உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் /  கேலிக்கூத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்!

 கேலிக்கூத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்!

எஸ்.உதயம் ராம், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: இந்திய தேர்தலில் எவர், எங்கு வேண்டுமானாலும் போட்டுயிட்டு வெற்றி பெறலாம்; அது அவர்களின் உரிமை!ஒரே வேட்பாளர் வெவ்வேறு கட்சிகளுக்கு மாறி, வெவ்வேறு சின்னங்களில் எத்தனை முறை வேண்டுமானாலும், எந்தத் தொகுதியிலும் போட்டியிடலாம்; அதுவும் அவர்கள் உரிமையே!தேர்தல் மையின் ஈரம் காய்வதற்குள், பதவி வெறியுடன் தனக்கு ஓட்டுப் போட்ட மக்களுக்கும், தான் போட்டியிட்ட கட்சிக்கும் நம்பிக்கைத் துரோகம் செய்து, சுயநலத்துடன் பதவி விலகி வேறொரு கட்சிக்குத் தாவுவது கூட அவர்கள் உரிமைதான்.ஆனால், கட்சி தாவிய அதே வேட்பாளரை, அதே தொகுதியில், தாவிய கட்சி சார்பாக போட்டியிட வாய்ப்பு வழங்குவது, ஜனநாயகத்தை கேலி செய்வதற்கு ஒப்பானது!தொகுதி வேட்பாளர் இறந்தால், இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதி மட்டுமல்ல; அது ஜனநாயக கடமையும் கூட!ஆனால், சுயநலத்தால், கட்சி மாறியவர்களின் நலனுக்காக இடைத்தேர்தல் நடத்துவதும், அதற்காக மக்களின் வரிப்பணம் செலவு செய்யப்படுவதும், நம் தேர்தல் நடைமுறையின் மிகப் பெரிய மடமை!வாக்காளர்களை ஏமாளிகளாக்கி, தேர்தல் முறையை கோமாளித்தனமாக்கும் இதுபோன்ற அரசியல் வியாபாரத்திற்கு, இந்த இடைத்தேர்தலில் தமிழக மக்கள் முற்றுப்புள்ளி வைத்து விட வேண்டும்!

பேச்சு வேண்டாம்; நடவடிக்கையே தேவை!

எஸ்.ஸ்ரீனிவாசன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சட்டசபை விவாதத்தில் முதல்வர் விஜய், சர்க்காரியா கமிஷன் அறிக்கையிலிருந்து துவங்கி, 'மிசா' காலத்தின் உண்மையான பின்னணி வரை பேசியது, தி.மு.க.,வினரை நிலைகுலைய வைத்து விட்டது. சர்க்காரியா கமிஷன், வெறும் பழைய கதை அல்ல; அது, 28 குற்றச்சாட்டுகளை விசாரித்து, பலவற்றை, தெளிவான, உறுதியான ஆதாரங் களுடன் நிரூபித்தது. வான்வழி பூச்சிக்கொல்லி தெளிப்பு ஒப்பந்தத்தில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் அன்பில் தர்மலிங்கத்திற்கு கிட்டத்தட்ட, 5.3 லட்சம் ரூபாய் முதல், 5.75 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் கிடைத்ததாகக் கண்டறிந்தது. வீராணம் குடிநீர் திட்டத்தில், கருணாநிதி தன் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, தன் அக்காள் மகன் முரசொலி மாறனின், நண்பர் சத்யநாராயணாவின் நிறுவனத்திற்கு முறைகேடாக ஒப்பந்தம் அளித்ததாகவும், அதனால், 6 கோடி ரூபாய் பொதுப்பணம் வீணடிக்கப்பட்டதாகவும் கமிஷன் தெளிவாக கூறியுள்ளது. மேலும், முரசொலி கட்டடத்திற்கு இலவசப் பொருட்கள் பெறப்பட்டதாகவும், அமலாக்கத் துறை ஆதாரங்களுடன் பதிவு செய்துள்ளது. இவையெல்லாம் கடந்த கால, தி.மு.க.,வின் கொள்ளை என்று எடுத்துக் கொண்டாலும், சமீபத்திய, தி.மு.க., ஆட்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் விநியோக துறையில் ஒப்பந்த மதிப்பில், 7.5 சதவீதம் முதல், 10 சதவீதம் வரை, 'கட்சி நிதி' என்ற பெயரில், லஞ்சம் வசூலிக்கப்பட்டதாகவும், மாற்றல்- பணியமர்வுகளில் மட்டும், 365.87 கோடி ரூபாய் பணமோசடி நடந்ததாகவும், ஒரு பதவிக்கு, 7 லட்சம் ரூபாய் முதல், 1 கோடி ரூபாய் வரை வசூல் செய்யப்பட்டதாகவும், அமலாக்கத் துறை கூறுகிறது. 'நாங்கள் அரசு பணத்தைத் தொட மாட்டோம்; தொட்டவர்களை விடமாட்டோம்' என்ற முதல் வரின் முழக்கம், மக்களிடம் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது. 50 ஆண்டுகளுக்கு முந்தைய, தி.மு.க.,வின் குற்றங்களுக்கு இப்போது சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது என்றாலும், கடந்த தி.மு.க., ஆட்சியில் நடந்த முறைகேடுகள் மீது நடவடிக்கை எடுக்கலாம் அல்லவா? அதனால், முதல்வர் வெறும் உணர்ச்சிப்பூர்வமான பேச்சுடன் நின்றுவிடாமல் , அமலாக்கத் துறை மற்றும் விஜிலன்ஸ் அறிக்கைகளில் குற்றஞ்சாட்டப்பட்ட தி.மு.க., புள்ளிகள் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்ய வேண்டும். சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்து, விசாரணையை விரைவுபடுத்தி, இந்த அரசின் ஐந்து ஆண்டு காலத்திற்குள்ளாகவே, குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும். அப்போதுதான், 'ஊழலுக்கு எதிரானவர்' என்ற விஜயின் கூற்று உண்மையாகும். பேச்சில் காட்டிய வேகத்தை செயலில் காட்டினால் மட்டுமே, மக்கள் மனதில் அவர் விதைத்துள்ள நம்பிக்கை வலுப்பெறும். இல்லையெனில், இதுவும் மற்றொரு அரசியல் நாடகமாகவே முடியும். தமிழக மக்கள் இப்போது பேச்சை அல்ல; செயலையே எதிர்பார்க்கின்றனர்!

