உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / அடுத்த விஞ்ஞானி ரெடி!

அடுத்த விஞ்ஞானி ரெடி!

ஆர்.சத்தியவேந்தன், துாத்துக்குடியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நாம் எத்தனையோ அறிஞர்களையும், அறிவாளிகளையும் பார்த்து இருப்போம்; கேள்விப்பட்டு இருப்போம். ஆனால், திராவிட மாடல் அரசின் சட்டத்துறை அமைச்சர் ரகுபதியை போன்ற ஒரு அறிவாளியை, விஞ்ஞானியை இதுவரை கண்டதும் இல்லை; கேள்விப்பட்டதும் இல்லை. வேங்கைவயலில், குடிநீர் தொட்டியில் மனித மலம் கலந்த விவகாரம் நடந்து, ஒன்றரை ஆண்டுகள் ஆகி விட்டன. அதைச் செய்த மாயாவி யார் என்பதை சிரசாசனம் செய்தும், தலையால் தண்ணீர் குடித்தும், திராவிட மாடல் அரசால் கண்டுபிடிக்க முடியவில்லை.இந்நிலையில், 'வேங்கைவயல் வழக்கில், டி.என்.ஏ., பரிசோதனையில் எந்தவிதமான முடிவும் எட்டப்படவில்லை. அதனால், அந்த ஊரில் உள்ள அனைவருக்குமே, டி.என்.ஏ., பரிசோதனை செய்வது தான், அடுத்த கட்ட நடவடிக்கை' என பேட்டி அளித்துள்ளார், தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி. நமக்கு தெரிந்த வரை, 'குழந்தை யாருடையது' என்று கண்டுபிடிப்பதற்கு தான், டி.என்.ஏ., பரிசோதனை செய்வர் என்று கேள்விப்பட்டு உள்ளோம். குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்துக்கும், அதே அணுகுமுறை தான் என்பது அதிர்ச்சியும், ஆச்சரியமும் அளிப்பதாக உள்ளது.ஒரு கொலை அல்லது கொள்ளையை துப்பறிவோர், தாங்கள் சந்தேகிக்கும் பட்டியலில் உள்ளவர்கள் ஒவ்வொருவராக கழித்து, கடைசியில் எஞ்சியுள்ள சிலரை வைத்து, தங்கள் சந்தேகத்தை நிவர்த்தி செய்து, கொலையாளியை அல்லது குற்றவாளியை கண்டுபிடிப்பது வழக்கம்.ஆனால், நம் சட்ட மேதாவி அமைச்சரோ, 'ஊரில் உள்ள அனைவருக்குமே, டி.என்.ஏ., பரிசோதனை செய்வது தான் அடுத்த கட்ட நடவடிக்கை' என்கிறார்.இதிலும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், சுத்துபட்டில் உள்ள கிராம மக்கள் அனைவரையும், டி.என்.ஏ., பரிசோதனைக்கு உட்படுத்துவாரோ!ஆக, ராமஜெயம், த.கிருஷ்ணன், ஜே.பாலன் கொலை வழக்குகள், ஜெயலலிதா மர்ம மரண வழக்கு, கோடநாடு கொலை - கொள்ளை வழக்குகள் போல, இந்த வேங்கைவயல் வழக்கும், 'பெர்முடா முக்கோண' மர்மம் போல, கண்டுபிடிக்க முடியாத வழக்காக பரிமளிக்கப் போவது நிதர்சனம்.எது எப்படியோ... அமைச்சர் ரகுபதியின் அறிவாற்றல், நம்மை அதிர வைப்பது மட்டும் நிஜம்!

கடவுள் மன்னிக்க மாட்டார்!

அ.யாழினி பர்வதம், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பாகிஸ்தானிடம் சிக்கி, சின்னாபின்னமாகி தவித்த வங்கதேசத்தை காத்து, தனி நாடாக்கி வாழ வைத்த நாடு இந்தியா.இன்றைய வங்கதேசத்திற்காக, 1971ல் பாகிஸ்தானுடன் நடந்த போரில் இந்திய வீரர்கள், 3,000 பேர் உயிர் இழந்தனர்; 12,000 பேர் காயம் அடைந்தனர். போர் துவங்கிய, 13 நாட்களுக்குள், இந்திய ராணுவத்தின் அதிரடி தாக்குதலை சமாளிக்க முடியாமல், அப்போதைய பாகிஸ்தான் ராணுவ ஜெனரல் அமீர் அப்துல்லா கான் நியாஸி, 93,000 வீரர்களோடு, டிசம்பர் 16ல் இந்திய ராணுவத்திடம் சரணடைந்தார். வங்கதேசத்திற்காக, பாகிஸ்தானுடன் போரிட்டு ஜெயித்த இந்த நாளை, வெற்றி தினமாக நாம் கொண்டாடுகிறோம். அதையொட்டி, டிச., 16ல் பிரதமர் மோடி இந்திய வீரர்களுக்கு மரியாதை செய்து, சமூக வலைதளத்தில் பதிவிட்டதை, வங்கதேச இடைக்கால அரசின் சட்ட ஆலோசகர் ஆசிப் ரஸ்ருல் கண்டித்து, '1971ல் நடைபெற்றது வங்கதேச விடுதலைப் போர்.'அதில், இந்தியா வெறும் கூட்டாளியாக இருந்ததே தவிர, வேறு எந்த பங்கும் இல்லை' என்று அலட்சியமாக, நன்றி கெட்ட தனமாக, சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். மதவாத அடிப்படையில் போராட்டம் நடத்துவோரும், 'வங்கதேச சுதந்திரத்தை தன் சாதனையாக இந்தியா உரிமை கொண்டாடுவது, வங்கதேச இறையாண்மைக்கு எதிரான அச்சுறுத்தலாகும். இந்தியாவின் அச்சுறுத்தலுக்கு எதிராக அவசியம் போராட வேண்டும்' என்று விஷமத்தனமாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். நண்டு கொழுத்தால் வலையில் தங்காதாம்... பாகிஸ்தான் ராணுவத்திடம் தோற்று, பயந்தோடியவர்கள் வங்கதேச விடுதலைப் போராட்டக்காரர்கள்.அன்று, இந்தியா மட்டும் காப்பாற்றி இருக்காவிட்டால், வங்கதேசம் பாகிஸ்தானிடம் கொத்தடிமையாக சீரழிந்திருக்கும்!காலம் மாறலாம்; தலைமுறை மாறலாம். ஆனால், வரலாறு மாறாது; அதன் உண்மைகளையும் மறைக்க முடியாது. 'எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை; செய்நன்றி கொன்ற மகற்கு' திருவள்ளுவர் சொன்ன இக்குறள், வங்கதேசத்தினருக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால், கடவுளுக்கு தெரியும் என்பதை, காலம் அவர்களுக்கு பாடம் கற்பிக்கும் போது புரிந்து கொள்வர்!

நீதிமன்றம் செயல்படுத்துமா?

கே.மணிவண்ணன், கோவையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு, உணவுப் பொருட்கள் வழங்கும் வழக்கில், 'எத்தனை நாள் இலவசத்தை தருவீர்கள்... வேலைவாய்ப்பை உருவாக்க மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும்' என, சம்மட்டி அடியாய் கேள்வி கேட்டு உள்ளது, உச்ச நீதிமன்றம். மாநில அரசுகள் ஓட்டு வங்கியை தக்க வைக்க, இலவசத்தை கொடுத்து, மக்களை தொடர்ந்து பிச்சைக்காரர்களாக ஆக்கி வருகின்றன; இதில், எந்த அரசியல் கட்சியும் விதிவிலக்கல்ல. தமிழகத்தில், 1967ல், 'மூன்று படி லட்சியம்; ஒரு படி நிச்சயம்' என்று தொடர்ந்த இலவசம், இன்று ஆலமரமாய் நாடெங்கும் வியாபித்திருப்பது, பெரும் வேதனைக்கு உரியது. மக்களுக்கு இலவசத்தைக் கொடுத்து, பின், வரி என்ற பெயரில் அவர்கள் தலையிலேயே கை வைத்து, பல இன்னல்களுக்கு ஆளாக்குகின்றனர்; இதை, மக்களும் உணர்ந்ததாக தெரியவில்லை.எதையாவது இலவசமாக அறிவிக்க மாட்டார்களா என, எதிர்பார்க்கும் அளவுக்கு மக்களை பழக்கப்படுத்தி விட்டனர், அரசியல்வாதிகள். இந்த விஷயத்தில், 'பூனைக்கு யார் மணி கட்டுவது' என்று எதிர்பார்த்திருந்த நிலையில், உச்ச நீதிமன்றம் இப்படி ஒரு கேள்வியைக் கேட்டுள்ளது. இத்துடன் நிறுத்தி விடாமல், நாட்டின் சாபக்கேடாக இருக்கும் இலவசம் என்ற பூனைக்கு, நிரந்தரமாக மணி கட்ட வேண்டும். அப்போது தான், நாட்டின் வளர்ச்சியை முன்னிறுத்தும் நேர்மையாளர்கள் கையில் நாடு செல்லும்; வேலை வாய்ப்புகளும் பெருகும்!நீதிமன்றங்கள் இதை செயல்படுத்துமா?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

s chandrasekar
டிச 24, 2024 19:14

திசையன்விளை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரணம் இதுவரை ஒன்றும் நடக்கவில்லை.


Velusamy Dhanaraju
டிச 24, 2024 06:43

தமிழ் நாட்டில் உள்ள அனைவருக்கும் D N எ டெஸ்ட் எடுத்தால் மட்டுமே கண்டு பிடிக்க முடியும் பாவம் அந்த சம்பவத்திற்கு பிறகு பிறந்த குழந்தைகளுக்கு மட்டும் வேண்டாம்


ponssasi
டிச 23, 2024 16:47

திராவிட மாடல் அரசில் மறைந்த அமைச்சர் ஆற்காடு வீராசாமிபோல துணிவு கொண்டவர் யாருமில்லை, கருணாநிதி எதிரிலேயே தேர்தலில் திமுக தோற்கும் என்றால் அது என் எனது மிசாரத்துறைதான் காரணமாக இருக்கும் என பொது மேடையில் சொன்னவர், அதுபோலத்தான் நடந்தது. இன்று இருக்கும் அமைச்சர்கள் பேச்சு பொதுமக்களிடம் சிரிப்பாய் சிரிக்கிறது. தமிழர்களை சிரிப்புமூட்டுவதில் ஒருவரை ஒருவர் சளைத்தவரல்லர் என போட்டிபோட்டு பேசுகின்றனர். அமைச்சர்களை மாற்றவேண்டும் இருப்பதில் பெரும்பாலான அமைசர்கள் MGR மற்றும் ஜெயலலிதாவுடன் இருந்து கருணாநிதி மற்றும் ஸ்டாலினை வச்சு செய்தவர்கள் தான். பொதுமக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை ஸ்டாலின் உணர்ந்துகொள்ளவேண்டும்


Alagusundram Kulasekaran
டிச 23, 2024 13:01

இட ஒதுக்கீடுகள் எடுத்தால் சகலரும் சமம் என்ற நிலை வேண்டும் திறமை தான் முக்கியம் இதுவரை கொடுத்த இட ஒதுக்கீடுகள் போதும் அதனை பெற்றவர்கள் 25 முதல் வருடங்கள் முன்னேற்றம் அடையாமல் இருக்க வாய்ப்பில்லை ஏற்ற தாழ்வுகளை அகற்ற இது ஒன்று போதும் வேலைவாய்ப்பில் என்ன ஜாதி என்பதனை நீக்க வேண்டும்


Alagusundram Kulasekaran
டிச 23, 2024 12:56

இலவச பொங்கல் பொருட்களுக்கு ஆசையை விதைக்கும் திராவிட மாடல் இலவச பேருந்து பயணம் கொடுத்து அடுத்த ஆட்சியை தக்கவைக்க ஆயிரம் ரூபாய் கொடுத்து பச்சை பிள்ளைக்கு மிட்டாய் கொடுத்து கதையா பால் மின்சாரம் பத்திரப்பதிவு வீடு வரி உயர்வு தண்ணீர் வரி உயர்வு என கிழித்து தொங்க விட போகிறது ஒரு ஆட்டோ ஓட்டுனர் நாங்கள் என்ன பிச்சைகார்களா விலைவாசி குறைத்தால் நாங்களே வாங்கி கொள்ளுவோம் என்று நெத்தயடியாக கூறினார் அவருடைய புத்திசாலி தனம் எனக்கு கூட இல்லை நமது இல்லாமையை அவர்கள் பயன்படுத்தி கொள்ளுகிறார்கள்


Krishnamurthy Venkatesan
டிச 23, 2024 11:48

அண்டை நாடுகளுக்கு செய்யும் இலவச பண உதவி, பொருள் உதவி, இலவச ஆம்புலன்ஸ், இலவச பேருந்து கொடுப்பது அனைத்தையும் இந்தியா நிறுத்தி நன்றி கெட்டவர்கள்.


S Ramkumar
டிச 23, 2024 10:22

அப்பா தர்மராஜ் ஒத்து கொண்டது ஒரு நல்ல விஷயம்.


chennai sivakumar
டிச 23, 2024 08:30

வங்க தேச விடுதலையை பற்றி யூ tube இல் ஒரு குறும்படம் உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் பார்க்கலாம்.


Indhuindian
டிச 23, 2024 07:44

விஜய் ஆண்டனி படத்துலே அவரோட அப்பாவை கண்டுபிடிக்க டாக்டரான அவரு அமெரிக்காவுலேந்து அந்த இங்கே ஒரு கிளினிக்கை தொறந்து அந்த வூர்ல இருக்கறவங்க எல்லாருக்கும் DNA டெஸ்ட் பண்ணலயா அந்த மாதிரிதான் இதுவும் எப்படியும் அந்த வூர்ல இருக்கறவங்க அப்புறம் அந்த வூரு வஷியா போனவங்க, அந்த வூருக்கு வந்த விருந்தாளிங்க, அரசியல்வாதிகள், அதிகாரிகள் அப்படீன்னு அந்த வூர்பாக்கம் போனவங்க அப்பிடி இப்படின்னு இஷுத்து இன்னும் ஒரு மாமாங்கத்துக்கு வூருகா போட்டுடுவாங்க


Dharmavaan
டிச 23, 2024 07:39

எந்த உதவியும் செய்யக்கூடாது அழியட்டும் என்று விட வேண்டும். மினாரிட்டி சலுகைகள் முழுதும் நிறுத்தப்பட வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை