அவர்களுக்கான வேலை வாய்ப்புகள் ஏதேனும் ஒரு காரணம் கூறி நிரப்பப்படாமல் உள்ளன.மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமை திட்டத்தை அமல்படுத்த, 2021 -- 2022ல் தமிழக அரசு, 1,775 கோடி ரூபாய் உலக வங்கியிடமிருந்து கடனாக பெற்றது. இத்தொகையில் இதுவரை, 100 கோடி ரூபாய் மட்டுமே மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக செலவு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகை என்னவாயிற்று என்று தெரியவில்லை. இந்நிலையில், தமிழக அரசு அறிவித்துள்ள நியமன கவுன்சிலர் பதவி, அவர்களது பிரச்னைகளை எடுத்துக் கூற வழியமைக்கும்! அதேநேரம், பாரபட்சமில்லாமல் இத்தேர்வு நடைபெறுமா என்ற சந்தேகமும் எழுகிறது. காரணம், இன்றைய நிலையில், அரசு நிர்வாகத்தில் அனைத்து நிலைகளிலும் அரசியல்வாதிகளின் தலையீடு உள்ளன. சில அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் லஞ்சம் பெற்று, பணி நியமன ஆணையை வழங்குகின்றனர்.இந்நிலையில், நியமன கவுன்சிலர் தேர்வின்போது, தகுதி உள்ளவர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்று சந்தேகமாக உள்ளது. அத்துடன், இதுவரை மாற்றுத்திறனாளிகளின் அமைப்புகள் அரசியல் சார்பற்று இயங்கி வந்த நிலையில், கவுன்சிலர் பதவியை பெற வேண்டி, அரசியல் கட்சிகளை சார்ந்த அமைப்புகளாக தங்களை மாற்றிக்கொண்டால், அமைப்புகளிடையே போட்டி ஏற்பட்டு, இதுவரை இருந்து வரும் ஒற்றுமை சிதைந்து போகவும் வாய்ப்புள்ளது. எனவே, போட்டியை தவிர்க்கும் விதமாக இருக்க வேண்டும், நியமன கவுன்சிலர் பதவி! 

விலையை குறைக்குமா மத்திய அரசு!

ஏ.அஸ்மாபாக் அன்வர்தீன், ராமநாதபுரத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: வணிக பயன்பாடு சமையல் காஸ் சிலிண்டரின் விலை தொடர்ந்து ஐந்தாவது மாதமாக மொத்தம், 141.50 ரூபாய் குறைந்துள்ளது வரவேற்கத்தக்கது. அதேநேரம் வீட்டு உபயோக காஸ் சிலிண்டரின் விலை மட்டும் அப்படியே உச்ச விலையில் நீடிப்பது எந்த வகையில் நியாயம்?சாமானிய மக்களின் அன்றாட வாழ்வில், அத்தியாவசிய தேவை யான காஸ் சிலிண்டரின் விலையை குறைக்க மத்திய அரசு முன்வர வேண்டும். அதேபோல், கச்சா எண்ணெய் விலை சர்வதேச அளவில் சரிந்தும் கூட பெட்ரோல், டீசல் சில்லரை விற்பனை விலையை குறைக்காமல், மத்திய அரசு வரிகளை உயர்த்தி வருகிறது.எனவே, வீட்டு பயன்பாடு காஸ் சிலிண்டரின் விலையை குறைத்து, சாமானிய மக்களின் சிரமத்தை குறைக்க மத்திய அரசு முன்வர வேண்டும்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
ஜூலை 11, 2025 17:12

இவர் கருவறைக்குள் போக இவ்வளவு ஆர்வம் காட்டுகிறார், அந்தணர்கள், நித்திய கர்மாக்களை ஒழுங்காக செய்ப்பவர்கள் கூட கோயிலின் கருவறையில் நுழைய எண்ணுவதில்லை காக்கிச் சட்டை அணிந்து கொண்டவுடனே போலீஸ் ஸ்டேஷனில் நுழைந்து வழக்குகளை கையாள்வாரா? அல்லது ராணுவ உடை அணிந்து கவாத்து நடை நடந்துவிட்டால் எல்லைப்புறம் சென்று எதிரியை சுட்டு விட முடியுமா? போனால் வந்தால், ஹிந்து கோயில்கள், வழிமுறைகளை விமரிசிக்காமல் இவர்களால் இருக்க முடியாது


சமீபத்திய செய்தி