வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஸ்டாலின் அன்று சொன்னதையே இன்று கிளிப்பிள்ளை போல ஒப்பிக்கிறார் அன்புமணி ஒரு change க்காகவாவது உலகின் மற்ற நாடுகள், லண்டனோ, ஜப்பானோ உவமைக்கு எடுத்துக்கொள்ளக்கபோடாதா?
ஆர்.தர்மலிங்கம், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'அதிகாரத்தை தாருங்கள். தமிழகத்தை சிங்கப்பூருக்கு நிகராக மாற்றுகிறோம். இங்குள்ள பிரச்னைகள் என்னவென்று தெரியும். அதற்கான தீர்வும் எங்களால் காண முடியும். சமூக நீதியை நிலைநாட்ட வாய்ப்பு தாருங்கள். வருங்காலம் நம் காலம். எவர் பின்னாலும் செல்லாதீர்கள். என் பின்னால் வாருங்கள். உங்களுக்காக வாழ்கிறேன். தமிழகத்தை நாம் ஆள வேண்டிய காலம் வந்து விட்டது' என்று, மாமல்லபுரத்தில் நடந்த சித்திரை முழுநிலவு மாநாட்டில் முழங்கியுள்ளார், பா.ம.க., தலைவர் அன்புமணி.அதேவேகத்தில் சென்னை திரும்பியவர், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, பொன்னாடை போர்த்திவிட்டு வந்துள்ளார்.தி.மு.க.,வுடன் கூட்டணிக்கு அச்சாரம் போடும் அன்புமணி, 'தமிழகத்தை சிங்கப்பூராக மாற்றுவேன்' என்று கூறுவது எல்லாம் அரசியலுக்கு பேசப்படும் வெற்று பேச்சு!இதுபோன்று தான், 1996 சட்டசபை தேர்தலில், 'சென்னையை சிங்கப்பூராக மாற்றுவேன்' என்று வீர முழக்கம் இட்டார், இன்றைய முதல்வரும், அன்றைய இளைஞரணி தலைவருமான ஸ்டாலின். தி.மு.க., ஆட்சியை கைப்பற்றி, சென்னை மேயராக ஸ்டாலின் பதவி ஏற்றதும், அதுவரை துப்புரவு தொழிலாளர்கள் மாட்டு வண்டியில் குப்பையை அள்ளிச் சென்றதற்கு பதிலாக, 'ஓனிக்ஸ்' நிறுவனம் லாரிகளில் குப்பையை அள்ளிச் செல்ல துவங்கியது.இதைத் தவிர சென்னையில் எந்த மாற்றமும் இல்லை; ஆனால், சென்னை மேயராக இருந்த ஸ்டாலின் மட்டும் தமிழக முதல்வர் ஆகிவிட்டார். சென்னையையே சிங்கப்பூராக மாற்ற முடியாதவர்களுடன் கூட்டணி வைத்து, தமிழகத்தை சிங்கப்பூராக மாற்றிவிட முடியுமா என்ன?அன்புமணியின் கைகளுக்கு அதிகாரம் வரவேண்டுமென்றால், தேர்தலில் பா.ம.க., தனித்து நின்றல்லவா வெற்றி பெற வேண்டும்!வாரிய தலைவர் பதவி கூட கொடுக்க முன்வராத தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்து, தமிழகத்தை சிங்கப்பூராக மாற்றப் போகிறாராம்!'கேப்பையில் நெய் வடிகிறது' என்று அன்புமணி சொன்னால், கேட்பவர்கள் என்ன கேணையர்களா? வேடதாரிகளை கண்டுகொள்ளுங்கள்!
எஸ்.ஆர்.ரத்தினம்,
செங்கல்பட்டிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பாகிஸ்தான் ஜனநாயக
நாடு அல்ல; அது, பயங்கரவாதிகளை உற்பத்தி செய்யும் நாடு என்பது உலகமே அறிந்த
விஷயம். தன் நாட்டு மக்கள் மீது அக்கறையின்றி, பயங்கரவாதிகளை பாதுகாக்க நம் மீது போரை திணிக்கிறது, பாகிஸ்தான். நாட்டை பாதுகாக்க, கற்பனை செய்ய முடியாத அளவு தியாகங்களை செய்து வருகிறது, நம் ராணுவம். அதேநேரம், தமிழகத்தின் அரசியலோ மிகவும் தரங்கெட்ட நிலையில் உள்ளது. மேலோட்டமாக
பார்த்தால், தமிழக அரசியல்வாதிகள் அனைவரும் தேசத்தின் பக்கம் நிற்பது போல்
தோன்றினாலும், உணர்வுப்பூர்வமாக நாட்டின் பக்கம் நிற்கவில்லை. ராணுவத்தை
இயக்குவது மத்திய அரசுதான் என்று தெரிந்தும், மத்திய அரசுக்கு ஆதரவு என்று
பேசாமல், ராணுவத்திற்கு ஆதரவு என்று பேசுகின்றனர். ஏதோ பாகிஸ்தான் போல்,
இங்கும் ராணுவம் தன்னிச்சையாக முடிவு செய்து, நடவடிக்கை எடுப்பது போல் ஒரு
விஷ கருத்தை பரப்புகின்றனர். பயங்கரவாத தாக்குதலை
நியாயப்படுத்தும் வகையில், 'அது மத்திய அரசுக்கான செய்தி' என்றும்,
'பயங்கரவாதிகள் தங்கள் கருத்தை மோடிக்கு சொல்லி இருக்கின்றனர்' என்றும்,
அருவருப்பான தேச விரோத கருத்துக்களை பேசி வருகின்றனர்.மேலும்
சிலர், 'போர் வேண்டாம்' என்றும், 'போரில் பாகிஸ்தானில் உள்ள அப்பாவி மக்கள்
பாதிக்கப்படுவர்' என்றும், தங்களின் போலி இரக்க குணத்தை காட்டிஉள்ளனர். இத்தகைய இரக்க சிந்தனையாளர்கள் தான், கடந்த காலங்களில் இலங்கை மீது இந்தியா போர் தொடுக்க வேண்டும் என்று வியாக்கியானம் செய்தவர்கள்.'பாகிஸ்தான் சிறிய நாடு என்பதால், போர் செய்கின்றனர். சீனாவுடன் ஏன் போர் செய்யவில்லை' என்று மேதாவித்தனமாக கேள்வி கேட்கின்றனர். சீனாவா பயங்கரவாத செயல்களை செய்தது?இன்று பயங்கரவாதத்தை கண்டிப்பதுபோல் நடிக்கும் இவர்கள் தான், முன்னாள் பிரதமர் ராஜிவை கொன்றவர்களை கட்டி அணைத்துக் கொண்டவர்கள்! கோவையில்
குண்டு வைத்து அப்பாவி பொது மக்கள், 56 பேரை கொன்ற பயங்கரவாதியின் மரண
ஊர்வலத்தில் பங்கேற்று, கண்ணீர் அஞ்சலி செலுத்தி, பாசத்தை காட்டியவர்கள். ஓட்டுக்காவும், பதவிக்காகவும் நாடு குறித்து கவலைப்படாத இந்த போலி அரசியல்வாதிகளை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.பயங்கரவாதத்தை
எதிர்ப்போர் பயங்கரவாதிகளை தான் முதலில் எதிர்க்க வேண்டும். அதைச் செய்யாத
இவர்களை, தமிழகத்தின் அரசியலை தீர்மானிக்க அனுமதிப்பது தமிழகத்திற்கு
மட்டுமல்ல; இந்தியாவின் எதிர்காலத்திற்கே ஆபத்து! பாடம் கற்பிக்க வேண்டும் !
வெ.சீனிவாசன், திருச்சியிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மாலத்தீவுக்கு நம் நாடு பல உதவிகளை செய்திருந்த போதிலும், அந்நாடு, பாகிஸ்தான் மற்றும் சீனா ஆதரவு நிலைப்பாட்டை எடுத்ததுடன், செய்நன்றி மறந்து, நமக்கெதிராக பேசி வந்தது. பொறுமை இழந்த நம்மவர்கள், மாலத்தீவுக்கு சுற்றுலா செல்வதை தவிர்த்தனர்.இதனால், அந்நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது; தற்போது மாலத்தீவு அரசு, மறுபடியும் நம்மை தாஜா செய்ய ஆரம்பித்துள்ளது.இந்நிலையில், சமீபத்தில், காஷ்மீரில் சுற்றுலா பயணியர் மீது நடத்தப்பட்ட தாக்குதலை தொடர்ந்து, 'ஆப்பரேஷன் சிந்துார்' எனும் பெயரில், பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த பல பயங்கரவாத அமைப்புகளின் கட்டமைப்புகளை தாக்கி அழித்தது, நம் நாடு. இதற்கு, பாகிஸ்தானிற்கு கண்டனம் தெரிவிப்பதற்கு பதிலாக, நம் நாட்டிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தன, அஜர்பைஜான், துருக்கி போன்ற இஸ்லாமிய நாடுகள். பாகிஸ்தானுக்கு மட்டுமின்றி, நம் உதவியால் உருவான பங்களாதேஷுக்கும் ட்ரோன்கள் மற்றும் ராணுவ தளவாடங்களை கொடுத்து வருகிறது, துருக்கி. துருக்கி, அஜர்பைஜான் நாடுகளின் பொருளாதாரத்தில் பெரும் பங்கு வகிப்பது, சுற்றுலாத் துறையே! நம் நாட்டினர் அதிக அளவில் இந்நாடுகளுக்கு சுற்றுலா சென்று வருகின்றனர்.மாலத்தீவிற்கு பாடம் கற்பித்ததைப் போல், இந்த நாடுகளுக்கும் சுற்றுலா பயணம் செல்வதை தவிர்த்து, அவர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும்!அப்போதுதான், நமக்கு எதிரான நிலைபாட்டை எடுக்க துணிய மாட்டார்கள்!
ஸ்டாலின் அன்று சொன்னதையே இன்று கிளிப்பிள்ளை போல ஒப்பிக்கிறார் அன்புமணி ஒரு change க்காகவாவது உலகின் மற்ற நாடுகள், லண்டனோ, ஜப்பானோ உவமைக்கு எடுத்துக்கொள்ளக்கபோடாதா?