உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / மாற்று ஏற்பாடு சொல்லி கொடுங்களேன்!

மாற்று ஏற்பாடு சொல்லி கொடுங்களேன்!

ப. ராஜேந்திரன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வேம்பார்பட்டியைச் சேர்ந்தவர், 24 வயதுடைய கூலித் தொழிலாளி பாண்டி. இவருக்கும், வளர்மதி என்ற 17 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டு, திருமணம் செய்து கொண்டனர்.இருவரும் பஸ்சில் சென்றபோது, பாண்டி, போதையில் இருந்ததால் மனைவியுடன் தகராறு செய்து, அவரை பஸ்சிலிருந்து கீழே தள்ளிவிட்டார். ஏழு மாத கர்ப்பிணியான வளர்மதி இறந்துவிட்டார்.இது போன்ற சம்பவங்கள், இப்போது அடிக்கடி நடக்கின்றன.குடிபோதைக்கு ஆளான ஒருவனால், இரு உயிர்கள் பலியாகி விட்டன. இந்தக் குடியால், எத்தனையோ குடும்பங்கள் பாழாகிக் கொண்டிருக்கின்றன. விபத்து, கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம் போன்ற குற்றங்களும் பெருகி விட்டன.டீ குடிப்பது போன்று, மது குடிக்கும் பழக்கம் பெருகி விட்டது. இதனால், தமிழக மக்களின் பணித்திறன் பாதிக்கப்படுகிறது. நாட்டுக்கு கேடான விஷயத்திற்கு அரசு துணைபோகிறது என்று இதை எடுத்துக் கொள்ள வேண்டும்.வருமானத்துக்கு வல்லுனர்கள் யாராவது மாற்று ஏற்பாட்டை, அரசுக்கு சொல்லிக் கொடுங்களேன், ப்ளீஸ்!

வள்ளுவர் சொல் அம்பலத்தில் ஏறவில்லையே?

எம்.எஸ்.ரவி சங்கர், ைஹதராபாத், தெலுங்கானா மாநிலத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'செக்குக்கும், சிவலிங்கத்துக்கும் வித்தியாசம் தெரியாமல் இருக்கிறான்' என்ற சொலவடை உண்டு. அது போல, திராவிட மாடல் ஆட்சியாளர்களுக்கு, மத்திய அரசிற்கும், ஜி.எஸ்.டி., கவுன்சிலுக்கும், நிதி கமிஷனுக்கும் வித்தியாசம் தெரியவில்லை.இவர்கள் 1 ரூபாய் மத்திய அரசுக்கு வரியாக கொடுக்கின்றனராம்; மத்திய அரசு இவர்களுக்கு, 26 பைசா தான் கொடுக்கிறதாம். இவர்கள் ஜி.எஸ்.டி., வரி 1 ரூபாய் கொடுக்கின்றனர் என்றால், அதில் மாநில ஜி.எஸ்.டி., 50 பைசா, அந்த நிமிடமே அவர்கள் பாக்கெட்டுக்கு வந்து விடுகிறது.முன்பு, உற்பத்தி வரி, விற்பனை வரி, மதிப்புகூட்டு வரி, நுழைவு வரி என்று, ஒரே பொருளுக்கு ஒவ்வொரு மாநிலமும், ஒவ்வொரு விகிதத்திலும்; மத்திய அரசு ஒரு விகித்திலும் வசூல் செய்து, அவற்றை இஷ்டத்திற்கு பயன்படுத்தினர். வரிஏய்ப்பு 80 சதவீதம்.இது தவிர, முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் ஏவி விட்ட சேவை வரி வேறு!இவை எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து, ஜி.எஸ்.டி., என்ற ஒரே வரி, நாடு முழுதும் வசூலிக்கும் நடைமுறை உருவாக்கப்பட்டது. இதில், எந்தெந்த பொருளுக்கு எவ்வளவு ஜி.எஸ்.டி., என்பதை முடிவு செய்வது, ஜி.எஸ்.டி., கவுன்சில் தான். இதன் தலைவர், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலத்தின் நிதி அமைச்சர், சுழற்சி முறையில் இருப்பார்.அனைத்து மாநில நிதி அமைச்சர்கள், இதன் உறுப்பினர்கள். மத்திய நிதி அமைச்சர், வெறும் ஒருங்கிணைப்பாளர் தான். அவ்வப்போது உறுப்பினர்கள் கூட்டம் கூடி, இந்தக் குழு முடிவு செய்வதை ஒப்புக் கொண்டு, வெளியே வந்து, 'ஐயோ... மோடி அரசு வஞ்சிக்கிறது...' என்று ஒப்பாரி வைக்கின்றனர்.மத்திய அரசு வசூலிக்கும் வரிகளில், மாநிலத்திற்கு பகிர்ந்தளிப்பதுடன் இல்லாமல், பாதுகாப்பு, உள்கட்ட மைப்பு, இயற்கை பேரிடர்களுக்கு உட்பட்ட மாநிலத்திற்கு உதவுதல், மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்துதல் என்று பல உண்டு. காங்கிரஸ் மாடலில், '1 ரூபாய் மக்களுக்கு அரசாங்கம் உதவி செய்கிறது என்றால், அதில், 12 பைசா தான் பயனாளிகளுக்கு போய் சேருகிறது. மற்ற 88 பைசாவை இடைத்தரகர்கள் அள்ளிக்கொள்கின்றனர்' என்று முன்னாள் பிரதமர் ராஜிவே சொல்லி இருந்தார்.இந்த உண்மையை கருத்தில் கொண்டு, தமிழகத்திற்கு இவர்கள் கேட்கும் எந்த நிதியையும் நேரடியாக கொடுக்காமல், மத்திய அரசு நிறுவனங்கள் மூலம் நலத் திட்ட உதவிகளை நடத்தி வருகிறது.முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழகத்திற்கு வரவேண்டிய நல்ல திட்டங்களுக்கு தடையாகவே இருந்ததில்லை.தற்பொழுது, தமிழகமும், மேற்கு வங்கமும், ஏழை எளியவர்களுக்கு மத்திய அரசு வழங்கும் விலையில்லா அரிசி 5 கிலோ, 1 கிலோ பருப்பு, 1 கிலோ எண்ணெய் ஆகிய திட்டத்துக்கு தடையாக இருக்கின்றனர் என்று கேள்விப்படுகிறோம்.ஏழை எளியவர்களுக்கு கொடுப்பதை தடுப்பவர்கள் பற்றி வள்ளுவர், 'கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உண்பதும் உடுப்பதும் இன்றி கெடும்' என்று சொல்லி இருக்கிறார். 'அரசியல் பிழைத்தார்க்கு அறம் கூற்றாவதும்' என்று இளங்கோவன் சொல்லி இருக்கிறார். ஆட்சியாளர்கள் இதை மறந்தனரே...!

தேர்வெழுதுவோருடன் தேர்வு குறித்து ஆலோசிப்பதா?

எஸ்.அதியமான், தென்காசியிலிருந்து அனுப்பிய 'இ-மெயில்' கடிதம்: ஒரு பள்ளிக்கூடம் இருக்கிறது. தலைமை ஆசிரியர் ஒருவர் இருக்கிறார்; ஆசிரியர்கள் பலர் இருக்கின்றனர். நுாற்றுக்கணக்கில் அல்லது ஆயிரக்கணக்கில் அந்த பள்ளிக்கூடத்தில் மாணவர்களும் பயில்கின்றனர்.மாணவர்களுக்கு தேர்வு நடத்த வேண்டியது, தலைமை ஆசிரியர்; அதாவது நிர்வாகம்; தேர்வை எழுத வேண்டியவர்கள் மாணவர்கள்.தலைமை ஆசிரியர் என்பவர், மற்ற ஆசிரியர்களை அழைத்து, தேர்வை எப்படி நடத்துவது என்று ஆலோசித்தால், அது முறையானது; நேர்மையானது; நாணயமானது; அனைவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடியது.அந்த ஆலோசனை கூட்டத்துக்கு, தேர்வெழுத வேண்டிய மாணவர்களையும் வரவழைத்து ஆலோசிப்பது, எந்த அளவுக்கு முறைகேடானதோ, அந்த அளவுக்கு முறைகேடானது தான் இந்திய தேர்தல் கமிஷனர்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகளையும் அழைத்து ஆலோசித்து இருப்பது.தேர்தல் அட்டவணைப்படியும், தேர்தல் விதிமுறைகளின் படியும் தேர்தல் நடக்கும்; அதற்கு கட்டுப்பட்டு, கட்சிகள் போட்டியிட வேண்டும். அவ்வளவு தானே!குற்றவாளிகள் போட்டி யிடுவதையும் தடுக்க முடியாது; ஒரே வேட்பாளர் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிடுவதையும் தடுக்க முடியாது; பணப்பட்டுவாடாவையும் தடுக்க முடியாது; தேர்தலின் போது அரசியல் கட்சிகள் நடத்து அக்கிரமங்களையும், அராஜகங்களையும் தடுக்க முடியாது.இது தான் தேர்தல் ஆணையத்தின் இன்றைய நிலை. போறாத குறைக்கு, 'மாணவர்களிடம்' ஆலோசிக்கவும் வேண்டும்.ஜனநாயகத்தை புரிஞ்சுக்கவே முடியலியே?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை