என்.ஏ.நாகசுந்தரம்,  குஞ்சன்விளை, கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மருத்துவர் ராமதாஸ், தன் இன மக்கள் நலன் காக்க, பா.ம.க., என்ற கட்சியை ஆரம்பித்து, நடையாய் நடந்து கட்சியை வளர்த்தார். மக்களின் கவனத்தை ஈர்க்க, 'நானோ, என் வீட்டினரோ பதவிக்கு வந்தால், முச்சந்தியில் நிறுத்தி, சவுக்கால் அடியுங்கள்...' என, வீர முழக்கம் இட்டார்.  ஆனால், 'அரசியல்வாதிகளின் பேச்சு, தேர்தலோடு போச்சு' என்பதுபோல், மகனை அமைச்சராக்கி, கட்சி தலைவராகவும் ஆக்கினார். தற்போதோ, மருமகள், பேரன், பேத்தி என குடும்பமே கட்சி பதவிக்கு ஆசைப்படுவதால், தைலாபுரமே குழாயடியாக மாறிவிட்டது. தந்தையும், மகனும் போடும் சண்டையில் தலையை பிய்த்துக் கொள்ளும் இரண்டாம் கட்ட தலைவர்களோ,  எவர் பின் போவது எனத் தெரியாமல் குழம்பி போய் நிற்கின்றனர். 'அந்த குழப்பம் எல்லாம் வேண்டாம்; உயிருடன் இருக்கும் வரை நானே பா.ம.க.,தலைவர். அன்புமணி செயல் தலைவர் மட்டும் தான். அதனால், என்னை நம்புவோருக்கு மட்டும் தான் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தரப்படும்...' என, தன் அதிகாரத்தை ராமதாஸ் உரக்க கூற, 'அதெல்லாம் முடியாது; நானே தலைவர்; என்னை மீறி எதுவுமில்லை...' என்று மல்லுக்கு நின்றார் அன்புமணி. பின் என்ன நினைத்தாரோ,'எங்க குலசாமியே ராமதாஸ் தான்...' என்று கூறி, 'ஐஸ்' வைத்துப் பார்த்தார். அதற்கெல்லாம் ராமதாஸ் உருகவில்லை. அன்புமணி ஓர் ஆளே இல்லை என்பது போல் அவர் தொடர்ந்து பேச, தந்தையின் பேச்சு எரிச்சல் தர, 'குலசாமி இப்போது குழந்தை சாமியாகி விட்டார்' எனவும்,  'நாற்பது வயதில் நாய் குணம்' என்பது போல், 80 வயதில் குழந்தை குணம் என, அதற்கு விளக்கம் வேறு சொல்கிறார், அன்புமணி. அன்புமணியின் மரியாதை பேச்சு,  ராமதாஸ் நடவடிக்கையால் எரிச்சல், கோபமாக மாறக்கூடும். அப்போது,  கட்சியும் இரு பிரிவாக உடைவது நிச்சயம்!  எவருடைய  உரிமைக்கு குரல் கொடுக்கிறது  தி.மு.க.,!
க.அருச்சுனன்,
 பொறியாளர், செங்கல்பட்டில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:  கடந்த
 2012ல் செங்கல்பட்டு தொகுதி தே.மு.தி.க., - எம்.எல்.ஏ., முருகேசன், 
சட்டசபையில் பேசும்போது, 'செங்கல்பட்டு மருத்துவ கல்லுாரிக்கு, 60 
இடங்களாவது பெற்றுத் தாருங்கள்...' என்றார். அப்போதைய முதல்வர் 
ஜெயலலிதா, 'உறுப்பினர் கேட்பதை விட அதிகமாக, 100 இடம் பெற்று தருகிறேன்...'
 என உறுதி அளித்தார். அதன்படியே, 2012 - -13 முதல், அதுவரை இருந்த 40 
இடங்கள்,  100 இடங்களானது. அதைப் பெற்றுத் தந்த பெருமை ஜெயலலிதாவையே 
சாரும்!இந்நிலையில்,  2013ல் மத்திய அரசும், இந்திய மருத்துவ 
கவுன்சிலும், 10 ஆண்டுகளுக்கு மேல் செயல்படும் மருத்துவக் கல்லுாரிகளுக்கு,
 150 இடங்கள்  தர வேண்டும் என கொள்கை வகுத்தது. ஏனோ இன்றுவரை அது தள்ளிப் 
போகிறது. தற்போது, காஞ்சிபுரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட 
நோயாளிகளும் செங்கல்பட்டு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு வருகின்றனர். 
இடம், கட்டடம் என தனியார் மருத்துவ கல்லுாரிகளை விட இங்கு பல மடங்கு 
வசதிகள் உள்ளன.  புதிதாக ஆரம்பிக்கும் தனியார் மருத்துவக் 
கல்லுாரிகளுக்கு கூட, 150 இடம்  தரப்படும் நிலையில், 60 ஆண்டுகள் பழமை 
வாய்ந்த, இம்மருத்துவ கல்லுாரிக்கு அது மறுக்கப்படுகிறது. இத்தனைக்கும் 
புதிதாக பல கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன; பல புதிய சிகிச்சை முறைகள் 
ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அப்படி இருந்தும், 150 இடம் பெற்றுத் தருவது 
குறித்து சட்டசபையில் எந்த உறுப்பினரும் பேசவில்லை. சமீபத்தில், 
செங்கல்பட்டு மருத்துவ கல்லுாரி பட்டமளிப்பு விழாவில் பேசிய சுகாதாரத்துறை 
அமைச்சர் சுப்பிரமணியம், 'தமிழகத்தில், 36 அரசு மருத்துவ கல்லுாரிகளில், 
5,050  மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கியுள்ளேன். செங்கல்பட்டு அரசு 
மருத்துவ கல்லுாரியில், 100 மாணவர்களுக்கு பட்டத்தை வழங்குவதில் மகிழ்ச்சி 
அடைகிறேன்...' என்று பேசினார். மேடையில் திருப்போரூர் மற்றும் 
செங்கல்பட்டு எம்.எல்.ஏ.,க்கள்  இருவரும் அமர்ந்திருந்தனர். அப்போதாவது, 
அவர்கள் அமைச்சரிடம், 150 இடம்  கேட்டு கோரிக்கை வைத்திருக்கலாம்; ஆனால், 
தலையாட்டி பொம்மைகள் போல் அமர்ந்திருந்தனரே தவிர, வாய்திறந்து இது குறித்து
 ஏதும் பேசவில்லை.   அ.தி.மு.க., அரசு, 11 மருத்துவக் 
கல்லுாரிகளுக்கு அனுமதி வாங்கித் தந்தது. ஆனால், நான்கு ஆண்டுகள் ஆகியும், 
தி.மு.க., அரசு ஒரு மருத்துவ கல்லுாரிக்கும் அனுமதி வாங்கவில்லை.  தகுதி
 இருக்கும் கல்லுாரிகளுக்கு கூட, தேவையான இடங்களை கேட்டுப் பெறவில்லை. 
ஆனால், பேசுவது மட்டும் உரிமைக்கு குரல் கொடுப்போம் என்று!எவருடைய உரிமைக்கு குரல் கொடுக்கின்றனரோ! களைகள் களையப்படுமா? 
மி.பெர்லின்
 பிரபு, கன்னியாகுமரியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:  
திருப்புவனம் காவலர்களால் அஜித்குமார் என்ற இளைஞர் கொலைவெறி தாக்குதலுக்கு 
உள்ளாகி இறந்து போயிருக்கும் செய்தி,  ஒட்டுமொத்த மக்களையும் அதிர்ச்சி 
அடைய வைத்துள்ளது. கடந்த 2021 முதல்,  தற்போது வரை, 25 பேர் போலீஸ் காவலில்
 இறந்துள்ளனராம். காவல் துறை என்றால் பொதுமக்களுக்கு ஒரு 
பாதுகாப்பு உணர்வு ஏற்பட வேண்டும். ஆனால்,  இன்றைய நிலையை பார்க்கும்போது 
ஒருவித அச்ச உணர்வும், பயமும் தான் ஏற்படுகிறது.காவலர்கள் 
தாக்கும் வீடியோ காட்சிகள் இதயத்தை நடுங்க வைக்கின்றன. புலனாய்வுகள் செய்து
 குற்றவாளிகளை பிடிக்க வேண்டியவர்கள், ஓர் அப்பாவியிடம் தங்கள் வீரத்தை 
காட்டியுள்ளனர். இதையே தவறு செய்த ஓர் அரசியல்வாதியிடமோ,  பெரும் 
பணம் படைத்தவர்களிடமோ காட்டியிருப்பரா?   ஏழைகள் என்றால் கேட்க எவர் 
உள்ளனர் என்ற இளக்காரம்!சாப்பாட்டில் கொஞ்சம் காரம் கூடினாலே 
சாப்பிட முடியாது. ஆனால், இவர்கள் அஜித்குமாரை மிளகாய் பொடியை சாப்பிட 
வைத்தும், அவருடைய அந்தரங்க உறுப்புகளில் மிளகாய் பொடியை போட்டும் சித்ரவதை
 செய்துள்ளனர்.  கொலைகாரன் கூட இவ்வளவு அரக்கத்தனமாக, கொடூரமாக 
சிந்திக்கவும் மாட்டான், செயல்படவும் மாட்டான். அதைவிட காவலர்களின் செயல் 
மனித தன்மையற்று உள்ளது. ஒருவேளை அஜித்குமார் நகைகளை திருடியிருந்தால் கூட, அவருக்கான தண்டனையை, நீதிமன்றம் தான் தீர்மானிக்க வேண்டுமே தவிர, போலீசார் அல்ல!எனவே,
 அஜித்குமார் விஷயத்தில் சட்டமும்,  நீதியும் நிலைநாட்டப்பட வேண்டும்.  
அதேநேரம் காவல் துறையில் இருக்கும் களைகளும் களையப்பட வேண்டும்!