உள்ளூர் செய்திகள்

எப்போது விடுதலை?

ஏ.அஸ்மாபாக் அன்வர்தீன், ராமநாதபுரத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அமெரிக்கா, துபாய், சவூதி அரேபியா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில், 'லைசன்ஸ்' பெற்று வீட்டில் வளர்க்கப்படும் நாய்கள் தவிர, தெருக்களில் நாய்களை பார்க்க முடியாது. நம் நாட்டிலோ, மனித உயிர்களை காட்டிலும், நாய்களின் உயிருக்கு தான் அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது!சிறுவர் - சிறுமியர் முதல் முதியோர் வரை, ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் நாய் கடியால் பாதிக்கப்படுகின்றனர்; வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன. ஆனாலும், இதுவரை இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காணப்படவில்லை!கடந்த 1990களில் மூன்று மாதத்திற்கு ஒரு முறை நாய்களை பிடித்து கொன்று விடும் வேலையை, உள்ளாட்சி அமைப்புகள் முறையாக செய்தது. இதன் காரணமாக நாய்கள் எண்ணிக்கை கட்டுக்குள் இருந்தன. விலங்குகள் பாதுகாப்பு அமைப்பினரின் எதிர்ப்பு காரணமாக, அத்திட்டம் கைவிடப்படவே, நாய்களுக்கான கருத்தடை திட்டத்தை அரசு கொண்டு வந்தது. இது சரியாக நடைமுறைப்படுத்தப்படாததால், தெருநாய்கள் எண்ணிக்கை கட்டுக்கடங்காத வகையில் பெருகிவிட்டது. இன்னும் ஒரு சில ஆண்டுகளில், மக்கள் தொகையை மிஞ்சும் வகையில் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து விடும். இதைத் தவிர்க்க, தெரு நாய்களை பிடித்து கொல்ல வேண்டும் அல்லது காப்புக் காடுகளில் அவற்றை விட்டுவிட வேண்டும். இல்லையேல், மாட்டு இறைச்சி ஏற்றுமதி செய்வது போல், நாய்களையும், வட கொரியா, தென் கொரியா, சீனா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து அன்னிய செலாவணி ஈட்டலாம்!அரசு இதுகுறித்து யோசிக்க வேண்டும். உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து, பொதுநல வழக்காக கருதி விசாரித்து, அரசுக்கு உத்தரவிட வேண்டும்!  

அர்த்தமற்ற முறையீடு!

டி.ஈஸ்வரன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'ஒருங்கிணைப்பாளராக நியமித்து, ஐந்து ஆண்டுகள் ஆகாமல், என்னை கட்சியை விட்டு நீக்கியது செல்லாது' என்று, தேர்தல் கமிஷனில் முறையிட்டுள்ளார், பன்னீர்செல்வம்.இதைக் கேட்கும் போது சிரிப்புத் தான் வருகிறது!தி.மு.க., நிறுவனர் அண்ணாதுரை, தன் கட்சிக்கு ஏற்படுத்திய சட்ட விதிகளைத் தான், எம்.ஜி.ஆர்., தன் கட்சியின் சட்ட விதியாக பின்பற்றினார். அதன்படி, அ.தி.மு.க., கட்சியின் சட்ட விதிகளை மாற்றவும், திருத்தவும், நீக்கவும் பொது-க்குழுவிற்கு முழு அதிகாரம் உள்ளது. அதேநேரம், பொதுச்செயலரை கட்சியின் பொது உறுப்பினர்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும்; இதை மாற்றவோ, திருத்தவோ கூடாது.இதுதான், அக்கட்சியின் சட்ட விதிமுறை!ஆனால், இந்த விதிமுறையை பின்பற்றி, ஜெயலலிதா பொதுச்செயலராக பதவி ஏற்கவில்லை. விசாலாட்சி நெடுஞ்செழியனை தேர்தல் அதிகாரியாக நியமித்து, அவரிடம் வேட்புமனுவை தாக்கல் செய்து, யாரும் தன்னை எதிர்த்து போட்டியிடாதவாறு பார்த்துக் கொண்டார், ஜெயலலிதா. அதற்கு பிரதிபலனாக, விசாலாட்சி நெடுஞ்செழியனுக்கு, வாரிய தலைவர் பதவியை வழங்கினார். இதேபோன்று தான், சசிகலா, பழனிசாமி போன்றோர், அ.தி.மு.க.,விற்கு பொதுச்செயலராயினர்!பொதுச்செயலர் இல்லாத நேரத்தில், அவரது பணிகளை நிறைவேற்ற, துணை பொதுச்செயலரை நியமிக்க வேண்டும் என்று விதியும் உள்ளது; ஆனால், அப்படி யாரையும் தனக்கு நியமித்துக்கொள்ளவில்லை, ஜெயலலிதா. நானே ராஜா, நானே மந்திரி என செயல்பட்டார். அதேபோன்று, பொதுச்செயலர் நிர்வாக வசதிக்காக பத்துக்கு உட்பட்ட தலைமை கழக நிர்வாகிகளை நியமிக்க வேண்டும் என்று விதியும் உள்ளது. இந்த விதிப்படியா தலைமைக்கழக நிர்வாகிகள் நியமிக்கப்படுகின்றனர்? யார் யார் கட்சி நாளேட்டிற்கு அதிகமாக விளம்பரம் கொடுக்கின்றனரோ, அவர்களை அமைப்பு செயலராக நியமித்தார் ஜெயலலிதா; அதேபோல தான் இப்போது பழனிசாமியும் நியமித்து வருகிறார். இப்படி, கட்சி நிறுவனர் எம்.ஜி.ஆர்., விதித்த விதிமுறைகளை மதிக்காமல், பொதுச்செயலராக ஜெயலலிதா, சசிகலா, எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பதவி ஏற்றதே செல்லாது.இந்நிலையில், ஒருங்கிணைப்பாளராக நியமித்து, ஐந்து ஆண்டுகள் ஆகாமல், தன்னை கட்சியை விட்டு நீக்கியது செல்லாது என்று, பன்னீர்செல்வம் தேர்தல் கமிஷனில் முறையிட்டுள்ளது கேலிக்கூத்தாக உள்ளது. பொதுச்செயலர் பதவியை திருத்தமே செய்யக்கூடாது என்று எம்.ஜி.ஆர்., ஆணித்தரமான விதியை ஏற்படுத்தினார். அதை மீறி ஒருங்கிணைப்பாளர் பதவியை புதிதாக உருவாக்கி, அதை பன்னீர்செல்வத்திற்கு வழங்கியதே அ.தி.மு.க.,வின் சட்ட விதிக்கு புறம்பானது எனும்போது, பன்னீர்செல்வத்தின் முறையீடு அர்த்தமற்றது தானே!  

