உள்ளூர் செய்திகள்

 என்னே ஜனநாயகம்!

எஸ்.சுப்புராமன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர சீர்திருத்த பணிக்கு எதிராக, தமிழகம் முழுதும் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசிய அக்கட்சியின் தேர்தல் பிரிவு பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா, 'சட்டசபை கூட்டம் நடக்கும்போது, வாக்காளர் பட்டியல் திருத்த பணிக்கு எதிரான தீர்மானத்தை, தி.மு.க., அரசு கொண்டுவரவில்லை. அனைத்து கட்சி கூட்டத்தை அரசு சார்பாக நடத்தாமல், தி.மு.க., சார்பில் நடத்தினர். உண்மையான வெளிப்படையான தேர்தல் நடந்தால், த.வெ.க., வெற்றி பெறும்' என்று பேசியுள்ளார். முதலில், த.வெ.க., எத்தனை தேர்தல்களை சந்தித்து, அதன் வெளிப்படை தன்மையை பரிசோதித்துள்ளது? தரையிலேயே இன்னும் கால் ஊன்றாத குழந்தை ஒன்று, ஆகாசத்தில் தான் கட்டிய கோட்டையில் பொத்தல் என்றதாம்! அதுபோல், இன்னும் ஒரு தேர்தலைக் கூட சந்திக்காத த.வெ.க., தேர்தல் கமிஷனை குறை கூறுகிறது. உண்மையான தேர்தல் எப்படி நடக்க வேண்டும் என்று ஆதவ் அர்ஜுனா எதிர்பார்க்கிறார்? ஓட்டுப்பதிவு நடைபெறும் ஓட்டுச்சாவடிகளில், ஆதவ் அர்ஜுனா அல்லது அவரது பிரதிநிதிகளின் கைகளில், ஓட்டு மிஷினை ஒப்படைத்து, ஓட்டளிப்போர் எந்த சின்னத்தில் ஓட்டளிக்கின்றனர் என்பதை கண்காணிக்கச் சொன்னால் தான், அது உண்மையான, வெளிப்படையான தேர்தலா? கடந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வின் தேர்தல் வியூக வகுப்பாளராக இருந்தவர் தானே ஆதவ்... அப்போது தேர்தல் உண்மையாக, வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறவில்லையா? ஓட்டு திருட்டு செய்து தான் தி.மு.க., வெற்றி பெற்றதா? ஓட்டுசீட்டு முறையில் தேர்தல் நடந்தபோது, அரசியல் கட்சிகள் ரவுடிகளை அனுப்பி, தேர்தல் அலுவலர்களை மிரட்டி, ஓட்டு சீட்டை மொத்தமாக கைப்பற்றி, தங்கள் சின்னத்தில் முத்திரை குத்தி, ஜனநாயகத்தை கேலி செய்தன. இந்த அராஜகத்தையும், முறைகேட்டையும், இறந்து போனவர்கள் உயிர்த்தெழுந்து வந்து ஓட்டு போடுவதையும் தடுக்க கண்டுபிடிக்கப்பட்டது தான் ஓட்டு மிஷின் என்பதை மறந்து, தேர்தல் கமிஷன் மீது சேற்றை வாரி இறைக்கின்றனர், சில அரசியல்வாதிகள். என்னே ஜனநாயகம்! lll தீதும் நன்றும் பிறர் தர வாரா! அ.அப்பர்சுந்தரம், மயிலாடுதுறையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தீதும் நன்றும் பிறர் தர வாரா' என்பது ஆன்றோர் வாக்கு! திருப்பத்துார் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுகாவில், சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராக பணிபுரிபவர், வள்ளியம்மாள். அவரிடம் விவசாயி ஒருவர், தன் தாய் இறந்ததாக கூறி, தமிழக அரசின் ஈமச்சடங்கு நிதியான, 22,500 ரூபாயை வழங்குமாறு கேட்டுள்ளார். திட்டத்தின் கீழ் பணத்தை விடுவிக்க, 2,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார், வள்ளியம்மாள். பணம் கொடுக்க விரும்பாத விவசாயி, லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளிக்கவே, அவர்கள் அறிவுரையின்படி லஞ்சப் பணத்தை வள்ளியம்மாளிடம் கொடுத்த போது, லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்துள்ளனர். இதை சற்றும் எதிர்பாராத வள்ளியம்மாள் மயக்கமடையவே, அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கே, தன்னை கொன்று விடுங்கள் என்றும், விட்டு விடுங்கள் என்றும் கதறி அழுதுள்ளார், வள்ளியம்மாள். தாசில்தாராக கம்பீரமாக வலம் வந்த அவர், தன் பேராசை காரணமாக, இன்று அழுது கெஞ்சும் அவல நிலைக்கு ஆளாகியுள்ளார். தாங்கள் செய்யும் பணிக்கு அரசிடம் இருந்து ஊதியம் பெற்றும், அடுத்தவர் பணத்திற்கு பேராசைப்படும் இதுபோன்ற லஞ்சப் பேய்களின் கண்ணீருக்கு என்ன மதிப்பு இருக்க முடியும்? இல்லை... அவர்களை பார்த்து இரக்கப்படத் தான் தோன்றுமா? நேர்மை ஒன்றே எக்காலத்திலும் கவுரவத்தையும், நிமிர்வையும் கொடுக்கும் என்பதை லஞ்சம் வாங்க நினைப்போர் மனதில் கொண்டால், வள்ளியம்மாள் போன்று அழுது புரளும் அவல நிலை ஏற்படாது! lll சிரமத்தை ஏற்படுத்தலாமா? க.ஜான் வெஸ்லி, கோவையிலிருந்து எழுதுகிறார்: மாநில அரசு பணியிலிருந்து, 15 முதல் 25 ஆண்டுகளுக்கு முன் பணி ஓய்வு பெற்றவர்களுக்கு, திடீரென்று, அக்டோபர் மாத பென்ஷன் தொகையில் பாதியை குறைத்து வழங்கப்பட்டுள்ளது. கோவை மாவட்ட கருவூலத்தில் நடைபெற்ற தணிக்கையின் போது, 6வது ஊதியக் குழுவில் வழங்கப்பட்ட, 'கிரேடு பே' அதிகமாக வழங்கப்பட்டதாக கூறி, எந்தவித முன்னறிவிப்புமின்றி, ஊதியத்தில் பாதியை பிடித்தம் செய்துள்ளனர். ஏற்கனவே, வங்கி மற்றும் இதர கடன்கள் பெற்றுள்ளதால், இ.எம்.ஐ., செலுத்துவதிலும், குடும்பச் செலவும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பென்ஷனில் பாதியை பிடித்தம் செய்தால் எப்படி ஜீவனம் செய்வது? ஒவ்வொரு முறையும் அரசு மேற்கொள்ளும் மாறுபட்ட உத்தரவின் காரணமாக, 20 ஆண்டுகளுக்கு பின், முதிய வயதில் கூட சிரமத்தை அனுபவிக்க வேண்டியுள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால், 20 ஆண்டுகளுக்கு முன் பணிபுரிந்த அலுவலகங்களுக்கு சென்று, ஏற்கனவே வழங்கப்பட்ட ஓய்வூதியத்தில் செய்யப்பட்ட திருத்தங்களுக்கான திட்டமான, 'ரிவைஸ்டு பென்ஷன் புரபோசல்' தயார் செய்து, கணக்காயர் ஜெனரல் அலுவலகத்திற்கு அனுப்பி, புதிதாக பென்ஷன் நிர்ணயம் செய்ய வேண்டும். இந்த வயதான காலத்தில் அலுவலகப்படி ஏறி இறங்கி, புரபோசல் பெறுவதற்குள் ஆயுள் முடிந்து விடும். வயதான காலத்தில் நிம்மதியாக வாழ விடாமல், ஓய்வூதியம் பெறும் முதியோருக்கு அரசு சிரமத்தை ஏற்படுத்தலாமா? lll இனிஷியல் இடம் பெறுமா? பி.ஆர்.சீனிவாசன், சென்னை-யிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: வரும் சட்டசபை தேர்தலுக்கு முன், அனைத்து வாக்காளர்களுக்கும் புதிய வாக்காளர் அடையாளச்சீட்டு அச்சிடப்பட்டு வழங்கப்பட்டுவிடும். அதேநேரம், தற்போது நம்மிடம் இருக்கும் வாக்காளர் அடையாள அட்டையில், வாக்காளர்களின் பெயர்களுக்கான இனிஷியல் அச்சிடப்படாமல் பெயர் மட்டுமே அச்சிடப்பட்டுள்ளது. அதற்கு கீழ் தகப்பனார் பெயரும் அச்சிடப்பட்டுள்ளது. புதிதாக வழங்க இருக்கும் கார்டில், இனிஷியலுடன் சேர்த்து வாக்காளர் பெயரும், அதற்கு கீழ் தகப்பனார் பெயரையும் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அச்சிட வேண்டும். முக்கியமான ஆவணங்களில் நாம் கையெழுத்திடும் போது இனிஷியலோடு, பெயரையும் சேர்த்துத்தான் கையொப்பம் இடுகிறோம். இன்னும் சொல்லப்போனால், பள்ளி நாட்களிலிருந்து, பணியில் சேர்ந்து ஓய்வு பெறும் நாள் வரை, நம் பெயரோடு, நம் இனிஷியலும் சேர்ந்தே தான் இருக்கும். எனவே, வாக்காளர் அடையாள அட்டையில், இனிஷியலோடு பெயரை அச்சிட அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை வைக்க வேண்டும்! lll


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

arulmurugan
நவ 30, 2025 16:11

differential pension order without pay commission recommendation and give TOR for 8th pay commission for escaping from indian act it purly compelsion central govt ,its may be coorrect or not?


D.Ambujavalli
நவ 21, 2025 06:42

சும்மா 2000 ரூபாய் லஞ்சத்துக்கெல்லாம் மயக்கம், மருத்துவமனை, அழுகை என்றெல்லாம் நாடகம் போட்டால் என்ன நடந்துவிடும்? இவர் என்ன அமைச்சரா, கட்சித் தலைவரா, கோடிகளில் லஞ்சம் வாங்கி, நெஞ்சுவலி நாடகம் போட்டால் முதல்வர், துணை முதல்வருடன் பட்டாளம் வந்து விசிட் செய்ய?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை