உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் /  சபாஷ், சவுமியா மேடம்!

 சபாஷ், சவுமியா மேடம்!

கே.மணிவண்ணன், நடுப்பாளையம், கோவை மாவட்டத்தில் இருந்து அனுப்பிய 'இ - மெயில்' கடிதம்: சட்டசபையில், பாட்டாளி மக்கள் கட்சியின் தருமபுரி எம்.எல்.ஏ., சவுமியா, 'ஒகேனக்கலில் இருந்து 4 கி.மீ., துாரமே உள்ளது, மேகதாது. அதனால், இங்கு அணை கட்டினால் ஒகேனக்கல்லுக்கு பெருமளவு நீர்வரத்து நின்றுவிடும்.'மேலும், ஒகேனக்கலில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது, அந்த நீரை தருமபுரி மாவட்டத்திற்கு திருப்பி, இங்குள்ள குளம் குட்டைகளில் நிரப்பினால், விவசாயம் மற்றும் குடிநீருக்கான நீர் ஆதாரத்தை பெருக்க முடியும். இதுகுறித்து அரசு ஆவ ன செய்ய வேண்டும்' என்று பேசியுள்ளார். பேசியபின், தொழில் துறை அமைச்சரை சந்தித்து, தருமபுரி சிப்காட் வளாகத்தில் விரைந்து தொழிற்சாலைகளை துவக்கி, இம்மாவட்ட மக்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி, வாழ்வாதாரத்தை உயர்த்தக் கோரி மனு அளித்துள்ளார்.சபையில் பெரும்பாலான எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் கட்சி தலைவர்களையும், கடந்த காலத்தில் தங்கள் அரசு செய்த சாதனைகளையும் சொல்லி, நேரத்தை வீணடித்து வரும் நிலையில், தொகுதி மக்களின் பிரச்னை, தேவை குறித்து மட்டும் பேசுகிறார், சவுமியா.மற்ற கட்சி உறுப்பினர்களும், சட்டசபை நிகழ்ச்சிகளை நேரலையில் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர் என்பதை உணர்ந்து, தேவையற்ற பேச்சுக்களை தவிர்த்து, தொகுதி பிரச்னைகளை மட்டும் பேச வேண்டும்!

தி.மு.க.,வை காப்பாற்ற முடியாது!

ஆர்,வித்யாசாகர், அருப்புக்கோட்டை, விருதுநகர் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ' தி.மு.க.,வுக்கு ஓட்டு போடாதவனுக்கு நல்ல சாவு கிடைக்காது' என்று சாபமிட்டுள்ளார், அக்கட்சியின் அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி. தோல்வியால் ஏற்பட்ட விரக்தியில் உளறினாரா அல்லது வயது மூப்பு காரணமாக அவரது புத்தியில் கோளாறு ஏற்பட்டுவிட்டதா என்று தெரியவில்லை. 'கருணாநிதி முதல்வராக இருந்தும் சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் பெரிய மருத்துவமனையைக் கொண்டுவர முடியவில்லை. ஆனால், முன்னாள் சுகாதார துறை அமைச்சர் சுப்பிரமணியன் அதை சாதித்துள்ளார்' என்றும் கூறியுள்ளார். இத்தனை நாசுக்காக கட்சித் தலைமையை அசிங்கப்படுத்த இவரைத் தவிர வேறு யாராலும் முடியாது. முதல்வராக, கட்சித் தலைவராக இருந்தும் சொந்தத் தொகுதியில் கூட வெற்றி பெற முடியாமல் நொந்துபோயிருக்கும் ஸ்டாலினையும் விட்டுவைக்கவில்லை, பாரதி. அவரை உசுப்பேற்றும் விதமாக, 'இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயிக்கக் கூடிய தலைவராக உருவாகிக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின்' என்றும் பிதற்றியுள்ளார். இவரது பேச்சைக் கேட்கும்போது, 'கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன், வானம் ஏறி வைகுண்டம் போக நினைத்தானாம்' என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது. மாநில முதல்வர்களாக இருந்து கொண்டு, தாங்கள்தான் தேசிய அரசியலில் முன்னோடிகள் என்று ஆணவத்தில் ஆட்டம்போட்ட ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலும், திரிணமுல் காங்., கட்சி தலைவி மம்தா பானர்ஜியும் தேர்தலில் தோற்று, இருக்கும் இடம் தெரியாமல் இருப்பதை, பாரதி நினைவில் கொள்ளவேண்டும் . எழுபது வயதைக் கடந்த மாவட்டச் செயலர்களின் பதவியைப் பறித்து, இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கப் போகிறாராம் ஸ்டாலின். காலம் கடந்த ஞானோதயம் என்றாலும், தோல்வியால் கற்றுக்கொண்ட உருப்படியான பாடம் இது! குறுநில மன்னர்களைப் போல் ஆணவத்தில் ஆடிக்கொண்டிருந்த முன்னாள் அமைச்சர்களின் கொட்டம் இனி அடங்கிவிடும். அவர்களது பட்டியலில், 80 வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் பாரதியையும் சேர்த்து, அரசியலிலிருந்து ஓய்வு கொடுத்து வீட்டுக்கு அனுப்ப வேண்டியது காலத்தின் கட்டாயம். அதைவிடுத்து, இனியும் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, பாரதி போன்றோரை பேச அனுமதித்தால், அண்ணாதுரையே மறுபிறவி எடுத்து வந்தாலும், தி.மு.க.,வைக் காப்பாற்ற முடியாது!