ஆய்வறிக்கை தயார்!

ஆர்.வேங்கடவன், நெல்லையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மெகல்லன், கொலம்பஸ் மற்றும் வாஸ்கோடகாமா வரிசையில், புதிய கண்டுபிடிப்புக்களை கண்டறிய இறங்கியுள்ளார், முதல்வர் ஸ்டாலின். 'சிந்துவெளி பண்பாட்டின் எழுத்து முறையை, இன்னும் நம்மால் தெளிவாக புரிந்து கொள்ள முடியவில்லை. 100 ஆண்டுகளை கடந்தும், தீர்க்கப்படாத இந்த புதிரை புரிந்து கொள்ள, உலகெங்கும் உள்ள தொல்லியல் ஆய்வாளர்கள், மொழியியல் தமிழ் அறிஞர்கள், கணினி வல்லுனர்கள் உட்பட பலரும் முயற்சித்து வருகின்றனர். சிந்துவெளி எழுத்து முறையை தெளிவாக புரிந்து கொள்ள உதவும் வழி வகையை, தொல்லியல் அறிஞர்கள் ஏற்கும்படி வெளிக்கொணரும் நபர்கள் மற்றும் அமைப்புக்கு, மில்லியன் அமெரிக்க டாலர் பரிசாக வழங்கப்படும்' என்று அறிவித்துஉள்ளார், ஸ்டாலின். பரிசு கொடுக்க தயாராகி விட்டார்... இன்னும் ஒரு வாரம் அல்லது 10 நாட்களில் கழகக் கண்மணிகளுள் ஒருவர், சிந்துவெளிப் பண்பாட்டின் எழுத்து முறையை தெளிவாக கண்டறிந்து விட்டதாக அறிவித்து, 30 பக்கங்களில் ஓர் ஆய்வறிக்கையை வெளியிடுவார்.அந்த ஆய்வறிக்கையில், ஒவ்வொரு பக்கத்திலும் குறைந்தது இரண்டு முதல் ஐந்து இடங்களில், முத்தமிழ் வித்தகர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி என்ற பெயர் பொறிக்கப்பட்டிருக்கும். தொல்லியல் அறிஞர்களும், தங்கள் இரு கண்களையும் மூடி, அந்த அறிக்கையை, 'இதுதான் சிந்துவெளி பண்பாட்டின் எழுத்து முறை' என்று போற்றி புகழ்ந்து பரணி பாடுவர்.ஒரு கரிநாளில், ராகுகாலத்தில் அறிக்கை சமர்ப்பித்த கழகக்கண்மணி, கருப்பு உடை அணிந்து மேடைக்கு வர, திராவிட மாடல் தலைவர் ஸ்டாலின், அவருக்கு கருப்புச் சால்வை போர்த்தி, மில்லியன் டாலர் பரிசு தொகையை ரொக்கமாக வழங்கி, அவரை புளகாங்கிதமடையச் செய்து, தானும் பூரித்து மகிழப் போகிறார் பாருங்கள்!  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 14, 2025 10:11

புட்டுப்புட்டு வைத்துவிட்டார் நெல்லை வேங்கடவன் ....


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 14, 2025 10:08

நாய்கள் மனிதர்களைக் கடிக்கும் சம்பவம் மிகவும் அதிகரித்துக் காணப்பட காரணம் என்ன தெரியுமா ????


Anantharaman Srinivasan
ஜன 14, 2025 23:00

நாய்கள் மனிதர்களைக் கடிக்ககாரணம் என்ன தெரியுமா என்று கேட்டு விட்டு காரணத்தை சொல்லவேயில்லையே..


Dharmavaan
ஜன 14, 2025 07:55

நாய்களை உயிருடன் பிடித்து சீனா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாமே .விளங்கும் ஆர்வலன் இவைகள் எடுத்துப்போய் வளர்க்கட்டும்


J.V. Iyer
ஜன 14, 2025 05:23

விலங்கு ஆர்வலர்கள் தெருவில் சுற்றித்திரியும் நாய்களை வீட்டில் எடுத்து வளர்க்கவேண்டும். அல்லது அவைகளை அப்புறப்படுத்தி போர்க்கிஸ்தானுக்கோ, பங்கடேஷுக்கோ அனுப்பலாம்.


முக்கிய வீடியோ