உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் /  வேகம் போதாது முதல்வரே!

 வேகம் போதாது முதல்வரே!

சி.ஸ்ரீதேவி, பாம்பனார், இடுக்கி மாவட்டம், கேரளாவில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'கடந்த காலத்தில் ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்காததால், போதைப்பொருள் கலாசாரம் ஆழமாக வேரூன்றி, மரமாக வளர்ந்துள்ளது.'போதை என்ற மரத்தின் ஒரு சில கிளைகளையே தற்போது வெட்டியிருக்கிறோம்; போதை எனும் முழு மரத்தையும் வேரோடு அகற்ற வேண்டும்' என்று சட்டசபையில் பேசியுள்ளார், முதல்வர் விஜய்.தினமும், ஒரு கோடி பேர், போதைக்காக, டாஸ்மாக் கடையை நாடுகின்றனர். அதுபோக, கஞ்சா, அபின், ஹெராயின், மெத்தாம் பெட்டமைன், போதை மாத்திரைகள் போன்றவற்றை பயன்படுத்துவோரும் உண்டு.போதை பழக்கத்தின் காரணமாக, நாள்தோறும் பல குடும்பங்கள் சீரழிந்து வருகின்றன. எனவே, போதையில்லா தமிழகத்தை உருவாக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.முந்தைய, தி.மு.க., ஆட்சியில் மரக்காணம் மற்றும் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்தே, 80க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்தனர்.'அப்பா சொல்கிறேன்... போதையின் பாதையில் யாரும் சென்று விடாதீர்கள்' என்று, அப்போதைய முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்த போதிலும், விற்பனை குறைவாக இருந்த, 500 மதுக்கடைகளை மூடுவது போல மூடிவிட்டு, அதைவிட பல மடங்கு எண்ணிக்கையில் மனமகிழ் மன்றங்களை திறந்தார்.போதையை ஒழிப்பதற்காக அதிகாரிகளை அழைத்து, ஆண்டுக்கு ஒரு முறை கண்துடைப்பு கூட்டமும் போட்டார். ஆனால், போதைக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.தமிழக வெற்றிக் கழக அரசு பதவி ஏற்றவுடன், 717 மதுக்கடைகளை மூடியது. ஆனாலும், போதைக்கு எதிரான அரசின் நடவடிக்கைகளின் வேகம் போதாது.கேரளாவில், காங்கிரஸ் தலைமையில் புதிய அரசு அமைந்த பின், போதைப் பொருட்களுக்கு எதிராக, 'ஆப்பரேஷன் துாபான்' எனும் திட்டத்தின் கீழ், இதுவரை, 10,070 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, மூன்று ஆசிரியைகள் உட்பட, 10,883 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஆனால், கேரளாவை விட பல மடங்கு பெரிய மாநிலமான தமிழகத்தில், இதுவரை, 3,263 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 4,350 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.எனவே, போதையில்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்ற முதல்வரின் கனவு நனவாக வேண்டும் என்றால், மதுக்கடைகள் மற்றும் மனமகிழ் மன்றங்களின் எண்ணிக்கையை படிப்படியாக குறைப்பதுடன், போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேலும் தீவிரமாக்க வேண்டும்!

பிரிவினைக்கு பெயர் தான் மதச்சார்பின்மையா?

கு.காந்தி ராஜா, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், 9, 10-ம் வகுப்பு பயிலும் முஸ்லிம் மாணவியருக்கு ஆண்டுக்கு, 2,000 ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்றும், இளநிலை படிப்புகளில் சேரும் முஸ்லிம் மாணவியருக்கு கல்விக் கட்டணத்தை அரசே வழங்கும் என்றும் தமிழக வெற்றிக் கழக அரசு அறிவித்துள்ளது. மேலும், இஸ்லாமிய மாணவ - மாணவியர் சர்வதேச அளவில் உயர்தரக் கல்வியை பெற, வெளிநாட்டில் முதுகலை படிப்பு படிக்க, 10 பேருக்கு, தலா, 36 லட்சம் ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. இஸ்லாமிய மாணவ - மாணவியருக்கு கல்வி உதவித் தொகை வழங்குவதில் எவருக்கும் எந்த பிரச்னையும் இருக்கப் போவதில்லை. ஆனால், ஹிந்து மாணவ - மாணவியர் என்ன பாபம் செய்தனர்? அவர்களுக்கு ஏன் இதுபோன்று எந்த சலுகையும் வழங்கப்படவில்லை? திரைப்படங்களில் தாங்கள் பார்த்து ரசிக்கும் தங்கள் விஜய் அண்ணா, தமிழக முதல்வரானால், அவர் நடித்த படங்களைப் போல ஜாதி, மத பிரிவினை இன்றி, அனைவரையும் ஒன்றாக அரவணைப்பார் என்று எண்ணித் தானே, நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஓட்டுப் போடச் சொல்லி, அனைத்து மத மாணவ - மாணவியரும் தங்கள் பெற்றோரை நச்சரித்தனர்? அப்படியிருக்கையில், இது போன்று ஒரு மதத்தவருக்கு மட்டும் சிறப்பு சலுகைகள் அறிவிப்பது, மாற்று மதத்தை சேர்ந்தவர்களை மனம் வெதும்ப வைக்காதா? 'முதல்வர் விஜய் அண்ணா கூட, மதத்தின் பெயரால் மாணவ - மாணவியரிடம் பிரிவினை காட்டுகிறாரே...' என்று மாணவச் செல்வங்கள் எண்ண மாட்டார்களா? ஒரு வகுப்பில் ஒன்றாக படிக்கும் மாணவியரிடம், 'நீ ஹிந்து; உனக்கு இந்த சலுகைகள் இல்லை; நீ முஸ்லிம்; உனக்கு மேற்படிப்பு படிக்க சலுகை உண்டு' என்று, மதத்தின் பேரில் பிரிவினையை ஏற்படுத்துவதற்கு பெயர் தான், மதச்சார்பின்மையா? மாற்று மதத்தை சேர்ந்த மாணவி வசதி படைத்தவராக இருந்தாலும், அவருக்கு மேற்படிப்பு படிக்க பண உதவி உண்டு என்பதும், வறிய குடும்பத்தை சேர்ந்தவராக இருந்தாலும், ஹிந்து என்பதற்காக அந்த வாய்ப்பு புறக்கணிக்கப்படுவதற்கு பெயர் தான் சமூகநீதியா? மதச்சார்பின்மை என்ற பெயரில், பொங்கல் பண்டிகையை கொண்டாடாத மாற்று மதத்தை சேர்ந்தவர்களுக்கும் அரசு பொங்கல் பரிசு தொகுப்பு கொடுக்கும்போது, கல்விக் கூடங்களில் மட்டும் ஏன் இந்த பாகுபாடு? முதல்வர் பதில் அளிப்பாரா?

விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்!

கே.சண்முகசுந்தரம், லட்சுமிபுரம், பொள்ளாச்சியில் இருந்து எழுதுகிறார்: இந்தியாவிலேயே மூன்றாவது பெரிய நகரமாக சென்னை விளங்கி வரும் நிலையில், 96 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட மீனம்பாக்கம் விமான நிலையம், மாநிலத்தின் விமான சேவையை பூர்த்தி செய்யும் அளவில் இல்லை.காரணம், இவ்விமான நிலையம், 'பாரலல் ரன்வே'க்கள் கொண்ட விமான நிலையமாக இல்லாமல், 'கிராஸ் ரன்வே' விமான நிலையமாக இருப்பது தான்! எனவே, சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்! தற்போது, பரந்துார் விமான நிலைய முன்னெடுப்புகளை அரசு கைவிட்டுள்ள நிலையில், மீனம்பாக்கம் விமான நிலையத்தையே பெரிய அளவில் விரிவாக்கம் செய்வது தமிழக அரசின் பரிசீலனையில் இருப்பதாக, சில செய்திகள் கூறுகின்றன. மீனம்பாக்கம் விமான நிலையம் நகரின் முக்கிய பகுதியில் அமைந்திருப்பதால், விரிவாக்க செலவீனமும், நிலம் கையகப்படுத்தும்போது இழப்பீடுகளும் அதிகமாகலாம். அதேபோல், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியிலோ அல்லது செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் பகுதியிலோ இரண்டாவது விமான நிலையம் அமைக்க, தமிழக அரசு பரிசீலித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. எதைச் செய்தாலும் முதல்வர் நேரடியாக தலையிட்டு, மத்திய அரசின் துணையுடன் விரைவாக செய்ய வேண்டும். ஏனெனில், இப்போது துவங்கினால் தான், குறைந்தது ஏழெட்டு ஆண்டுகளுக்குள் பணிகளை முடிக்க முடியும். மேலும், தொழில் வளர்ச்சியில் விரைந்து முன்னேறி வரும் ஓசூர் பகுதியில் விமான நிலையம் அமைந்தால், அது தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கும், வேலைவாய்ப்பிற்கும் பெருந்துணையாக இருக்கும். ஓசூரையும், அரசு பரி சீலனை செய்யலாம்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Anantharaman Srinivasan
செப் 14, 2026 21:07

நீ ஹிந்து உனக்கு இந்த சலுகைகள் இல்லை நீ முஸ்லிம் உனக்கு மேற்படிப்பு படிக்க சலுகை உண்டு இதென்ன ஓரவஞ்சனை. இது மாற்றமா அல்லது இந்துக்களை மட்டம் தட்டும் திட்டமா..? தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தல் வாக்காளர்கள் சிந்திக்க.


Anantharaman Srinivasan
செப் 14, 2026 20:59

தமிழக வெற்றிக் கழக அரசு பதவி ஏற்றவுடன், 717 மதுக்கடைகளை மூடியதாக செய்தி. ஸ்ரீதேவி நீ counter check செய்தாயா..?