தமிழக அரசு கவனத்தில் கொள்ளுமா?

செ.கண்ணப்பன், தலைமையாசிரியர் (பணி நிறைவு), தி.புதுார், சிவகங்கை மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 5ம் தேதி, சென்னையில், ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், தேர்வாளர்கள் பட்டியல் விபரமோ, 'நாளை கல்யாணம்... பிடி பாக்கு, வெற்றிலை' என்பது போல், செப்., 3ம் தேதி காலையோ அல்லது மாலையோ தான் அறிவிக்கப்படுகிறது. தேர்வான ஆசிரியர்கள், காவல் துறை மற்றும் இதர சான்றுகளையும், முதன்மைக் கல்வி அலுவலரின் அடையாள சான்றிதழையும் பெற்று, அன்றே பயணப்படும் நிலைக்கு ஆளாகின்றனர். ரயிலில் பயணச்சீட்டு கிடைக்காமலும், பேருந்துகளில் அதிக கட்டணம் செலுத்தியும் அவதிப்பட்டு சென்னைக்கு வர வேண்டிய நிலை உள்ளது. தேசிய நல்லாசிரியர் விருது பட்டியலை குறைந்தது, 10 தினங்களுக்கு முன் அறிவித்து விடுகிறது, மத்திய அரசு. எனவே, புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழக அரசு, தேர்வாளர்கள் பட்டியலை ஆகஸ்ட் மாத இறுதிக்குள் அறிவித்தால், விருது பெறும் ஆசிரியர்கள் எந்தவித மன உளைச்சலுமின்றி சுகமாக பயணித்து, விருதை பெறுவதற்கு சென்னை வர வசதியாக இருக்கும். ஆசிரியர்களின் இந்த சின்ன குறையை, தமிழக அரசு கவனத்தில் கொள்ளுமா?

கோட்டை விட்டு விடாதீர்கள்!

ஆர்.ஸ்ரீனிவாசன், பெங்களூரில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மத்திய அரசின், 'மசகான் டாக் ஷிப் பில்டர்ஸ்' நிறுவனம், துாத்துக்குடியில், 15,000 கோடி ரூபாய் முதலீட்டில் கப்பல் கட்டும் தளம் அமைக்க தமிழக அரசுடன், 2025ல் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்திருந்தது. இந்நிலையில், தற்போது, அந்நிறுவனம் ஆந்திராவை நோக்கி சென்றுள்ளது. கடந்த ஆட்சியில் தான், தமிழகத்திற்கு வரும் முதலீட்டு நிறுவனங்கள் ஆந்திராவிற்கு சென்றது என்றால், இந்த ஆட்சியிலும் அது தொடர்ந்தால், தமிழகத்தின் நிதிச் சுமையை சமாளிக்க முடியாது; வேலை வாய்ப்பும் முடங்கி விடும். துாத்துக்குடியில் நிலம் ஒதுக்கீட்டில் தாமதம் உள்ளிட்ட காரணங்களால், தற்போது இந்நிறுவனம் ஆந்திரா நோக்கி சென்றுள்ளது. எனவே, முதல்வர் விஜய், இவ்விஷயத்தை கவனத்தில் எடுத்து, நம் மாநிலத்திற்கு வரும் முதலீடுகள், நம் மாநிலத்துக்கே வர செய்ய வேண்டும்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
ஆக 23, 2026 19:10

தொழில். துறை. அமைச்சர். பீறிக்கொண்டாரே, ஒரு. லட்சம். கோடி. வருகிறது. அவர் இந்த. திட்டத்தைப். பிடித்து. வைக்க. என்ன. செய்தார். ?


சமீபத்திய செய்தி