மதுவிலக்கு அமைச்சர் தள்ளாடுவது ஏன்?

கோ.பாண்டியன், செங்கல்பட்டில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: டாஸ்மாக் உயர் அதிகாரிகள், டாஸ்மாக் கடைகளில் ஆய்வில் ஈடுபட்டு, கூடுதலாக பணம் வசூலித்த, 67க்கும் மேற்பட்ட பணியாளர்களை, 'சஸ்பெண்ட்' செய்து உள்ளனர். இந்நிலையில், 'கடந்த காலங்களில் மது பாட்டில்களுக்கு கூடுதலாக ஐந்து ரூபாய் வாங்கியவர்களை, 10 ரூபாயாக வாங்க சொன்னவர்கள், தி.மு.க., வினர் தான். அவர்களால் கண் துடைப்பிற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிலரை, தற்போது பணியில் சேர்த்திருக் கிறோம்' என்று கூறியுள்ளார், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் விக்னேஷ். கடந்த ஆட்சியில் பாட்டில்களுக்கு கூடுதலாக, 10 ரூபாய் வாங்கி சஸ்பெண்ட் செய்யப்பட்டோரை பணியில் சேர்த்துள்ளதாக கூறும் அமைச்சர், தற்போது, கூடுதல் விலைக்கு மது பாட்டில்களை விற்ற, 67 பணியாளர்களை சஸ்பெண்ட் செய்துள்ளதை பார்க்கும் போது, ஒரு கண்ணில் வெண்ணெயும், மற்றொரு கண்ணில் சுண்ணாம்பையும் தடவுவது போல் உள்ளது. 'கடந்த ஆட்சியில் கண் துடைப்பிற்காக, சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிலரை தற்போது பணியில் சேர்த்திருக்கிறோம்' என்கிறார், அமைச்சர். தற்போது இந்த ஆட்சியில் செய்யப்பட்ட சஸ்பெண்ட் நடவடிக்கையும் கண் துடைப்பு தானா? அமைச்சரின் பேச்சில், ஏதாவது அர்த்தம் இருக்கிறதா? மது அருந்தியவர்கள் தள்ளாடுவது போல், டாஸ்மாக் பணியாளர்கள் சஸ்பெண்ட் விஷயத்தில் அமைச்சருக்கு ஏன் இந்த தள்ளாட்டம்?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை